Tuesday, 30 March 2010

உணவு அவசியம்

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது.


"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..


"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....."

மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.

"வசதியிருக்கின்றவன் தரமாட்டான்

வயிறுப் பசித்தவன் விடமாட்டான்"

உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்...

"பசியும் சுண்டல் ருசியும் போனால்,..

பக்தியில்லை பசனையில்லை

சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!"பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...
 
 
அதற்குமுன் பின்வரும் காணோளியை பாருங்கள்.. 
http://www.youtube.com/watch?v=SUErUpwsnzM&feature=player_embedded#
 

பசி

திணிக்கப்படும் பசி
எல்லா நகரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயர்வகையான உணவு விடுதிகளில் நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு உணவருந்துவதின் அடிப்படை ஒருபோதும் பசி என்பதாக இருப்பதில்லை. உயர்வகை உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களின் தட்டுகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் மிஞ்சி வெளியில் கொட்டப்படும் உணவு கிட்டத்தட்ட முப்பது சதவிகிதத்திற்கும் மேலே.நான்கு பேர் சேர்ந்து நடுத்தர நகரங்களில் உள்ள உயர்வகை உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டாலே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் கட்டணம் வருகிறது. அதில் சராசரியாக முப்பது சதவிகிதம் உணவு மீதியாக தட்டிலேயே வீணடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுவது பற்றி பெரிதாக கவலையேதுமில்லை. தினமுமா சாப்பிடறோம், எப்போதாவதுதானே என்ற மேம்போக்குத் தனத்தால் இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை.

உயர்வகை உணவு விடுதிகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது. நம் தேசத்தில் இன்னும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே அரிது.மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர். பொருளை விற்பவர்களுக்கு இரண்டு பேருடைய தேவையும் புரியும் போது, இரண்டு பேருமே கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்ற எளிய அரசியலில் விலையை உயர்த்த முயல்கின்றனர். என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.உதாரணத்திற்கு இருபது ரூபாய் இருக்கும் பொருளை வாங்க ஒருவனிடம் பத்து ரூபாய்தான் இருக்கிறது, இன்னொருவனிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது. பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான்.மூன்று ரூபாய்க்குள் கிடைக்கும் முட்டை, வெங்காயம் சேர்த்து வறுக்கும்போது சில உணவகங்களில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது, அடுத்த வீதியில் இருபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இருபது ரூபாய்க்கும் வாங்கும் திறனுள்ளவர்கள் நிச்சயம் பசியின் அடிப்படையில் அந்த முட்டையை வாங்குவதில்லை. அப்படி வாங்குபவர்கள் நிச்சயம் அதை முழுதாக உண்ண வேண்டிய கட்டாயமில்லை. எனெவே ஒரு பகுதி மீதம் வைக்கப்பட்டு குப்பைக்குப் போகிறது.அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது. இதே போல்தான் தண்ணீரும், உணவும் சிறிதும் மனசாட்சியில்லாமல் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது. 


தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்...தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!பொறுப்பி: யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில் வெளியான கட்டுரை. மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்

Sunday, 28 March 2010

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.* விட்டுக் கொடுங்கள்.* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.* குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவாதிர்கள்.

`

Thursday, 25 March 2010

விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!


உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

Monday, 22 March 2010

பி.டி. பருத்தி சக்தியை இழந்தது !!!!!!!

உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன.


ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.

இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.

இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.

மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!

வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை. மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.

இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.

ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.

இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா! இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!

விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
 
 
 

"மரம் நடுதல்"


எனக்கு மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் என்னால் முடிந்த அளவு என் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைத்து வளர்த்து வருகிறேன், அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தி வருவேன்.


தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.

முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் என்ற செய்திகளை படிக்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும், காரணம் நான் ஒரு இயற்கை விரும்பி. தற்போது காடுகள் அழிக்கப்படுவதையும் மரங்கள் வெட்டப்படுவதையும் கண்டு மனதினுள் வெந்து புலம்புவன்.

அவ்வாறு இருக்கும் போது இதை போல அறிவிப்புகளை படிக்கும் போது மனம் சந்தோசப்படுவது இயல்பு தானே!

பின்னர் தான் தெரிந்தது அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது என்று. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும். இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.

பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும் அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், எடுத்துக்காட்டாக சென்னை ECR சாலை மற்றும் சில நெடுஞ்சாலைகளை கூறலாம். பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).

சரி நமது அரசாங்கங்கள் (அரசியல்வாதிகள்) அப்படி தான் செய்யும் பழகி விட்டது, இதில் என்ன கவலை பட இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்று அறியும் போது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை, இவர்களின் வெட்டி விளம்பரத்திற்கு இதை போல வேலை தான் கிடைத்ததா!

எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரியில் இருந்து வந்து NSS போன்ற சேவைக்காக மரம் (செடி) நட்டார்கள், நம்பினால் நம்புங்கள் அவர்கள் சென்று இரண்டு நாளில் அவர்கள் வைத்த ஒரு செடியையும் காணவில்லை வைத்ததற்கான அடையாளமே இல்லை.

எனக்கு இதை விட ஈஷா யோகம் என்ற அமைப்பு செய்தது தான் வயித்தெரிச்சலாக இருந்தது. இவர்கள் வருடாவருடம் லட்சகணக்கில் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள் அதே போல ஒரு சமயத்தில் எங்கள் ஊரிலும் ஆயிர கணக்கில் செடி நட்டார்கள் பாதுகாப்பிற்கு!! சுற்றியும் குச்சி நட்டு வைத்து இருந்தார்கள்.

கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு செடி பட்டுபோய் விட்டது அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விட்டது, தற்போது அவர்கள் வைத்ததில் 10 செடியாவது வந்ததா என்று தெரியவில்லை.

ஈஷா யோகம் என்பது பெரிய அமைப்பு அந்த அமைப்பு மூலம் பல நல்ல காரியங்களை, மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்கள், இதனால் அந்த அமைப்பிற்கு எங்கள் ஊரில் நல்ல பெயர் உண்டு, அதற்காக இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை பார்க்கும் எரிச்சல் தான் மேலிடுகிறது.

மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி!

ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.

தற்போது கூட நான் ஊரிலிருந்து வரும்போது திருப்பூரில் ஈஷா யோகம், ஸ்டாலின் அவர்கள் தலைமையில் எத்தனையோ ஆயிரம் செடிகள் நடப்போவதாக அறிவித்து செய்து இருந்தார்கள். திருப்பூர் நண்பர்கள் வேண்டும் என்றால் கவனித்து பாருங்கள் அதில் எத்தனை செடிகளை அவர்கள் வளர்க்கிறார்கள் என்று (இன்னேரமே பாதி செடி காலி ஆகி இருக்கும்).

இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.

இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இங்குள்ள படங்களை பார்க்கும் போதே மனதிற்கு எவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது, இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

உலக தண்ணீர் தினம் பற்றி ஓர் வேண்டுகோள்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். முடிந்தால் பின்னூட்டத்தின் மூலம் தெரியப்படுத்தினால் எல்லாவற்றையும் நானும் படிப்பேன். இப்போதிருந்தே மேலேயுள்ள படத்தை நமது வலைப் பூக்களில் இட்டு நிறைய மக்களிடம் சென்று சேர்க்கலாம்.


 
 
 
 
 
 

தண்ணீரின் அருமைநம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும். ஒருகாலத்தில் தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது என்று டி.வி.யில் செய்தி வந்தால் அதைப்பற்றி ஒரே பேச்சாக இருக்கும்!!!
தற்போது நிலைமயே வேறு!! தண்ணீர் விலக்கு அனைவரும் வாங்கும் நிலை!!!ஆயினும் நம்மிடையே தண்ணீரைப் பற்றி நம்மிடையே என்ன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது?ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது. ”பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்கிற நிலையில்தான் உள்ளது!தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!!தண்ணீர் சேமிப்பு முறைகளைக்கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்!ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும்!!சில தண்ணீர் சேமிப்பு பற்றிய தகவல்கள்:ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும்.கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம்.பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.

சுயநலம்,அலட்ச்சியப்போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!1.சாலையோரங்களில் பொதுகுடிநீர் குழாய் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கும்!!!2.தண்ணீர் 4 மணிநேரம்தான் வருகிறது என்றால் அதில் அடைக்கும் குழாய் பிடுங்கப்பட்டு இருக்கும்!தண்ணீர் தானே வந்து தானே நிற்கும்!!!3.குடிதண்ணீரை சேமித்து குளிப்பது, தோட்டத்தில் பாய்ச்சுவது,கார் கழுவுவது!!4.தண்ணீர் அதிகமாக வந்தால் ஹோஸ் மாட்டி கிணற்றுக்குள் தண்ணீர் வரும் வரை சேமிப்பது?(உண்மை!!)இதையெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்!!நாடுகளின் எல்லைதாண்டிய நதிநீர், ஏரிநீர் பங்கீடுபலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்ற விழிப்புணர்வு தற்போது மிக அவசியமாக உள்ளது!இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது!உலகின் 263 ஏரிகள்,மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும். அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதான்மாக பங்கிட்டுக்கொண்டாலே நாம் எதிர்கால தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும்!கடந்த 60 ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான,, உலகநாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!!( ஆச்சரியம்)நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியலையே!

தண்ணீர் உயிரின் ஆதாரம் மண்ணின் உயிர்த்துளி;

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்தமுதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை. புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணீரை வழங்குகிறது.


உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர். மனித உடலின் பெரும்பகுதி தண்ணீர். தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை, உயிரில்லை. மண்ணும் காற்றும்கூட தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர். "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்ற முதுமொழியின் பொருள் இதுதான்.
பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டு கூட இல்லை. காரணம், அங்கெல்லாம் தண்ணீரில்லை. நீரின்றி அமையாது உலகு! இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. அது எந்தவொரு தேசத்தின் தனிச் சொத்துமல்ல; உலகின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு.

அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காகத் தனிஉடைமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி! சமூக விரோத, மக்கள் விரோதக் கொடுஞ்செயல்!

தண்ணீர் வியாபாரம்: ஒரு பயங்கரவாதம்!

ஆனால், அத்தகைய அநீதிதான் இன்று கோலோச்சுகிறது. தாகம் தீர்க்கும் தண்ணீர், லாபம் பார்க்கும் சரக்காக விற்பனை செய்யப்படுகிறது. "காசுள்ளவனுக்குத்தான் தண்ணீர்' என்ற கயமை கடைகளில் சரம்சரமாகத் தொங்குகிறது. பாட்டில்களாக அணிவகுத்து நின்று பணம் காசில்லாத ஏழைகளை எள்ளி நகையாடுகிறது.

