Monday 22 March 2010

"மரம் நடுதல்"






எனக்கு மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் என்னால் முடிந்த அளவு என் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைத்து வளர்த்து வருகிறேன், அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தி வருவேன்.






தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.





முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் என்ற செய்திகளை படிக்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும், காரணம் நான் ஒரு இயற்கை விரும்பி. தற்போது காடுகள் அழிக்கப்படுவதையும் மரங்கள் வெட்டப்படுவதையும் கண்டு மனதினுள் வெந்து புலம்புவன்.





அவ்வாறு இருக்கும் போது இதை போல அறிவிப்புகளை படிக்கும் போது மனம் சந்தோசப்படுவது இயல்பு தானே!





பின்னர் தான் தெரிந்தது அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது என்று. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும். இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.





பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும் அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், எடுத்துக்காட்டாக சென்னை ECR சாலை மற்றும் சில நெடுஞ்சாலைகளை கூறலாம். பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).





சரி நமது அரசாங்கங்கள் (அரசியல்வாதிகள்) அப்படி தான் செய்யும் பழகி விட்டது, இதில் என்ன கவலை பட இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்று அறியும் போது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை, இவர்களின் வெட்டி விளம்பரத்திற்கு இதை போல வேலை தான் கிடைத்ததா!





எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரியில் இருந்து வந்து NSS போன்ற சேவைக்காக மரம் (செடி) நட்டார்கள், நம்பினால் நம்புங்கள் அவர்கள் சென்று இரண்டு நாளில் அவர்கள் வைத்த ஒரு செடியையும் காணவில்லை வைத்ததற்கான அடையாளமே இல்லை.





எனக்கு இதை விட ஈஷா யோகம் என்ற அமைப்பு செய்தது தான் வயித்தெரிச்சலாக இருந்தது. இவர்கள் வருடாவருடம் லட்சகணக்கில் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள் அதே போல ஒரு சமயத்தில் எங்கள் ஊரிலும் ஆயிர கணக்கில் செடி நட்டார்கள் பாதுகாப்பிற்கு!! சுற்றியும் குச்சி நட்டு வைத்து இருந்தார்கள்.





கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு செடி பட்டுபோய் விட்டது அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விட்டது, தற்போது அவர்கள் வைத்ததில் 10 செடியாவது வந்ததா என்று தெரியவில்லை.





ஈஷா யோகம் என்பது பெரிய அமைப்பு அந்த அமைப்பு மூலம் பல நல்ல காரியங்களை, மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்கள், இதனால் அந்த அமைப்பிற்கு எங்கள் ஊரில் நல்ல பெயர் உண்டு, அதற்காக இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை பார்க்கும் எரிச்சல் தான் மேலிடுகிறது.





மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.





ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி!





ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.





தற்போது கூட நான் ஊரிலிருந்து வரும்போது திருப்பூரில் ஈஷா யோகம், ஸ்டாலின் அவர்கள் தலைமையில் எத்தனையோ ஆயிரம் செடிகள் நடப்போவதாக அறிவித்து செய்து இருந்தார்கள். திருப்பூர் நண்பர்கள் வேண்டும் என்றால் கவனித்து பாருங்கள் அதில் எத்தனை செடிகளை அவர்கள் வளர்க்கிறார்கள் என்று (இன்னேரமே பாதி செடி காலி ஆகி இருக்கும்).





இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.





இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இங்குள்ள படங்களை பார்க்கும் போதே மனதிற்கு எவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது, இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

0 கருத்துரைகள்: