விதைகளின் கதைகள்
நுண்ணுயிர்ப் பண்பாடடு ஆராய்ச்சிக்கான மதிப்பு, பொறுப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஷாட்ஸ் வஞ்சிக்கப்பட்டாலும், அவர் ஈடுபட்ட ஆராய்ச்சி தடையுறவில்லை. பல்லுயிர்ப் பெருக்கப் பண்பாட்டில் (பயோடைவர்சிட்டி) நுண்ணுயிரிகளும் அடக்கம்தானே! உயிரான வேளாண்மைக்கு உயிரிகளே உயிர் தருகின்றன. சில கணங்களில் வாழ்ந்து சில கணங்களில் மடிந்து மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வாழும் நுண்ணுயிரிகளை மைக்ரோஸ்கோப்பில்தான் பார்க்க முடியும். அது பாக்டீரியாக்களாகவோ, காளான்களாகவோ, பாசிகளாகவோ இருக்கலாம். ஒரு பிடிமண்ணில் ஒரு கோடி நுண்ணுயிரிகள் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு பாதாள அறையில் அடைந்து கொண்டு, மிகவும் துணிச்சலுடன் காசநோய்க் கிருமிகளுடன் வசித்துக் கொண்டு, அதைக் கொல்லும் காளான் நுண்ணுயிரிகளான ஸ்ட்ரப்டோமைசீனைக் கண்டு பிடித்த ஷாட்ஸின் பெயரை என்னிடமுள்ள என்சைக்ளோபீடியா-கலைக்களஞ்சியத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் ஸ்ட்ரப்டோமைசீனுக்கு மட்டும் பொருள் விளக்கம் காணப்பட்டது. நோபல் பரிசை இவருடைய வழிகாட்டி தட்டிப்பறித்தாரோ, மருத்துவ நிறுவனங்களுக்கு விற்றாரோ எதுவாயினும் அவர் பெயரும் இல்லை. ஸ்ட்ரப்டோமைசீன் தானாகவோ பூமியில் விளைந்ததாகக் கலைக்களஞ்சியம் கூறகிறது. நுண்ணுயிர்ப்பண்பாடு வஞ்சிக்கப்பட்டது போலவே பேருயிர், தாவரஉயிர்ப் பண்பாட்டை வளர்த்த வாவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) வஞ்சிக்கப்படவில்லை, தண்டிக்கப்பட்டார்.
இன்றைய உயிர்ச்சூழல் உலகில் நிகோலாய் ஐ. வாவிலோவே பல்லுயிர்ப்பெருக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆனால் நிஜவாழ்வில் கலிலியோவுக்கு நிகழ்ந்த அதே சோக முடிவு இருவருக்கும் நிகழ்ந்தது. இவர் கண்டுபிடிப்பு கலிலியோ, கொலம்பஸ் கண்டுபிடிப்புகளுக்குச் சற்றும் சளைத்தது அல்ல. ஆனால் கொலம்பஸ் பெற்ற அங்கீகாரத்தை இவர் பெறவில்லை.
உலகில் எல்லா நிலப்பகுதிகளிலும் உணவுத்தாவரங்கள் பரவியதின் காரணம் விதைகளைச் சேகரித்துப் பயணங்கள் மூலம் அடுத்த நாடுகளுக்குக் கொண்டு சென்றதே ஆகும். கொலம்பசும் அவருடன் வந்த மாலுமிகளும் தென்னமெரிக்காவில் விளைந்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, மக்காச்சோளம், தக்காளி, மிளகாய், கத்தரி, பீன்ஸ் ஆகியவற்றை முதலில் ஐரோப்பாவிற்கும் அதன்பின்னர், ஆசியாவுக்கும் கொண்டு சென்றனர். எனினும் கத்தரிக்காய், மக்காச்சோளம் பாரம்பரியமான இந்தியப்பயிர்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் அடையாளப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் குடியேறிய கருப்பின மக்கள் ஆப்பிரிக்காவில் தாங்கள் விளைவித்த புஞ்சை தானியங்களையும், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்ற கிழங்குவகைகளையும் கூடவே கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து புத்தமதத் துறவிகள் நெல்லைச் சுமந்து சென்று கிழக்காசிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர். கத்தரிக்காய், மக்காச்சோளத்தைவிட, காக்காச்சோளம் என்று சொல்லப்படும் சோளம் மற்றும் கரும்பு தானியத்தின் தாய்நாடு இந்தியா என்றாலும், ஆப்பிரிக்க அறிமுகம் என்று ஒரு கருத்தும் உள்ளது. ஆப்பிரிக்காவில் மைலோ-MILO-என்று சொல்லப்படும் தானியம் நம் ஊர் செஞ்சோளம். சோளத்தில் மட்டும் தமிழ்நாட்டில் ஏராளமான ரகங்கள் இருந்தன. ஆந்திரப்பிரதேசத்திலும் அவ்வாறே. எனினும் கம்பு பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உண்டு. சோளம் பற்றிய குறிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. ஒருக்கால் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மைலோ இங்கு செஞ்சோளமாக அழைக்கப்பட்டிருக்கலாம். புஞ்சைதானியங்கள் அதிகம் விளையும் மகாராஷ்டிர மாநிலத்தில் சோள சாகுபடி குறைவு. இதர சிறுதானிய சாகுபடி - குறிப்பாக சாமை, வரகு, பனிவரகு,தினை எல்லாம் அதிகம் உண்டு. இனிவிட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
வாவிலோவின் சிறப்பு எவையெனில் :
1. உணவுப்பயிர்களின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு.
2. பூர்வ இனத்தோற்றப் பயிர்களின் விதை சேகரிப்பு.
3. பூர்வ இனவகை (Land Races)களைக் கோடிட்டு உருவாக்கிய புவியியல் அட்டவணை.
4. மரபியலில் மென்டலிய (Mendel) விதிகளை(1865) சீராக்கியவர். அதாவது மென்டல் விதிப்படி பாரம்பர்யம் ஒழுங்குமுறையுடன் தலைமுறையை உருவாக்குகிறது. வாவிலோவ் அதை மறுத்து உயிர்மங்களின் பாரம்பர்ய மூலக்கூறு ஒழுங்கற்றுச் செயல்படுகிறது என்றார். ஆங்கிலத்தில் கூறுவதானால் இவர் செய்தது delineation of the Law of Homologous Series in Genetic Variation ஆகும்.[1]
2. பூர்வ இனத்தோற்றப் பயிர்களின் விதை சேகரிப்பு.
3. பூர்வ இனவகை (Land Races)களைக் கோடிட்டு உருவாக்கிய புவியியல் அட்டவணை.
4. மரபியலில் மென்டலிய (Mendel) விதிகளை(1865) சீராக்கியவர். அதாவது மென்டல் விதிப்படி பாரம்பர்யம் ஒழுங்குமுறையுடன் தலைமுறையை உருவாக்குகிறது. வாவிலோவ் அதை மறுத்து உயிர்மங்களின் பாரம்பர்ய மூலக்கூறு ஒழுங்கற்றுச் செயல்படுகிறது என்றார். ஆங்கிலத்தில் கூறுவதானால் இவர் செய்தது delineation of the Law of Homologous Series in Genetic Variation ஆகும்.[1]
1920, 1930 பதிற்றாண்டுகளில் ஏராளமான பயிரின் ஆய்வுகளை மேற்கொள்ள இவரும் கொலம்பஸைப்போல் உலகை வலம் வந்தார். உணவுத்தாவரங்களின் பூர்வ இனத்தை, உணவுத் தோற்றமையங்களை அடையாளப்படுத்தினார். இன்றைய ருஷியாவிலும், ருஷியாவுக்கு வெளியே உலகம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்களில் சுமார் 29000 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆதர்சமாக இருந்தவர். உலகில் உள்ள 12 உணவுத்தோற்றமையங்களை இவர் அடையாளப்படுத்தியதால் இந்த சாதனைக்காக வாவிலோவை ”பல்லுயிர்ப்பெருக்கத்தின் தந்தை” என்ற மரியாதை, இவர் மறைவுக்குப்பின் கிட்டிய பரிசு.
1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தி குணக்கூறைப் பிரித்து நோய் தாக்காத ஒரு புதிய ரகத்தை உருவாக்கலாம் என்று அவர் கூறியதை இன்றுள்ள மரபியல் பொறி இயல் செயல்படுத்தி நோய்க்குறியுள்ள வீரிய ரக விதைகளைக் கண்டுபிடித்தனர். அதாவது உயரமாக வளரக்கூடிய ஜீனில் குள்ளரக ஜீனைச் செலுத்தி வைக்கோல் குறைவாகவும், தானிய எடை கூடுதலாகவும் உள்ள நெல், கோதுமை விதைகளை உருவாக்கிய பார்லாக் (Norman Ernest Borlaug) நோபல் பரிசு பெற்றார். வாவிலோவுக்கு மரண தண்டனை கிடைத்தது. பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியதாக பார்லாக் ஒரு கெட்ட புகழைப் பெற்றுள்ளார். ஜீன் மாற்றம் பற்றிய முதல் குறிப்பு வாவிலோவுடையது அன்றோ!
1921-இல் நியூயார்க் சென்று, அகில உலகத் தாவர நோய்த் தடுப்பு அமைப்பில் இவர் படித்த ஆய்வுரை இவருக்கு உலகப்புகழைத் தேடித்தந்தது. பாரம்பரிய குணமுள்ள, நோய் தாக்காத உணவுத்தாவரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுமார் 50 நாடுகளுக்கு விஞ்ஞானப் பயணம் மேற்கொண்டார். சோவியத் ருஷியாவின் உணவு ஆராய்ச்சிக்குப் பாரம்பரிய விதைகளைச் சேகரித்துக் கொடுத்தார். பின்வரும் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டார்.
1. ஐந்து புவியியல் கண்டங்கள்
2. விவசாய ஆப்கானிஸ்தான்
3. சாகுபடிப்பயிர்களின் மரபியல் பண்பு விநியோகத்தில் புவியியல் விதிகள்
4. டார்வினுக்குப்பின் சாகுபடிப்பயிர்களின் தோற்றம் பற்றிய உண்மைகள்.
2. விவசாய ஆப்கானிஸ்தான்
3. சாகுபடிப்பயிர்களின் மரபியல் பண்பு விநியோகத்தில் புவியியல் விதிகள்
4. டார்வினுக்குப்பின் சாகுபடிப்பயிர்களின் தோற்றம் பற்றிய உண்மைகள்.
கோதுமையின் பூர்வத்தோற்றமான புரோமஸ் புல்விதையை வாவிலோங் சைபிரியாவில் கண்டறிந்தார். மேலும் அவர் அடையாளப் படுத்தியுள்ள ரை(Rye ), ஆர்ச்சர்ட் கிராஸ் (orchard grass) போன்றவை உணவு தானியங்களின் பூர்வீகப் பயிர்கள் என்பது இவர் கண்டுபிடிப்பு.[2]
உணவுப்பயிர்களின் தோற்றம், காலம் ஆகியன பற்றிய வாவிலோவின் ஆராய்ச்சியின் விளைவால் 12 அடிப்படைத் தோற்றமையங்கள் புவியியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. 1906-ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த வாவிலோவ் ஒரு ஆய்வாளராக மாஸ்கோ வேளாண்மை இன்ஸ்டிடூயூட்டில் பயின்ற பின்பு 1912-இல் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள விதை ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்தார். 1913-இல் வாவிலோவ் லண்டன் சென்று பேய்ட்ஸன் (W. Bateson) அவர்களுடன் இணைந்து நோய் தாக்காத உணவுத் தாவரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். பேராசிரியர் W.பேய்ட்சன் அவர்கள்தான் தாவரஇயலில் மரபியல்(Genetics) துறையை உருவாக்கியவர். 1917-இல் சாரடோவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1921-இல் நியூயார்க்குக்கு அழைக்கப்பட்டு உரையாற்றினார். 1929-இல் லெனின் இவருக்கு வழங்கிய பெரும்பதவி, வேளாண்மை விஞ்ஞானங்களின் ஒருமித்த அகாடமி முதல் தலைவர். அதாவது First President of Lenin All Union Of Academy of Agricultural Sciences. கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒரு விஞ்ஞானிக்கு வழங்கப்பட்ட இப்பதவியே இவருக்கு எமனாயிற்று.
1935-இல், லிசெங்கோ என்ற சக ‘விஞ்ஞானி’ வாவிலோவ் மீது பொறாமையுற்று, இவர் தேசவிரோத சக்திகளுடன் ஈடுபட்டுள்ளதாக் ஒரு சதிப் புகாரை ஸ்டாலினிடம் வழங்கினார். மென்டல்(Mendel) விதிகளை மீறியதாகவும் புகார். டார்வினை விமர்சித்ததாகப் புகார். இப்புகார்களைத் தீர விசாரிக்காமல் லெனின் ஆதரவாளர் என்ற கண்ணோட்டததை வைத்து ஸ்டாலின் இவருக்கு சைபீரியத் தீவுகளில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாக்கினார். சிறையில் இவர் பட்டினியால் உடல் பலவீனமாகி 1943-இல் மரணமுற்றார். இந்த கோர வரலாற்றில் நம்மை நெகிழவைக்கும் இன்னொரு நிகழ்ச்சி- இவர் சேகரித்துவைத்த விதைகளைக் காப்பாற்றப் பட்டினியால் உயிர் துறந்த பிட்டர்ஸ் பர்க் சகவிஞ்ஞானிகளைக் கூறவேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படைகள் பீட்டர்ஸ்பர்க்கை முற்றுகையிட்டுப் பின் பின்வாங்கிப் போனபோது ஒரு ஜெர்மன் ஜெனரல் வாவிலோவ் விதை வங்கியில் விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பட்டினியால் உயிர் பிரிந்து சவமாகக் கிடந்ததைப் பார்த்து வியப்பிலாழந்தான்.
”இந்த விதை வங்கியில் உண்பதற்கு நிறையவே கோதுமை, பார்லி உள்ளன. இவற்றைச் சமைத்து உயிர் பிழைத்திருக்கலாமே?” என்று அந்த ஜெனரல் கேட்டபோது, அருகிலிருந்து ஒரு ருஷியச் சிறுவன் இவ்வாறு பதில் கூறினானாம்:
”நாங்கள் மனிதர்கள், ஒருநாள் அழியக்கூடியவர்கள்… ஆனால் விதைகள் சாகாவரம் பெற்றவை. இனி, பிறக்கப்போகும் சந்ததிகளுக்கு நன்மை வழங்கக் கூடியவை…”
இவ்வாறுதான் சேகரித்த பாரம்பர்ய விதைகளைச் சகவிஞ்ஞானிகள் தம் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய உண்மை அறியாமல் சைபீரியச்சிறையில் வாவிலோவ் மரணமுற்றார். இதைப்போல் சோகமான மற்றொன்றைக் கூறவேண்டுமானால் இந்தியாவில் பாரம்பரிய நெல்விதைகளைச் சேகரித்த ரிச்சாரியாவின் மரணம்.
இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டதற்குத் தன்னை முதன்மைப் படுத்திக்கொள்ளும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள்தான் வாவிலோவ் விதைக்கதையைச் சொன்னவர். எனினும், இவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளைக்கடத்தி அந்நிய விதை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. P.P.S.T அமைப்பின் அறிவு ஜீவிகளில் சிலர் ”விதைக்கொள்ளையர்” என்று கூட விமர்சனம் செய்தனர். இதன் பின்னணி என்ன?
1959ல் கட்டக்கில் உள்ள மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக டாக்டர் ஆர்.எச்.ரிக்காரியா(R.H. Richharia) பணிபுரிந்தபோது அதிக விளைச்சல் தரும் பாரம்பர்ய நெல் விதைகளை ஏராளமாகச் சேகரித்து வைத்திருந்தார். பழங்குடி மக்களின் விதைத் தொழில் நுட்பம், விதைப்பு முறை பற்றியும் கள ஆய்வுகள் நிகழ்த்திய உழைப்பாளி. பூச்சி மருந்தோ, ரசாயன உரமோ இல்லாமல் நல்ல விளைச்சல் பெறும் விதைகளும் வைத்திருந்தார். இந்திய நெல் சாகுபடிக்கு அந்நிய ரக விதைகள்-வீரிய ரக விதைகள் தேவை இல்லை என்று கூறினார். இவர் யோசனையை மதிக்காமல், மணிலாவில் உள்ள அனைத்துலக ஆராய்ச்சி நிறுவனத்தில் நெல்லைப் பற்றி எதுவுமே தெரியாத ராபர்ட் சான்ட்லர் என்ற, அங்கு டைராக்டாயிருந்தவரின் பேச்சுக்குச் செவிசாய்த்து, போர்டு அறக்கட்டளையின் தூண்டுதலால் ஐ.ஆர்.8-ம் தைச்சுங் ரகமும் வைரஸ் நோயுடன் விமானம் மூலம் டன் கணக்கில் இறக்கப்பட்டன. வந்திறங்கிய விதை நெல்லுடன் துங்க்ரோவைரஸ், டிராசிட்டர் வைரசும் கூடவே இந்திய மண்ணில் பரப்பட்டது. டாக்டர் ஆர்.எச்.ரிச்சாரியா கூடிய அளவில் வீரியரக நெல் பரவலைத் தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் எரிச்சலுற்ற மைய வேளாண்மை அமைச்சரகம், கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிலையத்தையே ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு தாரைவார்க்க முயன்றபோது, இவர் டைரக்டர் என்ற முறையில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். ஆகவே, இவருக்குக் கட்டாய ஓய்வு உத்தரவு வந்தது. இதை எதிர்த்து ஒரிசா நீதிமன்றத்தில் வழக்குப்போட்டார். சம்பளம் கிடைக்கவில்லை. வழக்கு 4, 5 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. ரிச்சாரியா கடனாளியானதுவே மிச்சம். கடன் தொல்லைத்தாங்காமல் மாற்றப்பட்ட இடத்திற்கு உப்புச்சப்பில்லாத ஒரு பதவிக்கு ஒப்புக்கொண்டார்.
இவரின் பதவி இறக்கத்தால், பதவி உயர்ந்தவர் டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன். உண்மையைச் சொல்வதானால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் நெல்லைப்பற்றி அதிகம் தெரியாது. அவர் படித்தது, ஆராய்ச்சி செய்தவை கோதுமையும், உருளைக்கிழங்கும்தான். அவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் சோனா கோதுமை-பார்லாக் கண்டுபிடித்த கோதுமையை இந்திய கோதுமையுடன் கலந்து உருவானது. இதில் எம்.எஸ்.எஸ் அவர்களின் உதவியாளர்களுக்கும் பங்குண்டு. இங்கு அது முக்கியம் இல்லை. டாக்டர் ரிச்சாரியா அமர வேண்டிய I.C.A.R. நிர்வாக இயக்குனர் பதவியை இவர் அலங்கரித்தது, 1966-இல் மனம் உடைந்த டாக்டர் ரிச்சாரியா மாரடைப்பார் மரணமுற்றது, பின்னர் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த நெல் ரகங்கள் மட்டுமல்ல, நம்ம ஊர் ஆற்காடுகிச்சிடி, டொப்பிச்சம்பா, சிறுமணி, வையக்குண்டா, சீரகச்சம்பா உட்பட, பல நூற்றுக்கணக்கான பாரம்பரிய ரக நெல்விதைகள் காணாமல் போய்விட்டன.
ஷாட்சின் மண்ணியல் ஆராய்ச்சியில் லைகன் (Lichen) என்னும் காளான் (fungus) வகை உயிரினத்தின் அற்புதப்பணியைத் தொடர்ந்து எழுதாமல் விஷயம் திசைமாறிச் செல்வதாக எண்ண வேண்டாம். அறிவியல் உலகம் ஷாட்சை ஏமாற்றியதைப்போல் சமகாலத்தில் வஞ்சிக்கப்பட்ட மற்றொரு ருஷியரான வாவிலோவின் நினைவு வந்தது. லைகனைப்பற்றி ஷாட்ஸ் ஆய்வதற்கு வாவிலோவின் பூர்வ இனத்தோற்றப்புவியியல் அட்டவணை உதவியிருக்கலாம். இல்லாவிட்டால் ஷாட்ஸ் ருஷியக்குறிப்பில் உள்ள ஒரு அரிய முலிகையை அடையாளப்படுத்த அர்ஜன்டைனா-ஆண்டஸ் மலைத்தொடரில் அலைந்து திரிந்து கண்டுபிடித்திருக்க முடியாது. நூலிழை அளவில் இருந்த இத்தொடர்வை வைத்து வாவிலோவையும் ஷாட்சையும் நினைக்கும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற நிகழ்ச்சி ஆர்.எச்.ரிச்சாரியா விஷயத்தில் நிகழந்துள்ளது. இதுவும் என் நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. ரிச்சாரியாவுக்கும் சேர்த்தே நினைவாஞ்சலி செய்ய வேண்டிய சூழ்நிலையைத் தடுமாறிய என் மன அலைகள் எனது எழுதுகோலில் அடங்காத ஓசையை ஏற்படுத்திவிட்டது. ஹோவார்டு இந்தியப் பாரம்பர்ய உழவியல் நுட்பங்களை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்ற விஷயம் நன்மையானது. ஆனால் ஒரு பிரபல இந்திய வேளாண் விஞ்ஞானி இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situவாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப்பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? இந்திய விவசாய விதைக்குதிர்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுவிட்டனவே. ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. அதை ”ஏகாதிபத்தியச் சுரண்டல்” என்று சொல்லலாம். 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது? இதற்கு சரியான சொல்லை அகராதியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இடம் இல்லை.
(தொடரும்)
குறிப்புகள்
and
http://www.skepticwiki.org/index.php/Chromosomes
வாவிலோவ் மரபியல் என்ற உண்மைக்காகத் தியாகியாய் மரணமடைந்தார் என்பதை மரபியல் துறையின் அறிவியல் சஞ்சிகையில் ஒரு கட்டுரை. இது சோவியத் ருஷ்யாவின் அறிவியலெதிர்ப்பு இயக்கம் பற்றியும், மூளையற்ற அரசியல் தலைவர்களின் (ஸ்டாலின், வேறு யார்) பொய்மைகளுக்கும், அராஜகத் தன்மைக்கும் வாவிலோவ் எப்படிப் பலியானார் என்பதையும் விள்க்குகிறது இக்கட்டுரை.
http://www.genetics.org/cgi/reprint/134/1/1
வாவிலோவ் மரபியல் என்ற உண்மைக்காகத் தியாகியாய் மரணமடைந்தார் என்பதை மரபியல் துறையின் அறிவியல் சஞ்சிகையில் ஒரு கட்டுரை. இது சோவியத் ருஷ்யாவின் அறிவியலெதிர்ப்பு இயக்கம் பற்றியும், மூளையற்ற அரசியல் தலைவர்களின் (ஸ்டாலின், வேறு யார்) பொய்மைகளுக்கும், அராஜகத் தன்மைக்கும் வாவிலோவ் எப்படிப் பலியானார் என்பதையும் விள்க்குகிறது இக்கட்டுரை.
http://www.genetics.org/cgi/reprint/134/1/1
வாவிலோவ் உடைய சில பயணக் குறிப்புக்ள் (1920களில் எழுதியவை) மேலும் இன்றைய விஞ்ஞானிகள் இவரது கண்டுபிடிப்புகள் எப்படி இன்றைய தொழில் நுணுக்க முறைக்ளால் ஊர்ஜிதப்படுத்தப் படுகின்றன என்பதைச் சொல்லும் ஒரு தளம் இதோ:
http://www.vaviblog.com/
http://www.vaviblog.com/
வேளாண்மைக்கு வாவிலோவின் பங்களிப்பைப் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை இங்கே:
http://www.ou.edu/cas/botany-micro/ben/ben413.html
வாவிலோவ் கொலை செய்யப்பட்ட விதத்தை விவரிக்கும் புத்தகத்தின் விவரமும் அதன் மதிப்பீடும் இங்கே காண்லாம்.
http://www.ou.edu/cas/botany-micro/ben/ben412.html#2
வாவிலோவ் குறித்த இதர தகவல்கள் கீழே உள்ள தொடுப்புக்ள வழி கிட்டும்.
http://www.vir.nw.ru/index.htm
http://www.bioversityinternational.org/bioversity_international_homepage.html
http://www.ou.edu/cas/botany-micro/ben/ben413.html
வாவிலோவ் கொலை செய்யப்பட்ட விதத்தை விவரிக்கும் புத்தகத்தின் விவரமும் அதன் மதிப்பீடும் இங்கே காண்லாம்.
http://www.ou.edu/cas/botany-micro/ben/ben412.html#2
வாவிலோவ் குறித்த இதர தகவல்கள் கீழே உள்ள தொடுப்புக்ள வழி கிட்டும்.
http://www.vir.nw.ru/index.htm
http://www.bioversityinternational.org/bioversity_international_homepage.html
[2] http://extension.missouri.edu/publications/DisplayPub.aspx?P=G4511 இந்தப் பக்கத்தில் ஆர்சர்ட் புல்லைப் பற்றிய விரிவான ஒரு கட்டுரையைக் காணலாம்.
பல வகையான புற்கள் இப்படி அழைக்கப் படுகின்றன என்றாலும், இதோ ஒரு வகையின் படம்.
பல வகையான புற்கள் இப்படி அழைக்கப் படுகின்றன என்றாலும், இதோ ஒரு வகையின் படம்.