Monday, 22 March 2010

தண்ணீர் உயிரின் ஆதாரம் மண்ணின் உயிர்த்துளி;

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்தமுதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை. புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணீரை வழங்குகிறது.






உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர். மனித உடலின் பெரும்பகுதி தண்ணீர். தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை, உயிரில்லை. மண்ணும் காற்றும்கூட தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர். "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்ற முதுமொழியின் பொருள் இதுதான்.








பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டு கூட இல்லை. காரணம், அங்கெல்லாம் தண்ணீரில்லை. நீரின்றி அமையாது உலகு! இயற்கையின் விதிப்படியே தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. அது எந்தவொரு தேசத்தின் தனிச் சொத்துமல்ல; உலகின் பொதுச் சொத்து. தற்போது வாழும் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன்மீது உரிமை உண்டு.





அத்தகைய தண்ணீரை ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காகத் தனிஉடைமையாக்குவதும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காகக் கருதுவதும் மாற்றுவதும் அநீதி! சமூக விரோத, மக்கள் விரோதக் கொடுஞ்செயல்!





தண்ணீர் வியாபாரம்: ஒரு பயங்கரவாதம்!





ஆனால், அத்தகைய அநீதிதான் இன்று கோலோச்சுகிறது. தாகம் தீர்க்கும் தண்ணீர், லாபம் பார்க்கும் சரக்காக விற்பனை செய்யப்படுகிறது. "காசுள்ளவனுக்குத்தான் தண்ணீர்' என்ற கயமை கடைகளில் சரம்சரமாகத் தொங்குகிறது. பாட்டில்களாக அணிவகுத்து நின்று பணம் காசில்லாத ஏழைகளை எள்ளி நகையாடுகிறது.





நம்மில் பலர் பாக்கெட் தண்ணீருக்குப் பழகி விட்டனர். பாலைவிட அதிக விலை விற்கும் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் பலர் பழகிவிட்டார்கள். மற்ற நுகர் பொருட்களை விலை கொடுத்து வாங்குவதைப் போல கேன் கேனாகத் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதை சகஜமாகக் கருதுகிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் இது கட்டாயம் தேவையான தென்றும், தவிர்க்க முடியாததென்றும் கருதுகிறார்கள்.





"குழாய்த் தண்ணியும் லாரித் தண்ணியும் பிடிப்பதற்காகக் கால் கடுக்கக் காத்து நிற்க வேண்டும். பிறகு அதைக் கொண்டு வந்து காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தத் துன்பத்துக்கு கேன் தண்ணியையே காசு கொடுத்து வாங்கிவிடலாம்; வேறென்ன செய்வது?'' என்று நடுத்தர வர்க்கத்தினர் இதை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். தரமான நல்ல குடிநீரை ஓசியிலா தரமுடியும்? காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று தண்ணீர் வியாபாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது பணத்திமிர் கொண்ட வர்க்கம்.





தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பதும் அதற்காக பொதுச்சொத்தான நீர்வளங்களையும் நீராதாரங்களையும் தனியார் கொள்ளைக்குத் திறந்து விடுவதும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறோம். நமது நீராதாரங்களை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு நாசமாக்கி, மண்ணையும் நஞ்சாக்கி, எல்லாத் தாவரங்களையும் உயிரினங்களையும் ஒழித்துக் கட்டும் பயங்கரவாதம்தான் தண்ணீர் வியாபாரம் என்று குற்றம் சாட்டுகிறோம்.





தண்ணீர்: இன்னொரு பண்டமல்ல!





ஏனென்றால், உலகின் நீர் ஆதாரம் வரம்புக்குட்பட்டது. கடல்நீர் போக, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் மனிதன் பயன்படுத்தத்தக்க நீரின் அளவு, மொத்த உலக நீர் ஆதாரத்தில் 2.5 சதவீதம்தான். துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளைக் கழித்து விட்டால், நமக்குக் கிடைக்கும் நன்னீரின் அளவு 0.3 சதவீதம் மட்டும்தான். இடத்திற்கு இடம் மழையின் அளவு மாறினாலும், மொத்தத்தில் உலகளவில் பெய்யும் மழை ஏறத்தாழ ஒரே அளவாகவே இருந்து வருகிறது. எனவே, நமக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு உயராது, உயர்த்தவும் முடியாது; ஏöனன்றால், அது இயற்கையின் கொடை. அது வரம்புக்குட்பட்டது.





அரிசியோ, துணியோ விற்றுத் தீர்ந்துவிட்டால் அவற்றை நாம் உற்பத்தி செய்து கொள்ளலாம். உற்பத்தியின் அளவையும் உயர்த்தலாம். ஆனால், தண்ணீரை அவ்வாறு உற்பத்தி செய்ய முடியாது; அளவையும் கூட்ட முடியாது.







தண்ணீருக்கு மாற்று இல்லை. அரிசி இல்லையென்றால் கோதுமை உண்ணலாம். சில நாட்கள் பட்டினியும் கிடக்கலாம். சைக்கிள் இல்லையென்றால் நடந்தும் செல்லலாம். ஆனால், தண்ணீர் இல்லையென்றால் உயிர்வாழ முடியாது. தண்ணீருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை.





தண்ணீரில்லையென்றால் புல், பூண்டு, மரம், பச்சை இல்லை; புழு, பூச்சி, ஊர்வன, நடப்பன, பறப்பன எதுவும் இல்லை; மனிதனும் இல்லை; உணவு உற்பத்தி நின்று மண்ணே புழுதிக் காடாய் பாலைவனமாய் மாறிவிடும். ஈரப்பதம் வறண்டு காற்றே அனல்காற்றாகும். தண்ணீரில்லையேல் எதுவுமில்லை.





எனவேதான், தண்ணீரை எல்லா நுகர் பொருட்களையும் போன்ற இன்னொரு நுகர் பொருளாகக் கருதக்கூடாது என்கிறோம். தண்ணீரின் அருமையையும் மதிப்பையும் புரிந்தவர்கள் அதனை விற்பனைப் பண்டமாக்கும் கொடுமையை அனுமதிக்கக் கூடாது என்கிறோம்.





தண்ணீர்க் கொள்ளையர்கள்





சென்னையில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் வியாபாரிகள் முதலாளிகள் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை தாம்பரம் வட்டாரத்தில் 20 கிராமங்களிலிருந்து மட்டும் 20,000 லாரிகள் அன்றாடம் தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று கூறுகிறது, சென்னை வளர்ச்சி ஆய்வுக்கழகம் (Mஐஈகு) என்ற அரசுசார் நிறுவனத்தின் ஆய்வு. திருவள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமங்களிலிருந்து மட்டும் அன்றாடம் 1000 லாரிகள் தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும், பாலாற்றின் கரைப்பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.





தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள்; இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர்; பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.





யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.





நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.





இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.





நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான்!





நிலத்தடி நீர் அழிந்தால்?





குழாய்க் கிணற்றின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க தண்ணீரின் தன்மை மாறுகிறது. அத்தனை ஆழத்தில் கிடைக்கும் நீர், உப்பும் வேதிப் பொருட்களும் நிறைந்த கடினநீராகி விடுகிறது. தண்ணீர்த் திருடர்கள், "அற்ற குளத்தின் அருநீர்ப் பறவைகள்' போல அடுத்த இடம் தேடிப்பறந்து விடுகிறார்கள்.





அந்த வட்டாரத்து மக்கள் எங்கே ஓடுவது? சுற்று வட்டாரம் முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக, கடின நீராக மாறி விடுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்கரையிலேயே நல்ல தண்ணீர்க் கிணறுகள் இருந்த காலமும் உண்டு. இன்றோ கடலோரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் கடல் மட்டத்தைக் காட்டிலும் கீழே போய்விட்டதால் மக்களின் குடிநீர்க் கிணறுகள் உவர் நீர்க் கிணறுகளாகி விட்டன.





வேறு வழியில்லாத இடங்களில் இத்தகைய தண்ணீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்; சமைக்கிறார்கள். அளவுக்கு அதிகமான வேதிப் பொருட்கள் அத்தண்ணீரில் கலந்திருப்பதால் பல்நோய், குடற்புண், ஈரல் நோய், தோல் நோயென வகைவகையான நோய்களுக்கு மக்கள் இரையாகிறார்கள். ஒரு வட்டாரம் முழுவதும் குறிப்பிட்ட ஒருவகை நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.







தமிழ்நாட்டின் 72 சதவீத நிலத்தடி நீர் குடிக்க லாயக்கற்றது என்றும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாய எல்லைக்குச் சென்றுவிட்டதாகவும் பொதுப்பணித்துறையே அறிவித்துள்ளது. ஆனால் தண்ணீர்க் கொள்ளையோ அதிகரித்துக் கொண்டே போகிறது.