நம்மில் பலர் பாக்கெட் தண்ணீருக்குப் பழகி விட்டனர். பாலைவிட அதிக விலை விற்கும் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் பலர் பழகிவிட்டார்கள். மற்ற நுகர் பொருட்களை விலை கொடுத்து வாங்குவதைப் போல கேன் கேனாகத் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதை சகஜமாகக் கருதுகிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் இது கட்டாயம் தேவையான தென்றும், தவிர்க்க முடியாததென்றும் கருதுகிறார்கள்.

"குழாய்த் தண்ணியும் லாரித் தண்ணியும் பிடிப்பதற்காகக் கால் கடுக்கக் காத்து நிற்க வேண்டும். பிறகு அதைக் கொண்டு வந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தத் துன்பத்துக்கு கேன் தண்ணியையே காசு கொடுத்து வாங்கிவிடலாம்; வேறென்ன செய்வது?'' என்று நடுத்தர வர்க்கத்தினர் இதை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். தரமான நல்ல குடிநீரை ஓசியிலா தரமுடியும்? காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று தண்ணீர் வியாபாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது பணத்திமிர் கொண்ட வர்க்கம்.

தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பதும் அதற்காக பொதுச்சொத்தான நீர்வளங்களையும் நீராதாரங்களையும் தனியார் கொள்ளைக்குத் திறந்து விடுவதும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறோம். நமது நீராதாரங்களை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு நாசமாக்கி, மண்ணையும் நஞ்சாக்கி, எல்லாத் தாவரங்களையும் உயிரினங்களையும் ஒழித்துக் கட்டும் பயங்கரவாதம்தான் தண்ணீர் வியாபாரம் என்று குற்றம் சாட்டுகிறோம்.

தண்ணீர்: இன்னொரு பண்டமல்ல!

ஏனென்றால், உலகின் நீர் ஆதாரம் வரம்புக்குட்பட்டது. கடல்நீர் போக, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மனிதன் பயன்படுத்தத்தக்க நீரின் அளவு, மொத்த உலக நீர் ஆதாரத்தில் 2.5 சதவீதம்தான். துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளைக் கழித்து விட்டால், நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு 0.3 சதவீதம் மட்டும்தான். இடத்திற்கு இடம் மழையின் அளவு மாறினாலும், மொத்தத்தில் உலகளவில் பெய்யும் மழை ஏறத்தாழ ஒரே அளவாகவே இருந்து வருகிறது. எனவே, நமக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு உயராது, உயர்த்தவும் முடியாது; ஏöனன்றால், அது இயற்கையின் கொடை. அது வரம்புக்குட்பட்டது.

அரிசியோ, துணியோ விற்றுத் தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உற்பத்தியின் அளவையும் உயர்த்தலாம். ஆனால், தண்ணீரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது; அளவையும் கூட்ட முடியாது.தண்ணீருக்கு மாற்று இல்லை. அரிசி இல்லையென்றால் கோதுமை உண்ணலாம். சில நாட்கள் பட்டினியும் கிடக்கலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்தும் செல்லலாம். ஆனால், தண்ணீர் இல்லையென்றால் உயிர்வாழ முடியாது. தண்ணீருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை.

தண்ணீரில்லையென்றால் புல், பூண்டு, மரம், பச்சை இல்லை; புழு, பூச்சி, ஊர்வன, நடப்பன, பறப்பன எதுவும் இல்லை; மனிதனும் இல்லை; உணவு உற்பத்தி நின்று மண்ணே புழுதிக் காடாய் பாலைவனமாய் மாறிவிடும். ஈரப்பதம் வறண்டு காற்றே அனல்காற்றாகும். தண்ணீரில்லையேல் எதுவுமில்லை.

எனவேதான், தண்ணீரை எல்லா நுகர் பொருட்களையும் போன்ற இன்னொரு நுகர் பொருளாகக் கருதக்கூடாது என்கிறோம். தண்ணீரின் அருமையையும் மதிப்பையும் புரிந்தவர்கள் அதனை விற்பனைப் பண்டமாக்கும் கொடுமையை அனுமதிக்கக் கூடாது என்கிறோம்.

தண்ணீர்க் கொள்ளையர்கள்

சென்னையில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் வியாபாரிகள் முதலாளிகள் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை தாம்பரம் வட்டாரத்தில் 20 கிராமங்களிலிருந்து மட்டும் 20,000 லாரிகள் அன்றாடம் தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று கூறுகிறது, சென்னை வளர்ச்சி ஆய்வுக்கழகம் (Mஐஈகு) என்ற அரசுசார் நிறுவனத்தின் ஆய்வு. திருவள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமங்களிலிருந்து மட்டும் அன்றாடம் 1000 லாரிகள் தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும், பாலாற்றின் கரைப்பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.

தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள்; இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர்; பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.

யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.

நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.

இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.

நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான்!

நிலத்தடி நீர் அழிந்தால்?

குழாய்க் கிணற்றின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் தன்மை மாறுகிறது. அத்தனை ஆழத்தில் கிடைக்கும் நீர், உப்பும் வேதிப் பொருட்களும் நிறைந்த கடினநீராகி விடுகிறது. தண்ணீர்த் திருடர்கள், "அற்ற குளத்தின் அருநீர்ப் பறவைகள்' போல அடுத்த இடம் தேடிப்பறந்து விடுகிறார்கள்.

அந்த வட்டாரத்து மக்கள் எங்கே ஓடுவது? சுற்று வட்டாரம் முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக, கடின நீராக மாறி விடுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்கரையிலேயே நல்ல தண்ணீர்க் கிணறுகள் இருந்த காலமும் உண்டு. இன்றோ கடலோரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் கடல் மட்டத்தைக் காட்டிலும் கீழே போய்விட்டதால் மக்களின் குடிநீர்க் கிணறுகள் உவர் நீர்க் கிணறுகளாகி விட்டன.

வேறு வழியில்லாத இடங்களில் இத்தகைய தண்ணீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்; சமைக்கிறார்கள். அளவுக்கு அதிகமான வேதிப் பொருட்கள் அத்தண்ணீரில் கலந்திருப்பதால் பல்நோய், குடற்புண், ஈரல் நோய், தோல் நோயென வகைவகையான நோய்களுக்கு மக்கள் இரையாகிறார்கள். ஒரு வட்டாரம் முழுவதும் குறிப்பிட்ட ஒருவகை நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டின் 72 சதவீத நிலத்தடி நீர் குடிக்க லாயக்கற்றது என்றும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாய எல்லைக்குச் சென்றுவிட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. ஆனால் தண்ணீர்க் கொள்ளையோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலை நீடித்தால் ஏரி, குளம் அனைத்தும் வறண்டு நாடே பாலைவனமாகும். உணவு உற்பத்தி நின்றுவிடும். கால்நடைகள் மடிந்துவிடும்; அல்லது அடிமாட்டுக்கு விற்கப்பட்டே அழிந்துவிடும். பனைமரமும் பட்டுப்போக வெப்பக் காற்று வீசும் மண்டலமாக நாடே மாறிவிடும்.

லாபவெறி பிடித்த தண்ணீர் முதலாளிகள் எண்ணிக்கையில் சில ஆயிரம் மட்டும்தான். விவசாயிகளோ பல கோடிப்பேர். நீர்வளம் கொழிக்கும் பகுதிகளில் அவர்களும்தான் தண்ணீர் எடுத்தார்கள். முப்போகம் சாகுபடியும் செய்தார்கள். அதனால் நீர்வளம் அழியவில்லை. ஏனென்றால், அவர்கள் பாசனத்திற்குத்தான் தண்ணீர் எடுத்தார்கள் பணத்திற்கு விற்பதற்காக அல்ல; விவசாயி எடுத்த தண்ணீர் ஒரு துளி கூட வெளியே சென்றதில்லை. அவ்வளவையும் மண்ணில் பாய்ச்சினார்கள். ஆவியானது போக அனைத்தும் நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட்டது. இதனால் பருவமழை தவறிய காலங்களிலும் கூட நிலத்தடி நீர் வறண்டு விட வில்லை.

தண்ணீர்க் கொள்ளையர்களோ மழைநீரை மண் உறிஞ்சும் அளவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இயற்கையின் அற்புதங்களான நீர்த்தாங்கிகள் (ச்ணுதடிஞூஞுணூண்), மேற்பரப்பு நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமித்து வைத்திருக்கின்றன. நீர்த்தாங்கிகள் சேமித்து வைத்திருக்கும் அந்த நீரையும் சப்பி எடுத்து விடுகிறார்கள், தண்ணீர் கொள்ளையர்கள். நூற்றாண்டுகளாய் இயற்கை சேமித்து வைத்திருக்கும் நீர்வளத்தை நீயா, நானா என்று போட்டி போட்டுச் சூறையாடுகிறார்கள்.

இவர்களுடைய பணத்தாகத்திற்கு இயற்கையாலும் ஈடு கொடுக்க முடிவதில்லை. வெள்ளமாய் மழை பெய்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவதேயில்லை. இனி பிளாச்சிமடா கிராமமே மூழ்குமளவுக்கு மழை பெய்தாலும், கொக்கோ கோலாவால் பலநூறடி ஆழத்திற்கு வீழ்த்தப்பட்ட நீர்மட்டம் அவ்வளவு லேசில் மேலெழும்ப முடியாது. சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகமான அளவுக்கு சென்னை நகரில் மழை பெய்த போதிலும் நிலத்தடி நீரின் மட்டம் கால் அங்குலம் கூட உயரவில்லை என்கிறது நிலத்தடி நீர் ஆய்வுக் கழகம். மண்ணின் உறிஞ்சும் திறன் இயற்கை விதியை விஞ்சுவதில்லை. லாபவெறி பிடித்த முதலாளிகளோ, தாங்கள் தோற்றுவிக்கும் இயற்கைப் பேரழிவு குறித்துச் சிறிதும் அஞ்சுவதில்லை.

எனவேதான் சொல்கிறோம். தண்ணீர் வியாபாரம் என்பதை இன்னொரு நுகர்பொருள் வியாபாரம் என்று கருதாதீர்கள். அது உலகின் எல்லா வளங்களையும் உயிர்களையும் அழிக்கும்; உயிரின வாழ்க்கைச் சூழலின் சமநிலையைச் சீர்குலைக்கும். இதனால் சுனாமி போன்ற திடீர்ப் பேரழிவுகளும் தோன்றக்கூடும். எனவேதான், தண்ணீர் வியாபாரமென்பது பேரழிவு ஆயுதங்களை விற்பதற்குச் சமமானது. இது மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதம் என்று கூறுகிறோம்.

எண்ணெயை விஞ்சும் பணம் தண்ணீரில்!

நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்து வருகின்றது. எனவே, தண்ணீரை விற்றால் கொள்ளைலாபம் நிச்சயம் என்று ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் அண்மைக் காலமாக தண்ணீர் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று உலக மக்கள் தொகையில் 5% பேர் மட்டும்தான், பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தண்ணீர் வாங்குகின்றனர். இந்த வர்த்தகத்தின் மதிப்பென்ன தெரியுமா? இன்று நடக்கும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பில் 50 சதவீதம். எனவேதான், சென்ற நூற்றாண்டில் இக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கான பெரும் ஆதாரமாக எரி எண்ணெய் இருந்ததைப் போல, 21ம் நூற்றாண்டில் தண்ணீர் இருக்கும் என உலக முதலாளிகள் கணக்கு போடுகின்றனர். எனவே, தண்ணீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவது அதற்கான சந்தைகளைக் கைப்பற்றுவது ஆகியவற்றிற்கான போட்டியும் முரண்பாடும் தீவிரமடைந்து தண்ணீருக்காகவே யுத்தங்கள் வெடிக்கலாம் என்றும் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகத்திற்கே பேராபத்து உண்டாக்கக்கூடிய இந்தத் தண்ணீர் வியாபாரம் நமது பண்பாட்டிற்கும் மரபிற்கும் எதிரானதாகும். நமது நாட்டில் அரசாங்கங்களும் ஊர்ப் பஞ்சாயத்துக்களும் மக்களுக்கும், ஏன், ஆடு மாடுகளுக்கும் கூட குடிநீர்த் தொட்டி கட்டி தண்ணீரைத் தானமாக வழங்கி வந்துள்ளன. பாசனத்திற்காக அணைகள் கட்டுவது, ஏரி, குளங்கள், கால்வாய்கள் வெட்டுவது, அவற்றை மராமத்து செய்வது என்பது அரசர்களின் முக்கியக் கடமையாக இருந்திருக்கிறது. தண்ணீரைத் தாயாக மதித்துப் பாதுகாத்து வருவதும் நமது பண்பாடு!

தண்ணீரைச் சமூகச் சொத்தாக மதிப்பது நம் மரபு. அதை எல்லா உயிரினங்களின் தாகம் தீர்க்க இலவசமாக வழங்குவதும் நம் பண்பாடு. தண்ணீரை வாங்கவும் விற்கவுமான பண்டமாக மாற்றியிருப்பதன் மூலம் நமது மரபையும் பண்பாட்டையுமே கேவலப்படுத்துகிறது தண்ணீர் வியாபாரம்.

பண்பாட்டின் ஈரமே உலர்ந்து விடும்

தாகம் கொண்டவர்கள் தண்ணீர் கேட்பதும், கேட்டவுடன் தண்ணீர் வழங்கி, தாகம் தீர்க்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வதும் மக்கள் பண்பாடு. இன்றோ, நா வறண்டு தவித்தாலும் பாட்டில் தண்ணீர் வைத்திருப்பவரிடம் கேட்கத் தயங்குகிறோம். கட்டிடத் தொழிலாளர்களும், சாலைப் பணியாளர்களும் அருகிலுள்ள வீடுகளில் "ஒரு செம்பு தண்ணி' கேட்பதும், வீட்டுப் பெண்கள் தயங்காமல் தருவதும் நாமறிந்த பண்பாடு. இன்றோ, குடிநீரை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்போர் கொடுக்கத் தயங்குகிறார்கள். "இல்லை' என்று சொல்லவும் கூசுகிறார்கள். ஆனால், நாளாக நாளாக நமது பண்பாட்டில் ஈரம் உலர்ந்து விடும்; ஆயிரம் குறைகளுக்கும் அப்பாற்பட்டு மனித உறவுகளில் எஞ்சியிருந்த மென்மை இறுகிவிடும்; மனிதாபிமான இழை அறுந்துவிடும்; "இல்லை' என்ற சொல் நம் வாயிலிருந்து தெறித்து விழும்.

"இல்லை' என்ற இந்தச் சொல் தண்ணீருடன் முடிந்து விடாது. சக மனிதனுடன் சகஜமாகப் பழகும் பண்பாடு விலகி, இறுக்கமானதொரு அந்நியம் மனிதர்களுக்குள் புகுந்து விடும். ஒரு வகையான மவுன வன்முறை உருவாகி மனித உறவுகளையும் நமது பண்பாட்டையும் நிரந்தரமாகக் காயப்படுத்தி விடும்.

எனவேதான், தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான பாதகம் என்கிறோம்; அடிப்படையான மனித உரிமைக்கு எதிரான அநீதி என்கிறோம்; இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை என்கிறோம்; உயிரினங்களைப் பூண்டோடு ஒழிக்கும் பயங்கரவாதம் என்கிறோம். எனவேதான், தண்ணீரை எவனுக்கும் தனிவுடைமை ஆக்கக் கூடாது; தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது என்று ஓங்கி ஒலிக்கிறோம்.
Thursday, 18 March 2010

மரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து!

மரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து!


ஒவ்வொரு உயிரினத்திலும் அமைந்துள்ள இயல்புகளை, எடுத்துக்காட்டாக பழங்களின் சுவை, பூக்களின் மணம், மனிதனின் முகச்சாயல் போன்ற அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (கடத்துவது) கொண்டு செல்வதற்கு அடிப்படையாக இருப்பவை ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள். ஓர் உயிரிலிருந்து மரபணுக்களைப் பிரித்து வேறு ஒரு உயிருக்குச் செலுத்தி அந்த உயிருக்கு புதிய குணாதிசயங்களை உருவாக்கும் முயற்சிதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்.மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் இன்னும் தொடக்க நிலையில் தான் இருக்கிறது. “மரபணு மாற்று உணவு வகைகள் பாதுகாப்பானவையா?” என்று கண்டறிய வேண்டும் என்று ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது.பேசில்லஸ் துரிஞ்செனிசஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. இதன் துணை வகையான குர்ஸ்டகி என்ற பாக்டீரியா உருவாக்கும் நச்சுப் பொருட்கள் நெல்லுக்குப் பகையான தண்டு துளைப்பான் மற்றும் இலைச் சுருட்டுப் புழு ஆகியவற்றை அழிக்கக் கூடியவை. எனவே மேற்கூறிய பாக்டீரியாவிலிருந்து மரபீனியைப் (மரபணுக்களை) பிரித்து நெல்விதைக்குள் செலுத்துவன் மூலம் உருவாகும் புதிய நெற்பயிர் இலைச்சுருட்டுப்புழு, மற்றும் தண்டுத் துளைப்பான் புழுக்களைக் கொன்றுவிடும். இப்படிப்பட்ட நெல்வகைதான் பி.டி. நெல்.மேற்குறிப்பிட்ட நெல் பயிரில் இருக்கும் நச்சுப்பொருள் இலையிலோ அல்லது தண்டில் மட்டுமேதான் தங்கும் என்பதற்கில்லை. அரிசியிலும் பரவி நிற்கும் ஆபத்து உண்டு. இதை உண்ணும் மனிதனுக்கு இந்த உணவு நச்சு உணவாக மாறும் அபாயம் உண்டு. இதனால் மனிதர்களுக்கு பலவகையான ஒவ்வாமை நோய்கள் தோன்றும்.சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிடி பருத்தி இலைகளைத் தின்ற நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒவ்வாமை நோயினால் இறந்ததை ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.மன்சாட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் இந்த மரபணு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. ஆடுகளைப் போல மனிதர்களும் பலியாகாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியிருக்கிறது. வேளாண்மையையும், அறியா விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்போம். தரமான உணவுப் பொருட்களைப் பெறுவது நமது உரிமை, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது நமது கடமை.

(நன்றி : மாற்று மருத்துவம் ஏப்ரல் 2009)

Thursday, 4 March 2010

உலகில் உண்மையான வேளாண்மை

உலகில் உண்மையான வேளாண்மை இந்தியா, ஆப்பிரிக்கா, இதர ஆசிய நாடுகளில் மட்டுமே நிகழ்கிறது. வடக்கு நாடுகளில் உண்மையான வேளாண்மை அழிந்துவிட்டது. அங்கு நிகழ்வது தொழில்மய வேளாண்மை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மரவளர்ப்புடன் எரிசக்தியை மிச்சப்படுத்தும் விவசாயத்தை இணைத்துப் "பர்மாகல்ச்சர்' (ல்ங்ழ்ம்ஹஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) என்ற ஒரு வேளாண் பண்பாட்டை உருவாக்கிய பில்மோலிசன் செய்த முன்னெச்சரிக்கை இன்று உண்மையாகிவிட்டது. அவர் செய்த முன்னெச்சரிக்கை இதுதான்.""இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் வெட்ட வெளிச்சமாகும். இயற்கை விவசாயத்தின் மீது உண்மையான கவனம் திரும்பும். தொழில்மய விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும். பெருகிவரும் சாகுபடிச் செலவைச் சமாளிக்க முடியாது. தொழில்மய விவசாயத்தில் இடுபொருள் செலவு பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தித் தேவையின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அதாவது என்.பி.கே. என்று சொல்லப்படும் ரசாயன உரங்கள், அழிந்துவரும் புதைவு எரிசக்திகளை வைத்து உற்பத்தியாவதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் உரவிலையும் உயர்ந்து பட்ஜெட்டின் பெரும்பகுதிச் செலவை உரமானியத்துக்கு மட்டுமே வழங்க வேண்டிவரும். இப்படிப்பட்ட உரம், விதைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் உள்ளன. எவ்வளவு விரைவில் வளரும் நாடுகளின் விவசாயம் பன்னாட்டு முதலாளிகளிலிருந்து மீட்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக வளரும் நாடுகள் நலம் பெறும். வாழ்வியலை மையமிட்ட வேளாண்மையே என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில் அது தற்சார்புள்ளது. அதில் பெட்ரோலிய எரிசக்தி வீணாவது இல்லை.......'' அவரின் இந்த முன்னெச்சரிக்கை வாசகங்கள் இன்று உண்மையாகிவிட்டது. காலநிலைத் தடுமாற்றத்தால் விவசாயம் தடுமாறுகிறது என்று கூறினாலும் சரி; தொழில்மய விவசாயத்தினால் காலநிலைத் தடுமாற்றம் ஏற்படுகிறது என்று கூறினாலும் சரி; காலநிலைத் தடுமாற்றம் அல்லது தட்பவெப்பத் தடுமாற்றம் பசுமையகக் கெட்ட வாயுக்களால் உருவாகிறது என்பதை அனைவரும் அறிவோம். தொழில் நகரங்கள், கார், லாரி போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றால் 70 சதம் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன. தொழில்மய விவசாயத்தின் பங்கு 30 சதம் என்பது ஒரு குறைவான மதிப்பீடுதான்.


ஏனெனில் ரசாயன உர உற்பத்தி, ரசாயன உரங்களின் போக்குவரத்து எல்லாம் தொழில்துறையின் கெட்ட வாயு வெளியீட்டுக்கான காரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளன. யூரியா, என்.பி.கே. காம்ப்ளக்ஸ் போன்றவை மண்ணில் இடப்பட்டு வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற கெட்ட வாயு, நவீன கால்நடை - பால் பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் என்ற கெட்ட வாயு ஆகிய இரண்டும் ஓசோன் படலத்தைத் துளைப்பதில் கார்பன் டை ஆக்சைடைவிட வலிமை வாய்ந்ததாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தட்பவெப்பத் தடுமாற்றத்தை உருவாக்கும் தொழில்மய விவசாயத்தால் உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான விவசாயிகளும், தட்பவெப்பத் தடுமாற்றத்திற்குட்பட்ட நிலங்களில் வசிக்கும் 37 கோடி கிராமிய ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.தட்பவெப்பத் தடுமாற்றம் ஏற்படுத்தும் கனமழை, கூடுதல் வெப்பம், கூடுதலான குளிர், கூடுதல் வறட்சி, புயல், வெள்ளம் எல்லாம் நமது விவசாய பட்டப் பழமொழிகளை மாற்றிவிடும். ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பருவம் பொய்த்து சித்திரை வெய்யில் தாக்கும். சித்திரை மாதம் மழை பெய்யலாம். குளிர் அடிக்கலாம். ஆடிப்பட்டம் பொய்த்தால் தைப்பட்டம். உத்தராயணத்தில் வெய்யில் இல்லாமல் மழை பெய்து தைப்பட்டம் தம்பட்டமாகும். உலகில் 80 சத விவசாயம் மானாவாரிதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மானாவாரி விவசாயமே மூச்சடைத்துப் போகும் ஆபத்து உள்ளது. வளரும் நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு ரசாயன உரங்களின் தேவை உயர்ந்து வருகிறது. ரசாயன உரங்கள் பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தியாவதால் எரிசக்தி நெருக்கடியைத் தோற்றுவிக்கும். அத்தோடு ரசாயன உரப்பயன்பாடு இயற்கை வழி விவசாயத்தைவிட மூன்று மடங்கு கெட்ட வாயுக்களை உருவாக்கித் தட்பவெப்பத் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. 2030-ஐ நாம் நெருங்கும்போது ரசாயன உர உற்பத்தியை 37 சதம் உயர்த்தும் திட்டம் உள்ளதால் கெட்ட வாயுக்களின் உற்பத்தியும் உயர்ந்து, எரிசக்திச் செலவும் உயர்ந்து நமது கண்களை நாமே குத்திக் கொண்டு குருடர்களாக வாழப் போகிறோம். கெட்ட வாயுக்களின் உற்பத்தியாளரான உர நிறுவனங்களும், விதை நிறுவன பகாசூரர்களும் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயக் கொள்கையை வகுத்து வருகிறார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் உயிர்ச்சூழலுக்கு உலைவைக்கும் ஒரே ரகப் பயிர்ப்பண்பாடு - அதாவது மோனோகல்ச்சர்.


                        உலகிற்குப் பாதுகாப்பான விவசாயம் பர்மாகல்ச்சரிலும், பல்லுயிர்கல்ச்சர் என்று சொல்லப்படும் பயோடைவர்ஸ் விவசாயத்திலும் உள்ளதை அவர்கள் அறிவார்கள் என்றாலும் விதை நிறுவன - உர நிறுவன பகாசூரர்களுக்கு அவற்றால் சுயலாபம் சிறிதும் இல்லை.உலகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்புவதில் எல்லா நாடுகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டது ரோடேல் நிறுவனம். இந்நிறுவனம் தத்துவரீதியாக ஒரு மாற்றுத்திட்டத்தை முன்மொழிந்து எவ்வாறு எதிர்கால இடர்களை - தட்பவெப்பத் தடுமாற்றத்துக்குரிய சவாலைச் சந்திப்பது என்பதற்கான சில டிப்ஸ் வழங்கியுள்ளது.

                                                இந்த அரிய யோசனைகளை கடைப்பிடித்தால் நாமும் நமது சந்ததிகளும் பிழைக்கவும் நாடு செழிக்கவும் வாய்ப்புகள் உண்டு.கரியமில வாயுவைப் பிடித்து வைத்துப் பிராணவாயுவாக மாற்றும் உயிர் மண்ணை - அதாவது பல்லுயிரிகளைக் கொண்ட மண்ணை உருவாக்க வேண்டும். மண்ணானது நைட்ரஜனைப் பிடித்து வைத்துக் கொண்டு அதேசமயம் நைட்ரிக் ஆக்சைடாக வெளியேற்றாமல் இருக்க பயறுவகைப் பயிர்களான உளுந்து, தட்டைப் பயறு, பாசிப்பயறு, துவரை, அகத்தி, வேர்க்கடலை, வெந்தயம், தக்காளி, அவரை, மொச்சை போன்றவற்றை பயிரிட வேண்டும். இவற்றை ஆங்கிலத்தில் லெகுமினஸ் பயிர்கள் என்பார்கள். இவ்வகைப் பயிர்களைக் கலப்பாகவோ, பயிர்ச்சுழற்சி முறையிலோ பயிரிடும் பாரம்பர்ய மரபை மீட்டுயிர்த்தால் யூரியா செலவைக் குறைக்கலாம். யூரியாவைப் பயன்படுத்தும்போது பயிர் ஏற்காதவை, நைட்ரேட்டாக மாறிக் குடிநீரை விஷமாக்கும் அல்லது நைட்ரிக் ஆவியாகமாறி பிராணனை வாங்கும். அதாவது ஓசோனைக் கிழிக்கும். மூன்றாவதாக பெரன்னியல் பயிர்களைச் சாகுபடி செய்வது. பெரன்னியல் என்றால் அதிக வயதுள்ள பயிர்கள். இதனால் கார்பன் மண்ணுக்குள் இருந்து வெளியேறாமல் இருக்கும்.நான்காவதாக, பசுமை அல்லது உயிர் மூடாக்கு. அதாவது ஒரு அறுவடைக்குப் பின் முன்கூட்டியே விதைத்துப் பசுமையாக்கி அடுத்த விதைப்பு வரை நிலத்தைத் தரிசாகப் போடாமல் இருத்தல். பொதுவாக நிலத்தைப் பசுமை மாறாமல் வைத்திருக்க வேண்டும். இதனால் மண்ணில் உள்ள நைட்ரஜனானது, நைட்ரஜன் ஆக்சைடு என்ற கெட்ட வாயுவாக வெளியேறாது. வளரும் நாடுகளின் எதிர்கால வேளாண்மையைப் பற்றி ஆராய்ந்துவரும் வேளாண் விஞ்ஞானி லைம் லை சிங் இன்றைய வேளாண்மை வெளிப்படுத்தும் பசுமையகக் கெட்ட வாயுக்களை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறன் இயற்கை வேளாண்மைக்கு மட்டுமே உண்டு என்கிறார். அவர் விடுத்துள்ள ஒரு செய்திமடலில், இன்றைய விவசாயம், ஓசோனைத் தின்னும் ஒட்டுமொத்த கெட்ட வாயுக்களில் பத்துமுதல் பன்னிரண்டு சதத்தை மேலே செலுத்துகிறதாம். அவற்றில் இ02 என்ற கரியமில வாயு இஏ4 என்ற மீத்தேன் வாயு ச2ர் என்ற நைட்ரிக் வாயு அடங்கும். கால்நடை வளர்ப்போர் சாணியைச் சேர்த்துக் குவித்து, திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் வாயுவும், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவதால் நைட்ரிக் வாயுவும் கெட்ட வாயுக்களாக மாறுகின்றன. பசுமைப் பொருள்களான பயோமாசை எரிப்பதாலும் கார்பன்டை ஆக்சைடு கெட்ட வாயுவாகிறது.தட்பவெப்பத் தடுமாற்ற விளைவைக் கருத்தில் கொள்ளாமல் நாம் செய்யும் விவசாயம் நமக்கே ஆபத்தைத் தேடித்தரும். தட்ப வெப்பத் தடுமாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தைத் தடுமாறாமல் இட்டுச் செல்வது இயற்கை விவசாயமே. ஒரு நிலத்தில் ஒரேவகைப் பயிரைச் சாகுபடி செய்யாமல் பலரகப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு வகையிலும் பலரகங்கள் உண்டு. கத்தரிக்காய் என்று எடுத்துக் கொண்டால் பி.டி. கத்தரிக்காயை மட்டுமே சாகுபடி செய்தால் குலநாசம் ஏற்படும். மாறாக 50 சென்டு நிலத்தில் கத்தரிக்காய் பயிர் செய்ய விரும்பினால், 10 சென்டு பச்சைக் கத்தரிக்காய், 10 சென்டு வெள்ளைக் கத்தரிக்காய், 10 சென்டு ஊதா கத்தரி 10 சென்டு எண்ணெய்க் கத்தரிக்காய், 10 சென்டு முள்ளுக் கத்தரிக்காய் என்று பிரித்து நடுவதே பயோடைவர்ஸ் விவசாயம். இடையிடையே குச்சிப் பந்தலிட்டு புடல், பீர்க்கை என்று நிறைய இடைவெளிவிட்டு சாகுபடி செய்யலாம். ஒரு பக்கம் திரும்பினால் சோளம், ஒரு பக்கம் திரும்பினால் நெல், ஒருபக்கம் திரும்பினால் வாழை, ஒரு பக்கம் தீவனப்புல், தட்டைப் பயறு என்று பல வகைகளிலும் பல ரகங்களைக் கலந்து பயிரிட வேண்டும். இவ்வாறு செய்யும்போது தட்பவெப்பத் தடுமாற்றத்தைத் தாங்கக்கூடிய வகைகளையும் ரகங்களையும் அறிவது எளிதாகும். ஒரு ரகத்தில் ஏற்படும் நஷ்டத்தை வேறு ரகம் தரும் லாபத்தைக் கொண்டு சமாளிக்கலாம்.உண்ணும் பயிர்களில் மட்டுமல்ல; கால்நடை வளர்ப்பிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தட்பவெப்பத் தடுமாற்றத்தால் நோய்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆடு மாடுகள், கடல் மட்டம் உயர்வு, தாழ்வு, வெப்பம் போன்ற கடல் சூழலுக்கு ஏற்ப வாழக்கூடிய மீன்வகை இனப்பெருக்கம் என்று மீன், கால்நடைகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் விரும்பப்படுகிறது. தட்பவெப்பத் தடுமாற்றத்தால், வளரும் நாடுகளில் வாழும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள், ஆதிவாசிகள் அதிக அளவில் உணவு இல்லாமல் மடிவர் என்று ஐ.நா. மதிப்பீடு கூறுகிறது. தட்பவெப்பத் தடுமாற்றத்தால் அதிகம் தடுமாறக்கூடிய நிலப் பகுதிகளில் வாழும் சுமார் 40 கோடி மக்கள் பல்லுயிர்ப் பெருக்கரீதியான விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்த வாய்ப்புள்ளதாக பல்லுயிர்ப் பெருக்க - உயிர்ச்சுழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.