இந்நிலை நீடித்தால் ஏரி, குளம் அனைத்தும் வறண்டு நாடே பாலைவனமாகும். உணவு உற்பத்தி நின்றுவிடும். கால்நடைகள் மடிந்துவிடும்; அல்லது அடிமாட்டுக்கு விற்கப்பட்டே அழிந்துவிடும். பனைமரமும் பட்டுப்போக வெப்பக் காற்று வீசும் மண்டலமாக நாடே மாறிவிடும்.





லாபவெறி பிடித்த தண்ணீர் முதலாளிகள் எண்ணிக்கையில் சில ஆயிரம் மட்டும்தான். விவசாயிகளோ பல கோடிப்பேர். நீர்வளம் கொழிக்கும் பகுதிகளில் அவர்களும்தான் தண்ணீர் எடுத்தார்கள். முப்போகம் சாகுபடியும் செய்தார்கள். அதனால் நீர்வளம் அழியவில்லை. ஏனென்றால், அவர்கள் பாசனத்திற்குத்தான் தண்ணீர் எடுத்தார்கள் பணத்திற்கு விற்பதற்காக அல்ல; விவசாயி எடுத்த தண்ணீர் ஒரு துளி கூட வெளியே சென்றதில்லை. அவ்வளவையும் மண்ணில் பாய்ச்சினார்கள். ஆவியானது போக அனைத்தும் நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட்டது. இதனால் பருவமழை தவறிய காலங்களிலும் கூட நிலத்தடி நீர் வறண்டு விட வில்லை.





தண்ணீர்க் கொள்ளையர்களோ மழைநீரை மண் உறிஞ்சும் அளவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இயற்கையின் அற்புதங்களான நீர்த்தாங்கிகள் (ச்ணுதடிஞூஞுணூண்), மேற்பரப்பு நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமித்து வைத்திருக்கின்றன. நீர்த்தாங்கிகள் சேமித்து வைத்திருக்கும் அந்த நீரையும் சப்பி எடுத்து விடுகிறார்கள், தண்ணீர் கொள்ளையர்கள். நூற்றாண்டுகளாய் இயற்கை சேமித்து வைத்திருக்கும் நீர்வளத்தை நீயா, நானா என்று போட்டி போட்டுச் சூறையாடுகிறார்கள்.





இவர்களுடைய பணத்தாகத்திற்கு இயற்கையாலும் ஈடு கொடுக்க முடிவதில்லை. வெள்ளமாய் மழை பெய்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவதேயில்லை. இனி பிளாச்சிமடா கிராமமே மூழ்குமளவுக்கு மழை பெய்தாலும், கொக்கோ கோலாவால் பலநூறடி ஆழத்திற்கு வீழ்த்தப்பட்ட நீர்மட்டம் அவ்வளவு லேசில் மேலெழும்ப முடியாது. சென்ற ஆண்டு கோடைக் காலத்தில் வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகமான அளவுக்கு சென்னை நகரில் மழை பெய்த போதிலும் நிலத்தடி நீரின் மட்டம் கால் அங்குலம் கூட உயரவில்லை என்கிறது நிலத்தடி நீர் ஆய்வுக் கழகம். மண்ணின் உறிஞ்சும் திறன் இயற்கை விதியை விஞ்சுவதில்லை. லாபவெறி பிடித்த முதலாளிகளோ, தாங்கள் தோற்றுவிக்கும் இயற்கைப் பேரழிவு குறித்துச் சிறிதும் அஞ்சுவதில்லை.





எனவேதான் சொல்கிறோம். தண்ணீர் வியாபாரம் என்பதை இன்னொரு நுகர்பொருள் வியாபாரம் என்று கருதாதீர்கள். அது உலகின் எல்லா வளங்களையும் உயிர்களையும் அழிக்கும்; உயிரின வாழ்க்கைச் சூழலின் சமநிலையைச் சீர்குலைக்கும். இதனால் சுனாமி போன்ற திடீர்ப் பேரழிவுகளும் தோன்றக்கூடும். எனவேதான், தண்ணீர் வியாபாரமென்பது பேரழிவு ஆயுதங்களை விற்பதற்குச் சமமானது. இது மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதம் என்று கூறுகிறோம்.





எண்ணெயை விஞ்சும் பணம் தண்ணீரில்!





நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்து வருகின்றது. எனவே, தண்ணீரை விற்றால் கொள்ளைலாபம் நிச்சயம் என்று ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் அண்மைக் காலமாக தண்ணீர் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று உலக மக்கள் தொகையில் 5% பேர் மட்டும்தான், பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தண்ணீர் வாங்குகின்றனர். இந்த வர்த்தகத்தின் மதிப்பென்ன தெரியுமா? இன்று நடக்கும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பில் 50 சதவீதம். எனவேதான், சென்ற நூற்றாண்டில் இக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கான பெரும் ஆதாரமாக எரி எண்ணெய் இருந்ததைப் போல, 21ம் நூற்றாண்டில் தண்ணீர் இருக்கும் என உலக முதலாளிகள் கணக்கு போடுகின்றனர். எனவே, தண்ணீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவது அதற்கான சந்தைகளைக் கைப்பற்றுவது ஆகியவற்றிற்கான போட்டியும் முரண்பாடும் தீவிரமடைந்து தண்ணீருக்காகவே யுத்தங்கள் வெடிக்கலாம் என்றும் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.





உலகத்திற்கே பேராபத்து உண்டாக்கக்கூடிய இந்தத் தண்ணீர் வியாபாரம் நமது பண்பாட்டிற்கும் மரபிற்கும் எதிரானதாகும். நமது நாட்டில் அரசாங்கங்களும் ஊர்ப் பஞ்சாயத்துக்களும் மக்களுக்கும், ஏன், ஆடு மாடுகளுக்கும் கூட குடிநீர்த் தொட்டி கட்டி தண்ணீரைத் தானமாக வழங்கி வந்துள்ளன. பாசனத்திற்காக அணைகள் கட்டுவது, ஏரி, குளங்கள், கால்வாய்கள் வெட்டுவது, அவற்றை மராமத்து செய்வது என்பது அரசர்களின் முக்கியக் கடமையாக இருந்திருக்கிறது. தண்ணீரைத் தாயாக மதித்துப் பாதுகாத்து வருவதும் நமது பண்பாடு!





தண்ணீரைச் சமூகச் சொத்தாக மதிப்பது நம் மரபு. அதை எல்லா உயிரினங்களின் தாகம் தீர்க்க இலவசமாக வழங்குவதும் நம் பண்பாடு. தண்ணீரை வாங்கவும் விற்கவுமான பண்டமாக மாற்றியிருப்பதன் மூலம் நமது மரபையும் பண்பாட்டையுமே கேவலப்படுத்துகிறது தண்ணீர் வியாபாரம்.





பண்பாட்டின் ஈரமே உலர்ந்து விடும்





தாகம் கொண்டவர்கள் தண்ணீர் கேட்பதும், கேட்டவுடன் தண்ணீர் வழங்கி, தாகம் தீர்க்கக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்வதும் மக்கள் பண்பாடு. இன்றோ, நா வறண்டு தவித்தாலும் பாட்டில் தண்ணீர் வைத்திருப்பவரிடம் கேட்கத் தயங்குகிறோம். கட்டிடத் தொழிலாளர்களும், சாலைப் பணியாளர்களும் அருகிலுள்ள வீடுகளில் "ஒரு செம்பு தண்ணி' கேட்பதும், வீட்டுப் பெண்கள் தயங்காமல் தருவதும் நாமறிந்த பண்பாடு. இன்றோ, குடிநீரை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்போர் கொடுக்கத் தயங்குகிறார்கள். "இல்லை' என்று சொல்லவும் கூசுகிறார்கள். ஆனால், நாளாக நாளாக நமது பண்பாட்டில் ஈரம் உலர்ந்து விடும்; ஆயிரம் குறைகளுக்கும் அப்பாற்பட்டு மனித உறவுகளில் எஞ்சியிருந்த மென்மை இறுகிவிடும்; மனிதாபிமான இழை அறுந்துவிடும்; "இல்லை' என்ற சொல் நம் வாயிலிருந்து தெறித்து விழும்.





"இல்லை' என்ற இந்தச் சொல் தண்ணீருடன் முடிந்து விடாது. சக மனிதனுடன் சகஜமாகப் பழகும் பண்பாடு விலகி, இறுக்கமானதொரு அந்நியம் மனிதர்களுக்குள் புகுந்து விடும். ஒரு வகையான மவுன வன்முறை உருவாகி மனித உறவுகளையும் நமது பண்பாட்டையும் நிரந்தரமாகக் காயப்படுத்தி விடும்.





எனவேதான், தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான பாதகம் என்கிறோம்; அடிப்படையான மனித உரிமைக்கு எதிரான அநீதி என்கிறோம்; இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை என்கிறோம்; உயிரினங்களைப் பூண்டோடு ஒழிக்கும் பயங்கரவாதம் என்கிறோம். எனவேதான், தண்ணீரை எவனுக்கும் தனிவுடைமை ஆக்கக் கூடாது; தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது என்று ஓங்கி ஒலிக்கிறோம்.








0 கருத்துரைகள்: