Sunday, 9 December 2012

பல்பயிர் வேளாண்மை

வேளாண்மை என்ற சொல் பொருள் ஆழம் மிக்க சொல் . வேளாண்மை என்றால் பிறர்க்கு உபகரணாம் செய்தலும், உதவி செய்தலும் ஆகும். அதே நேரத்தில் வேளாண்மை என்ற சொல் உழவித் தொழிலையும் குறிக்கும்.
வேளாண் என்னும் சொல்லை வேள் + ஆள் என்று பிரிக்கலாம். வேள் என்றால் மண் என்று பொருளாகும். ஆள் என்றால் ஆளுதல் என்னும் பொருலாகும். வேளாண் என்றால் மண்ணை ஆள்பவர்கள் என்று பொருள்.  இதனால் தான் தொல்காப்பியர் உழவர்களை வேளாண் மாந்தர்என்று குறிப்பிடுகிறார். வேளாண் மந்தருடைய தொழில் உழவுத்தொழில் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி
(தொல்காப்பியம் – மரபு 81)
     நாட்டை அரசன் ஆள்வது போல் உழவர்கள் மண்ணை ஆளும் பெருமை உடையவர்களாக இருந்தனர்கள்.
உழவு என்றால் உழத்தல்  என்பதாகும். உழத்தல் என்றால் இடைவிடாது முயலும் உடல் முயற்சியைக் குறிக்கும் சொல்லாகும். ஆகவே இடைவிடாது முயன்றால் தான் உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை ஐயாயிரம் (5000) வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்துள்ளார்கள்;.  அன்று முதல் இன்று வரை உழைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் வளம் பெற்ற மாதிரி தெரியவில்லை. என்னுடைய ஊரைச் சேர்ந்த ஒருவர் உழவுத் தொழிலில் இலாபம் இல்லை என்று சொல்லி நகரத்திற்குச் சென்றுஇ பெட்டிக்கடை வைத்தார். அவரை ஊரில் உள்ளவர்கள் சிரித்தர்கள். பெட்டிக்கடை வைத்தவர் 5 ஆண்டுகள் கழித்துக் கையில் புதுமனைப் புகுவிழா அழைப்பிதழைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து அழைப்பு விடுத்தார்.
ஆனால் உழவன் நிலை என்ன? நான் என் நண்பர் தோட்டத்திற்கு சென்று இருந்தேன். பழைய மாட்டுச்சாலை சட்டம் முறிந்து நின்றது. அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இது தான் உழவன் நிலை. அவனுடைய விளைப்பொருளுக்கு கட்டுப்படியான விலைக் கிடைப்பது கிடையாது.
இன்று இயற்கை விவசாயத்தினைப் பற்றிப் பரப்புரை செய்பவர்கள் பல் பயிர் சாகுபடி பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். பல் பயிர் சாகுபடி செய்யலாம். கம்பு பயிர்  செய்யலாம் ஆனால் அதிர் அறுக்க ஆள் கிடையாது. தினை  பயிர்  செய்யலாம் ஆனால் அறுவடைக்கு ஆள் கிடையாது. பாசிப்பயறு உளுந்து போன்றவைகளைப் பயிர்ச் செய்யலாம். ப்றிக்க ஆள் கிடையாது அப்படியே கிடைத்தாலும் மிகவும் குறைந்த கூலி தான் கொடுக்கிறார்கள்.
 மாற்று என்ன சிந்தீப்பீர்! உழவர்களே! 

’’தண்ணீர்  புரட்சியால் தான் தமிழகம் தழைத்து தழை நிமிரும்’’
                                  சு- ஆனந்தராசு
       ’’உலகம் முழுவதும்  பல வடிவங்களில் புரட்சி நடந்திருக்கலாம் ஆனால் தமிழகத்தில் தண்ணீர் புரட்சி மட்டுமே சாத்தியமாகும். நாம்  நீர் நிலைகளை மீட்டுருவாக்கம்  செய்து இயற்கை வேளாண்மையை கடைப்பிடித்தால் தான் நாம் இழந்த உரிமைகளை பெற முடியும்’’
                                                    சு- ஆனந்தராசு
       ’’நமது முன்னோர்கள் முதலில் நீர் நிலைகளை வளப்படுத்தி விவசாயத்தினை செழிப்படைய செய்தார்கள். நாம் பழையதை மறக்கலாம் ஆனால் பழமையை மறந்தால் நமக்கு மரணம் மட்டுமல்ல நம் இனமே இருக்காது ‘’
                                                                சு- ஆனந்தராசு

இலக்கியத்தில் வேளாண்மை  - 3

இலக்கியத்தில் உள்ள வேளாண்மைப் பற்றித் தெரிந்து உழவர்கள் அதனை மேற்கொள்ளப் போகிறார்களா என்று எண்ணத் தோன்றும். உழவர்களுக்கு வேண்டியது சொற்பொழிவே பேச்சியோ அல்ல. மழைப்பொழிவு தான் வேண்டும். ஆனால் நமது பாட்டன், அதற்கு முன்பிரிந்தோர் எப்படி வேளாண்மை செய்தார்கள்? எவ்வளவு பயன் அடைந்தார்கள் ? என்று தெரிந்தால் நம் உழவுத்தொழில் எவ்வளவு மேன்மையானது , புனிதமானது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
அன்று இருந்ததோ முடி அரசு அதனால் தான்  அரசர்கள் வேளாண்மைத் தொழிலுக்கு உரியச் சிறப்பு அளித்தார்கள். அன்று நம்மை ஆண்டவர்கள் முடியரசர்களே என்றாலும் உழவுத் தொழிலின் நுணுக்கங்களை நுட்பமாக உனர்ந்து இருந்தார்கள். வேளாண்மை செய்த பலர் பெரும் தமிழறிஞர்களாக இருந்தார்கள். மன்ன்னிட்த்தில் பரிசும் பதவியும் பெற்றிருந்தார்கள். கேட்டுப் பெறவில்லை. பெருமையும், சிறப்பும் அவர்களை நாடி, தேடி வந்தன.
பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் உழவுத்தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் நன்கு கவனம் செலுத்தினார்கள். அவர்கள் கவனத்தில் குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று புலவர்களும் அவ்வப் போழுது அரசனுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். இன்று அறிவுரை கூற முடியுமா? கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளார்கள்? உழவர் தொழில் நன்கு நடைப்பெறுதற்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பது அரசரின் கடமை என்று புலவர்கள் கூறுகிறார். உழவுத்தொழில் ஓங்கிச் சிறந்து விளங்க வேண்டும் என்று கவிஞர் மன்ன்னுக்கு நினைவு படுத்துகிறார். இன்று இத்தகைய சான்றோர் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களின் பேச்சைக் கேட்க எவரும் இல்லை. குடிக்க நீரில்லை என்றால் உடம்பு அழியும் உடம்பில் உயிர் நீர் இருக்க வேண்டும். உணவு வேண்டும் அந்த உணவை யார் கொடுக்க முடியும்? உழவன் தான் கொடுக்க முடியும் ஆகவே உழு தொழில் சிறக்கத் தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மன்னனின்  கடமை. இன்று நீர் ஆதாரம் எப்படி உள்ளது? கதிர் விட்ட நெல் தண்ணீர் இன்றிக் கருகுகிறது. உழவன் கண்ணீர் வடிக்கிறான். வயல் பாளம்பளமாய் வெடித்துக் கிடக்கும் காட்சிகளை பார்க்கும் போது காண்போர் நெஞ்சம் கரைகிறது, கண்ணீர் மல்குகிறது. இதற்றுக் காரணமே தமிழன் தனது அடையாளத்தை இழந்தாதால் தான் இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த புலவர்கள் பாடலை இன்று நினைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.
நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே (புறம் -18)
 உண்டி – உணவு, யாக்கை – உடம்பு
வெறும் நீர் மட்டும் இருந்தால் போதுமானது அன்று. நிலம் வேண்டும். அந்த நிலத்தில் தேவையான உழவுத் தொழில் சிறக்க வேண்டும். உழவுத்தொழில் சிறந்தால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். இதனை இன்றுள்ளவர்கள் உணர்ந்து உழவர்கட்கு உதவ வேண்டும்.
வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த உழவர். உழவர்கட்கு ஏற்படும் குறைகளை நேராகச் சென்று மன்னனிடம் நயமாக எடுத்துச் சொல்கிறார். அந்த மன்னர் பெயர் சாழன் குளா முற்றத்துச் துங்சிய கிள்ளி வளவன். கிள்ளி வளவனைப் பார்த்து, ’’’’’’மன்னா மழை பெய்யுங்காலத்துப் பெய்யாமல் போய் விட்டாலும் விளைச்சல் குறந்தாலும் இயற்கைக்கு மாறுபாடன நிகழ்வு ஏற்பட்டாலும் உன்னையே பழித்துரைப்பார்கள். ஆகவே ஏழைகளைப் பாதுகாக்கும் உழவர்கள் குறை தீர்த்து வைப்பாய். அதனால் நாடு செழிக்கும், உன் ஆட்சி செழிக்கும்’’    என்று எடுத்துரைத்துப் பரிகாரம் பெற்றார்.
அன்று உழவர் சங்கம் இல்லை. ஒன்று திரண்டு குரல் கொடுக்கவில்லை. அரண்மனை நோக்கிச் சென்றார்.எத்தனையோ பகைவர்களை வென்று வீழ்த்திய மன்னனைப் பார்த்து அஞ்சாமல் குறைச்சொன்னார். மன்னன் அப்பொழுதே வரி நீக்கின்ன். உழவர்கள் வெள்ளைக்குடி நாகனார் தனக்காக மட்டும் கேட்கவில்லை. உழவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றார். மன்னன் ஆவன செய்தான். (பாடல்)

மாரி பொய்ப்பினும் வாரி குன்றிலும்
இயற்கை யல்லன செயற்கையிற் தோன்றினும்
காவலர் ப்பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி 
-          (புறநானுறு-பாடல் 35)   

உழவர்கட்கு அன்று மதிப்பு இருந்த்து. மரியாதை இருந்தது. மழை பெய்யாவிட்டால் மன்னர்கள் கவலை உற்றார்கள். அச்சப்பட்டார்கள்.  மக்களைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நல்ல வளம் வேண்டும் அந்த வளத்தைப் பயன் படுத்தி விளைச்சலைப் பெருக்கும் உழவர் வாழ்வில் குறை வரக்கூடாது என்று எண்ணி வாழ்ந்தார்கள். இதோ சேரன் செங்குட்டுவன்  என்னும் மன்னன் சொல்வதையும் கேளுங்கள். அக்கால மன்னர்கள் அரச பதவி ஏதோசுகத்தை அனுபவிக்க்க் கிடைத்த பதவி என்று கனவிலும் கருதவில்லை. மக்கள் குறைத் தீர்க்க முடியாத நிலை வந்து விடக்கூடாது என்று கனவிலும் நினத்து வாழ்ந்தார்கள். மழை இல்லாமல் பயிர்த் தொழில் செய்ய முடியாத நிலை வந்து விடக்கூடாது என்று எண்ணி வந்தார்கள். மன்னர் பதவி என்பது ஒரு துன்பம் தரும் பதவி என்றும் தொழுது வரவேற்க்கத் தக்கது அன்று சொல்லியும் நினைத்தும் வாழ்ந்தார்கள். மக்கள் நலனில் மன்னர் அக்கறைக் காட்டியதால் உழவர் பெருமக்களும் மற்றவர்களும் மன்னனைத் தெய்வமாகவே கருதி வந்தார்கள். தங்களுக்கு வரும் துன்பங்களை மன்னன் தீர்ப்பான் என்னும் நிறைவோடு வாழ்ந்து வந்தார்கள் செங்குட்டுவன் மன்னன் நிலைப் பற்றிச் சொல்வது நினைத்து நினைத்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்று மக்கள்  மன்னன் அன்பில் நனைந்து வாழ்ந்தார்கள்.
மழை வளங் சுரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங் கோலஞ்சி
மன்பதை காக்கும் நல்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதக வில் லென ........ (சிலம்பு)

இப்படி நிறையச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே செல்ல்லாம். அந்தக் காலத்தில் உழவர்கட்கும், ஆள்வோருக்கும் இருந்த உறவைத் தெரிந்து கொள்ளவே சில எடுத்துக் காட்டுக்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். 
 ஆனால் இன்று வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. உழவர்களுக்கு சரியான உரிமை தர அரசு மறுக்கிறது. 
ஒன்று மட்டும் உண்மை . உழவன் வாழ்வு சிறக்காத வரை , அவன் குறைகளைத் தீர்க்கப் படாத வரை  நாட்டில் வளர்ச்சி இருக்காது பசியும் , பட்டினியும் தான் இருக்கும்
 ’’விவசாயம் தான் வாழ்வுக்கு மற்றவையெல்லாம் வசதிக்குதான், வாழ்வை தொலைத்து வசதியாக நினைக்கும் இன்றயச் சமூகம் நிச்சயமாக ஒரு பெரும் அழிவை சந்திக்கும்!  அப்போது தான் தெரியும்  உழவனின்  அருமை’’

 சு. ஆனந்தராசு  

Tuesday, 20 November 2012

அரப்பு மோர் கரைசல்

 தேவையான பொருள்கள்

மோர்  ; 50 லிட்டர்
அரப்பு / உசிலை இலை  ; 25 கிலோ
இதனை ஒரு  நெகிழி (பிளாஸ்டிக்) பாத்திரத்தில் காற்று புகாதவாறு 7 நாட்களுக்கு மூடி வைத்து பின்னர் பயன் படுத்தலாம் இது சிறந்த வளச்சி ஊக்கி.
10 லிட்டர் ;500 மில்லி தெளிக்கவும்.
20 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும் 
 
Sunday, 30 September 2012

உழவரை போற்றுதல் - பொதிகைகுடும்பன்
சான்றோரை அடுத்து நம் இலக்கியங்கள் உழவர்களையும் வேளாண்மையையும் போற்றும் சமூக மதிப்பை உருவாக்குகின்றன. உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்று புறநானூறு உழவரை சிறப்பிக்கின்றது (புறம் 18). வெள்ளைக்குடி நாயனார் என்ற புலவர் சோழன் கிள்ளிவளவனிடம் ‘உன் படை வீரரது போர்கள வெற்றி உன் நாட்டு வேளாண் வளத்தால் வாய்த்தது என்பதை மறவாதே. உழவரின் பாரம் ஓம்பி அவர்களைப் பாதுகாப்பதை முதற் கடமையாகக் கொண்டால் பகைவரும் உன் அடி பணிந்து போற்றுவர்’ என்கின்றார் (புறம் 35 ) . பாரியினது பறம்புமலையில் உணவு வளம் செழித்து விளங்குவதால் முற்றுகைப் போரில் அவனை விரைந்து வெல்ல இயலாது’ என்ற புறநானூற்றுக் கருத்தையும் இதனோடு ஒப்புநோக்குதல் வேண்டும் (புறம் 109). ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் என்ற அரசன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் பாதுகாத்து வந்தான் (சிறுபாண் 233). சங்க இலக்கியங்கள் உழவரைச் சுட்டும்போது மலைகண்டாற் போன்ற நிலைபொருந்திய உயரமுள்ள பெரிய பல நெற்கூடுகளை உடைய உழவனே’ என நெற்களஞ்சியத்தோடு அவனை இனைத்துப் பேசுகின்றன (நற் 60).
உழவர் தங்கள் வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருள்களை வறியோர்க்கு வழங்கும் பண்பை இயல்பாகப் பெற்றிருந்தனர். இதனாலேயே வேளாண்மை என்ற சொல் ஈகை, கொடை, உதவி என்றும் பொருள் பெற்றது. வேளாண் தலைவன் பண்ணன் என்பவன் இரவலர்க்கு வழங்கும் ஈகைப் பண்பை அறிந்த சோழன் கிள்ளிவளவன் தான் உயிர் வாழும் நாளையும் பண்ணன் பெற்று வாழ்வானாக என்று வாழ்த்தினான். வேளாண்மைச் செல்வத்தால் பிறர் வறுமையை போக்கும் பண்ணனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்ற பொருளாழமிகுந்த தொடரால் சோழ மன்னன் சிறப்பித்தான் (புறம் 173). இத்தொடர் உழவர் அனைவர்க்கும் பொருந்துவதாகும். உழவரே போர்க்காலங்களில் படைக்கருவி ஏந்திப் போர்க்க்ளம் செல்வர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது (1587). தமிழகத்தில் போர்புரிய சத்திரியர் என்று தனி இனம் இருந்ததில்லை. இரப்போர் சுற்றமும் மன்னனது ஆட்சிச் சிறப்பும் உணாவை விளைவிப்போர் கையில் தங்கியுள்ளது என்கின்றார் இளங்கோவடிகள் (10;149-150). சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில் வேளாண்மை வளத்தையும் உழவரது உயர்ந்த வாழ்வையும் இசையுடன் இணைந்த உழவுத்தொழிலையும் சித்தரிக்கின்றது (10:135-139) திருவள்ளுவர் உழவிற்கென்று தனி அதிகாரமே வகுத்துள்ளார். அரசனது வெண்கொற்றக் குடை உழவரது குடையின் கீழ் அடங்கும். உழவர் உழவுத் தொழிலைக் கைவிடுவார்களானால் பற்றை விட்டோம். துறவியர்க்கும், வாழ்வில்லை, உழவே தலை என உழவின் மேன்மையை தொகுத்துரைக்கின்றார். உழவர் குறித்த இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாகக் கம்பர்  ‘ மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை’ என்கின்றார். ’உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு’ என்பது ஒளவையின் வாக்கு.
அன்று இயற்கை உரத்தால் தமிழக வேளாண் நிலம் வளஞ்செறிந்து விளங்கியது. (நற்.345). ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவு விளைச்சல் மிகுந்திருப்பதைப் புறநானூறு பதிவு செய்துள்ளது (புறம்.40) கெளரவர் போர் முடியும் வரையில் உதியன் சேரன் இருபடை வீரர்க்கும் பெருஞ்சோறு குறையாது வழங்கியுள்ளான் (புறம்.2) காவிரி பாயும் சோழ வள நாட்டில் வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் நெல் விளையும் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது (246-248). பாண்டியனது மதுரை மாநகரில் நீர் வளச் சிறப்பால் ‘உழவுத் தொழில் ஓங்கி வளர்ந்தது; விதைத்த ஒரு விதையிலிருந்து ஆயிரக்கணக்கான தானியங்கள் விளைந்தன. விளைநிலங்களும், மரங்களும் ஏராளமான பயனைத் தந்து சிறந்தன; மக்கள் பசியும், நோயில்லாமல் அழகுடன் மகிழ்ந்து வாழ்த்தினர்’  என்று மதுரைக்காஞ்சி குறிப்பிகின்றது (10-13) இயற்கை உரம் ஊடுபயிர் (மலைபடு ; 121-123), சுழற்சி வேளாண்மை (குறு. 384), திணைசார்ந்த பயிர் விளைச்சல் இவற்றால் தமிழகம் உணவு விளைச்சலில் முனைப்புடன் விளங்கியது. நெல் முதலான நன்செய்ப் பயிர்கள் மட்டுமல்லாமல் கருங்கால் வரகு, இருங்கதிர் திணை, சிறுகொடிக்கொள், எள் எனப் புன்செய் வேளாண்மையிலும் தமிழர் அறிவுவளம் பெற்றிருந்தனர். இதனால், சங்கக் காலத்தில் உணவு
விளைச்சலிலும் வாணிபத்திலும் தமிழகம் சிறந்து விளங்கியது.
நம்முடைய இலக்கியங்களில் தான் உழவர் பற்றிய மதிப்பும், உழவு பற்றிய மரபுவழி அறிவும் பதிவாகி உள்ளன. தமிழை ஒரு பாடமாகப் படிப்பதை ஒதுக்குவதால் இந்த மதிப்பையும், அறிவையும் உணராத தலைமுறையினர் பெருகுவர். இதனால், நாம் பன்பாட்டு அடிமையாகும் நிலை உருவாகும். இன்று பூச்சி மருந்து, உயிரித் தொழில் நுட்பம் எனும் மரபீனி மாற்றம் செய்த விதைகளால் நம் உடல்நலமும்., சுற்றுச்சூழலும் விளைநிலங்களும் சீர்கெட்டு வருகின்றன. மூவாயிரம் ஆண்டுகள் மாறாத வளத்துடன் விளங்கிய விளைநிலங்கள் மூன்றே ஆண்டுப் பசுமைப்புரட்சியில் கிழடுதட்டிப் போய்விட்டன. அள்ளிக் கொடுத்த உழவர்கள் கடனாளியாகி விட்டனர்.வேளாண்மையை மதிக்காத குமுகாயம் உருவாகின்றது. நெல் வயல்களை வேலியாகக் கொண்ட திருநெல்வேலி தன் பெயர் அடையாளத்தை வேகமாக இழந்து வருகின்றது. விளைநிலங்கள் வீட்டுமனையாக மாறும் இந்த நிலைதான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.ஒவ்வொரு ஊரையும் சுற்றி வளமான விளைநிலங்கள் அன்று இருந்ததை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.(நற்.390) நிலத்தின் வளம் பெருகுவதும், சுருங்குவதும் அந்த நிலத்தில் வாழும் மக்களின் எண்ணத்தைச் சார்ந்தது, வாழ்பவர் இயல்பிற்கு ஏற்ப நிலம் இருக்கும், நிலத்திற்கு என்று தனியான இயல்பில்லை என்று புறநானூறு கூறுகின்றது (புறம்.185) விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டவோ மண் நிரப்பவோ கூடாது என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றார். மற்ற ஆட்சியர்களும் இதனைப் பின்பற்றினால் நன்மை விளையும்.
 நெல்லையும், மலரையும் தூவி வழிபடுவது நம் பண்பாடு. மங்கல நிகழ்வுகளில் நாழி நிறைய நெல்லை குவியலாக வைத்து வழிபடுவர். இதனை ‘நிறைநாழி நெல்’ என்பர். ஆனால் இன்று ஒரு துணிக் கடையில் பட்டாடை விளம்பரத்தில் மணமகள் நிறைநாழி நெல்லைக் காலால் எட்டி உதைத்து வீட்டுக்குள் வருவதாகத் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். இதைத் தான் பண்பாட்டுச் சீரழிவு என்கிறோம். தெய்வமாகப் போற்றிய  நிறைநாழி நெல்லை எட்டி உதைத்துக் கீழ்மைப்படுத்தும் சமுதாயம் விளைநிலங்கள் அழிந்து சுருங்குவதை பற்றி கவலை படவா செய்யும்?.
வழிப்பாட்டிலும், மங்கல நிகழ்வுகளிலும் பல வகைத் தானியங்களை மண்கலத்தில் வளர்த்து அந்த முளைப் பாலிகையை நீரில் விட்டு நாடு வளம் பெற வேண்டுவது நமது பண்பு. இன்றும் இவ்வழக்கம் திருமண நிகழ்வுகளிலும் கிராம மக்கள் வழிப்பாட்டிலும் உள்ளது. ஆனால் ’’யாகம்’’ என்ற பெயரில் ஒன்பான் தானியங்களை நெருப்பில் போடும் பழக்கம் பெருகி வருகின்றது. இது நமது உயர்வான வேளாண் மதிப்பிற்கு எதிரானது. நிலத்தையும்  காலத்தையும் முதற்பொருளாக கருதிய தமிழர் அறிவுநுட்பத்தை தமிழ் கல்வியால் மட்டுமே அறிய முடியும்.
மக்கள் தொகை மிகுந்த நாடு வேளாண்மைக்கு முதன்மை கொடுத்துச் சிந்திக்கவில்லை என்றால் விளைவு என்னவாகும்?.
கடந்த கால வேளாண் வரலாற்றை உணர்ந்தால் தான் அதை நிகழ்காலப் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்து அழிவைத் தடுத்துப் புதிய ஆக்கங்களைப் பெருக்கிச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஊகவணிகம், உலக வணிகம், வணிக ஒப்பந்தம், தேவையற்ற வேளாண் இறக்குமதி, கட்டுப்படி ஆகாத வேளாண் வேளாண் செலவு இவற்றால் உழவர்கள் மூச்சுத் திணறுவதைப் பற்றிக் கற்றோரில் எத்தனை விழுக்காட்டினர் கவலைப் படுகின்றனர்?.
எல்லாவற்றையும் பணமாக  மட்டுமே பார்க்கும் கல்வியால் மனித மாண்பு பழுது பட்டுப் போகும். மண்ணை மறந்த கல்வியால் நிலவளத்தை மட்டுமன்று நில எல்லை பரப்பையும் இழந்தோம். கடவுளையும், சாதியையும் காப்பாற்றும் கவலையில் சிறிதளவுக் கூட கற்றவரிடம் வேளாண் வீழ்ச்சி பற்றிய கவலை இல்லை. தமிழ் இலக்கிய கல்வி மண் மீதும், மாந்தன் மீதும் பற்று கொள்ளும் பண்பை வளர்க்கிறது. பிறரைச் சாராமல் நம்முடைய இயற்கை வளங்களைப் பெருக்கி நமக்கு நாமே வாழும் வகையை வகுத்துக் கொள்ளும் அடிப்படை அறிவு நம்முடைய சங்க இலக்கியங்களில் தான் உள்ளது.
 நிலமும் நீரும் மணலும்    
உணவைத்தரும் வேளாண்மைக்கு முதன்மையானவை நிலமும் நீருமாகும். எனவே தான் புறநானூறு ’உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கின்றது (18) ’நீரின்று அமையாது உலகம்’ என நற்றிணையும் (1) திருக்குறளும் குறிப்பிடுகின்றன. குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியனிடம், ‘’ வானாவாரி நிலம் மிகப் பரந்த அளவில் உடையதாக இருந்தாலும் அது ஓர் அரசனுக்குப் பெருமை  தராது. ஆதலால், நிலம் குழிவாக உள்ள பகுதியில் நீண்ட நெடிய கரை அமைத்து நீரைத் தேக்க வேண்டும். இவ்வாறு நீரைத் தேக்கியவரே இந்த உலகத்தில் தங்கள்  புகழைத் தளைத்தவராவர்’’ (புறம் 18) என்று குளம் தொட்டு வளம் பெருக்குவதே மன்னன் கடமை என்று பட்டினப்பாலையும் வலியுறுத்துகின்றது. (284) ’மழை பிணித்து’ ஆண்ட மன்னன் என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது.
தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர். இரண்டு பக்க பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118). கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள் 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம். அரசன் பெயரில் குளம் இருப்பதைக் ‘’கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்’’ (நற்.340) என்று நற்றிணைத் தெரிவிக்கின்றது. குளங்களுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம் 252) ’’நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர்’’ (அகம் 237) என நீர் வளத்தோடு இணைந்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நீர் வளத்திற்கு அடிப்படையான மழையின் பயனைத் திருவள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் நுட்பமாகத் தொகுத்துரைக்கின்றார்.
நீர் குறித்த நம் முன்னோரது துடிப்பான செயல் பாடும், சிந்தனையும் இன்று அறுந்து போய்விட்டன. பல்லாயிரம் ஆண்டுகளாக வளத்துடன் விளங்கிய ஆற்றின் படுகைகளும் குளங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், தாள் ஆலைகள், ஆகியவற்றின் கழிவுகளால் பவானி, நொய்யல், அமாராவதி, பாலாறு, போன்ற ஆறுகள் மாசடைந்து விட்டன.. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்னும் ஏமாற்றுச் சொற்களால் மக்களின் வாழ்வடிப்படைகளான நிலவளமும், நீர் வளமும் , அழிக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநில , வெளிநாட்டுக் குப்பைகள் ந்ம் நிலத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மண்ணைக் காக்கும் மன வலிமை நம்மிடம் மழுங்கி விட்டது.
 நிலத்தின் மடியில் நீரைத் தேக்கி வைப்பது மணல் மன்னர்களை வாழ்த்தும்போது ‘கடற்கரையில் பெருங்காற்றுத் திரட்டிக் குவித்திருக்கும் மணலினும் நெடுநாள் புகழுடன் நீ வாழ்வாயாக (புறம் 55) என மணலை வாழ்த்துவதற்குறிய மங்கலப் பொருள்களுள் வைத்து மதித்தனர், ‘’தொட்டனைத் தூறும் மணற்கேணி’’ (குறள் 396)  ’’ஆற்றுப் பெருக்கற்று அடிச்சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்’’ (நல்வழி 9) என மணலின் அருமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மணலை அளவோடு எடுத்துப் பயன் படுத்தாமல் ம்டு அறுத்துப் பால் குடிக்கும் செயல் போல அதனைப் பெருமளவில் இன்று கடத்துகின்றனர்.
உயிர் உள்ள அஃறிணைப் பொருளோடும் உயிர் அற்ற அஃறிணைப் பொருளோடும்  மனித உயிர் பிணைக்கப் பட்டுள்ளதை தமிழ் இலக்கியங்கள் நுட்பமாக பதிவு செய்துள்ளன.உயர்திணை என்று மக்களைச் சூட்டிய தொல்காப்பியர் அஃறிணையைத் தாழ்ந்த திணை என்று கூறாது கருப்பொருள் என்று பகுத்தார். மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழற்காடும் மாந்த வாழ்விற்கு அரண் என்கின்றார் வள்ளுவர் (குறள் 742).
மழையே மழையே தூரப்போ (rain rain go away)  என்று படிக்கும் மாணவர் உள்ளத்தில் மண்ணையும், மணலையும், நீரையும் பற்றிய சிந்தனை எப்படித் தோன்றும்?
வாழ்வியல் சிந்தனை பொருளியல்  பண்பாடு என அனைத்திற்கும் மேல் நாட்டு நடைமுறைகளை நாம் கடைபிடிப்பது தவறு.
இந்த மண்ணிற்கு பொருத்தமான வாழ்வியல் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் தான் உள்ளன. நீரைச் சேமிப்பதிலும்  நீர்பாசன அமைப்புகளை உருவாக்குவதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தை இயற்கைச் சூழலே தமிழ் நாட்டிற்கு ஏற்படுத்தியிருந்தது. எனவே தான் தமிழ் நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே 30000க்கும் ஏரிகள் உருவாக்கப் பட்டிருந்தன. மழைநீரைச் சேமித்து வைப்பதற்கேற்ற நீர் நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாய கடமை. என்று புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. குளம் அமைக்கப் படும் நிலத்துக்கு ஏற்ப நீர்க்கொள்ளவும், நீர்பரப்பும் இருக்கும். குளத்தை எப்படி அமைக்க வேண்டும்? எங்கு அமைக்க வேண்டும்? குளத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பதினெண்கணக்கு நூலான சிறுபஞ்சமூலம் (பாடல் 64) தெரிவிக்கிறது.
கோடு என்பது குளத்திலிருந்து வெள்ள நீர் வெளியேறும் கலிங்கு. குளம் நிரம்பி வழிவதைக் கோடிப் பாய்ந்து விட்டதென்றே இன்னமும் கிராம மக்களில் கூறுகின்றனர்.
குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலை அமைத்தல், உழுவயல் ஆக்குதல், கிணறு தோண்டுதல் என்ற 5 பணிகளைச் செய்வதன் சுவர்க்கம் போனான் என்று சிறுபஞ்ச மூலப் பாடலுக்குப் பொருள் கூறுவார்கள். ஆனால் இவற்றை ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டதாகக் கருதிப் பாடலுக்கு பொருளை ஆராய்ந்தால் பொருத்தமான உரை புலன் ஆகும்.
1.   குளம் அமைத்தல்
2.   மிகைநீர் வழிய கலிங்கு  அமைத்தல்
3.   குளத்துக்கு வரும் வரத்துக்கால் ; விவசாயத்திக்கு தண்ணீர் வழங்கும் மதகு.தூம்பு, கலிங்கிலிருந்து வெள்ள நீர் வெளியேறும் பாதை ஆகிய வழிகளை செவ்வனே அமைத்தல்.
4.   பாசனம் பெரும் பகுதியை உழுவயல் ஆக்குதல்
5.   தண்ணீர் குறைவின் போது பயன் படுத்த ஊர் போது கிணறு அமைத்தல்
ஆகிய ஐந்தையும் செய்பவன் சொர்கத்துக்கு போவான் என்பது ஏரி பாசன அமைப்புக் குறித்து நமக்கு ஒரு வரைபடத்தைத் தருகிறது. ஏரி, குளங்களில் இருக்க வேண்டிய கட்டுமானங்கள் பற்றியும், சங்கப்பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. மடை என்பது ஆறு, ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப் படுகிறது. மடையில் ஒரு கதவு இருக்கும்,,. கதவைத் திறந்தால் (மடை திறந்த வெள்ளம் போல) தண்ணீர் வெளியேறும். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது.மதகு,மடை அமைப்பில் இருந்தாலும் இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.(தற்காலத்தில் திருகு மதகு அடைப்பான் பயன் படுத்தப் படுகிறது)  குமிழி என்பது குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து அதில் துளையிட்டு  அதன் வழியே தண்ணீர் புகுந்து வெளிவரும் அமைப்பு. மரத்தாலான சக்கையால் குமிழியின் வாயை அடைப்பார்கள்.  தூம்பு நீண்ட குளாய் அமைப்பின் வழியாக நீர் சரிந்து இறங்கி வெளியேறும் அமைப்பு , யானையின்  கை உள்தூளையிருப்பதால் தூம்புக்கை தும்பிக்கை ஆனது. மடை, மதகு, குமிழி போன்றவையெல்லாம்  குளக்கரையிலிருந்து சற்று உள் வாங்கித் தொலைவிலேயே இருக்கும். குளத்தின் ஆழமானப் பகுதியில் அமைந்துள்ளதால் குளத்திலுள்ள தண்ணீர் முழுவதையும்  பயன் படுத்த முடியும். தண்ணீரில் நீந்திச் சென்று முழ்கித் தான் மடையைத் திறக்க முடியும். எனவே நீர்க் குடும்பரையும், மடைக்குடும்பரையும் தவிர வேறுயாரும் எதுவும் செய்ய இயலாது. (இப்போது கரையிலேயே கட்டுமானங்கள் அமைப்பதால் யார் வேண்டுமானாலும் திறக்கலாம். மேலும் உயரத்தில் அமைக்கப் படுவதால் கீழே உள்ளத் தண்ணீர் வீணாகத்தான் நிற்கும்)  

Thursday, 13 September 2012

மருத நிலத்தில் இரும்பின் பயன் பாடு

இரும்பு காலம்

இரும்பின் பயன்பாடு தெரிந்த காலம் எனப்பட்டது. பெருங்கற்காலத்துடன் இணைந்து காணப்படுகின்றது. இந்த காலத்தில் விவசாயம் கால்நடை முக்கிய தொழிலாக இருந்தது.நிலையான ஒரிடத்தில் வீடுகளை கட்டிக்கொண்டு கிராம வாழ்க்கை வாழத்தொடங்கிய காலம். இந்த காலத்தில் இரும்பை உருக்கி ஆயுதமாகச் செய்யத் தெரிந்திருந்தனர். உலோகங்களுக்கு இணையான மட்கலங்களையும் செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இந்தகாலம் கி.மு.1000லிருந்து கி.பி.300 வரையிலாகும்.

இரும்பு;

கற்கால மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அல்லது தற்காப்புக்காகவும், வேட்டையாடுவதற்காகவும் கல்லாயுதங்களைக் கண்டுபிடித்தனர்.ஆனால் நாளடைவில் கல்லாயுதங்களால் தங்களுடைய முழுமையான தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கல்லாயுதங்களைவிடக் கூர்மையான, எளிதான ஆயுதங்களைத் தேட முற்பட்டனர். இதைப் பேன்ற தேடுதலால் உலோகம் எதிர்பாராதவிதமாக அல்லது எதச்சையாகக் கண்டுபிடிக்கப் பட்டது என்று கூறலாம். கற்களைவிட எளிதாகவும், கூர்மையாகவும் பயன்படுத்தப்பட்ட உலோகப் பயன்பாட்டில் செப்பு குறைந்த வெப்பத்தில் உருகுகின்ற உலோகம் என்பதுடன் எளிதில் கிடைக்கின்ற உலோகமும் ஆகும். ஆனால் எளிதில் வளையும் தன்மையுடையது. இதனால் செப்பைவிட  உறுதியான உலோகம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து தேடியுள்ளனர். இதன் விளைவாக இரும்பு கண்டுபிடிக்கப் பட்டது என்று கருதுகின்றனர். இரும்பின் பயன் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அகழ்வாய்வுகளின் அடிப்படையில் இரும்பு பெருங்கற்கால மக்களுடன் இணைந்து காணப்படுகின்றன என்பது உண்மை.பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் உலோகப்பொருட்களும் மற்ற பொருட்களும் படையல் பொருட்களாகக் காணப்படுகின்றன. எனவே தமிழகத்தில் கி.மு.1200க்கு முன்பிருந்து இரும்பைப் பயன்படுத்திய மக்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழ்ந்தனர். தமிழகத்தில் கோவை,தர்மபுரி, சேலம், வடஆர்க்காடு, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரும்பை உருவாக்கியதற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.சென்னைக்கு அருகில் பல இடங்களில் இரும்பை உருக்கிய உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் இரும்பு;

பையம்பள்ளி அகழாய்வில் இரும்பு ஆயுதங்கள், இரும்பை உருக்கிய கசடு அதிக அளவில் கிடைத்துள்ளன. இதனால் இங்கு இரும்பை உருக்கவும் அதைக் கொண்டு ஆயுதங்களைச் செய்யவும் மக்கள் தெரிந்திருந்தனர் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகின்றனர். பையம்பள்ளியில் இரும்பை உருக்கிய காலம் கி.மு.600 என்பது தெரியவருகின்றது.இங்கு இரும்பு ஆயுதங்களைச் செய்யும் பிரிவினர் இருந்தனர்.

கிருட்டிணகிரி மாவட்டத்தில் குட்டுர் என்ற இடத்தில் கி.மு. 500ல் இரும்பை உருக்கிய உலை கிடைத்துள்ளது. இங்குச் செய்யப்பட்ட அகழ்வாய்வில் இங்குள்ள மலை அடிவாரத்தில் இரும்புச் சிட்டங்கள் (cinder), ஊதுகுழாய்கள் (vertified mouth),சாம்பல் போன்றனக் காணப்படுகின்றன. குட்டுர் அகழ்வாய்வில் நீள வட்டவடிவமான உலைகள் இரண்டு கிடைத்துள்ளன. இவை 2.02 மீட்டர் நீளம், 0.60 மீட்டர் அகலம், 0.45 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளன. செங்கல் சுவர்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் மையப்பகுதியில் உள்ளது காற்று ஊதுகின்ற பகுதியாகப் பயன்பட்டுள்ளது. இதையடுத்துள்ளவை இரும்புத்தாது சூடாகத் தேவையான எரிப்பொருள் ஆகியன வைக்கப்பட்ட இடமாக இருக்கலாம். இதைப் போன்ற பெரிய உலை மற்ற இடங்களில் இல்லை என்று கூறலாம்.

மோதூர்அகழ்வாய்வில் இரண்டு வட்டவடிவங்கள் ஒன்றையடுத்து ஒன்று இருந்தன. இந்த இரண்டு வட்டங்களும் சிறிய குழாய் போன்ற இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வட்ட வடிவங்களின் அருகில் இரும்புச் சிட்டங்களுல், ஊதுக்குழாய்களும் செம்மண்ணால் செய்யப்பட்டதால் கருகிச் செந்நிறமாகக் காணப்பட்டது. மேலும் அதன் அருகில் புடம் போடும் சிறிய கலங்கள் கிடைத்துள்ளது. இங்கும் இரும்புப் பொருள்கள் ஆயுதங்கள், செப்பு வளையல் போன்றவை கிடைத்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் அகழ்வாய்வில் இரும்பை உருக்கிய உலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சென்னிமலை என்ற இடத்தில் இரும்புத்தாது அதிக அளவில் கிடைக்கின்றன். இரும்பை உருக்கும் ஆலை இருந்த இடத்தில் இரும்பு கசடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. உலை இருந்த இடத்தில் வெள்ளை நிறத்தில்  வட்டவடிவில் காணப்பட்டது. உலையின் விட்டம் 1 மீட்டர் இருந்ததுடன் இங்கு ஏற்பட்ட சூட்டினால் மண் வெள்ளை சாம்பலாகக் காணப்படுகின்றது. உலையின் அமைப்பு சுண்ணாம்பு களவாய் போன்றுக் காணப்படுகின்றது.இதன் அடிப்பகுதியில் 15 செ.மீ நீளமும், 6 செ.மீ விட்டமும் கொண்ட சுடுமண்ணால் ஆன ஊதுலைகள் பொருத்தப்பட்டுள்ளன. உலையில் இடப்பட்ட இரும்புத்தாது உருகி வருவதை இரும்பு தனியாகவும் கசடைத் தனியாகவும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன. இரும்பு உலையைக் சுற்றிலும் கசடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.இரும்பை உருவாக்கியத்தடையங்கள் மேலும் பல இடங்களில் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

இரும்பினால் ஆன கருவிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டவை. விவசாயம் செய்யப்பயன்படுத்த பட்டவை, இமச்சின்னங்களில் இருந்த இரும்புப் பொருள்கள் பெரும்பாலும் சிதைந்த நிலையிலுல், உருவம் தெரியாத நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கத்தி, நீண்டவாள், கேடயம், அம்புமுனை, அரிவாள்,மணி, வாள், கடப்பாரை, ஆணி, ஊக்கு, வளையல் போன்றன கிடத்துள்ளன. ஈமச்சின்னங்களில் 4 அடி முதல் 5 அடி நீளமுள்ள நீண்ட வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கோடரி பல அளவுகளில் காணப்படுகின்றன.இரும்புப் பொருள்கள் அனைத்தும் உலையில் வைத்துத் தட்டி உருவாக்கப்பட்டவை.

ஆதிச்சநல்லூர் பெருங்கற்காலச் சின்னம் தாழி வகையைச் சார்ந்தது. இங்கு இரும்பு, வெங்கலம், தங்கம் ஆகியவற்றிலான பொருள்கள் கிடைத்துள்ளன. வெங்கலப் பொருட்கள் அழகான வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. வெங்கலத்தினால் செய்யப்பட்ட சாடிகள் , வட்டவடிவமான கிண்ணங்கள், மூடிகள், போன்றன குறிப்பிடத்தக்கன.மூடிகள் அலங்கார வேலைப்பாடுகளுடன் மூடிகளின் மேல் பிடி பறவைகள் போன்ற அமைப்பிலும் உள்ளன. இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள்கள், மண்வெட்டிகள், கோடரிகள்,திரிசூலம், அம்புகள், வாள்,ஈட்டிகள், கிடைத்துள்ளன. இங்கிருந்த  மக்கள் வெங்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டு வேட்டையாடுவதற்கும், விவசாயம் செய்வதற்கும் தேவையான ஆயுதங்களைச் செய்யத் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.தங்கதினால் ஆன 19 மகுடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மகுடங்கள் தலையில் வைத்து கட்டுவதற்டு ஏற்றாற் போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.

நன்றி
பொதிகை குடும்பன்

Thursday, 2 August 2012

நாட்டுப்புற இலக்கியம் காட்டும் வேளாண்மை..

24 May 2012

மனிதன் பேசத் தொடங்குவதற்கு முன் தன் எண்ணங்களைச் சைகைகளாலும்,உணர்ச்சிகளை ஓசைகளாலும் வெளிப்படுத்தினான். தன் உணர்ச்சிகளை ஓசைகளின் வழிஉணர்த்தியபோது சொற்கள் பிறந்தன. இச்சொற்கள் காலப்போக்கில் பேச்சுமொழியாகமலர்ந்தன. இப்பேச்சு மொழியில் சொற்களும் ஓசைகளும் கலந்து வந்தபோது பாடல்களாகஎழுந்தன. இலக்கணம் தோன்றுவதற்கு முன் சொற்கள் ஒழுங்குடன் இசையுடன் இணைந்துஅமைந்ததே நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இலக்கணம் என்னும் சிறைக்குள் சிக்காதுகட்டடற்ற காட்டாறாய் பெருகி வருவது சமுதாயத்தின் உயிர்த்துடிப்பு, உண்மையின்பிரதிபலிப்பு, உணர்ச்சி உந்தலின் அப்பட்ட வெளியீடு என்று நாட்டுப்புற பாடல்களின்பெருமையினைத் தமிழ்த்தந்தை .வே. சுப்ரமணியனார் குறிப்பிடுவர்.

மனித நாகரிகம் தொன்மைக்காலத்தில் ஆற்றங்கரைகளிலே தொடக்கம் பெற்றதாகவரலாற்று வல்லுநர்கள் வகுத்துரைக்கின்றனர். தனிமனிதன் பிறரோடு வாழத்தொடங்கியகாலமே சமுதாயம் உருவான காலமாகும். தனக்கு என்ற மனப்பான்மை விலகி நமக்குஎன்ற உணர்வோடு, ஒற்றமையோடு வாழ்வின் வளத்திற்கு உழைக்க முற்பட்டான்.இவ்வாழ்வின் உன்னதநிலையே வேளாண்மைத் தொழிலாக உருப்பெற்றது. தொன்மைமிகுந்த தொழிலாகக் கருதப்பெறும் வேளாண்மைத் தொழில் குறித்த செய்திகளஇலக்கியங்களில் சிறப்பாகக் காணப்படுகின்றன.  

குறிப்பாகப் புறநானூற்றுப் பாடலில்,
பொருடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயனே” (புறம்:35; 25-26)

- எனப் பகைவர்களைப் போர்களத்தில் வென்று சிறப்பிப்பதற்கும் உழுதொழிலேஅடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பது புலனாகின்றது. அது மட்டுமல்லாமல்உழவர்கள் உலக மக்களின் வாழ்வு வண்டிக்கு ஆணியாகக் கருதப்பட்டமையை நம்வள்ளுவப் பெருந்தகை உழவு என்ற அதிகாரத்தின் கீழ் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.

உழுதொழிலின்போது ஏற்படும் களைப்பைப் போக்கப் பாட்டுப் பாடியுள்ளனர். ஏரைப் பூட்டிநின்றோர் பாடிய முகவைப் பாட்டு நெல்ல முகந்து அளந்து கொடுக்கும்போது பாடியபொலிப்பாட்டு குறித்த குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
வேளாண்மைப் பாடல்கள் வழி காணப்பெறும் சிறப்புப் பண்பாட்டுக் கூறுகளை மூன்றுநிலையில் முறைப்படுத்திக் காணலாம். அதாவது, (1) உழும் முன் (2) உழும் போது (3) உழவுநிறைவுற்றபின். பழங்காலத்தில் நாட்டுப்புற மக்கள் ஒவ்வொரு நிலையிலும் பாடல் பாடினர். ”வேளாண்மையைப் பாடல்களின் நீட்டம் உழவன் ஏரில் காளைகளைப் பூட்டியதிலிருந்துதொடங்கி விதை விதைத்து அதனை அறுவடை செய்து, கதிரடித்துக் குவித்துக் குதிரில்போடுகின்றவரை நீடித்துச் செல்லும் என்று கூறுகின்றார்.
உழும் முன் :

உழுவதற்கு முன் நிலத்தை பேணுதல் :
உழவர்களுக்கு நிலமும் நீரும் வாழ்வின் முதலீடுகளாகும். நிலத்தைத் தன் உயிரினும்மேலாகக் கருதினர். வயலை நாள்தோறும் பேணிக் காக்க தவறினால் ஏற்பட்ட இடர்பாட்டைவள்ளுவர் கூறுகையில்,
செல்லான் கிழவ னிருப்புனிலம் புலன்ந்
தில்லாளி னூடி விடும்” (குறள்: 1039)

- என்று படம்பிடித்துக் காட்டுகிறார். ”நாட்டையாளுகின்ற மன்னனும் நிலத்தைப் போற்றும்உழவனைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற குறிப்பும் மறைமுகமாகஉணர்த்தப்படுவதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இக்கருத்தை அரண் செய்யும்வகையில் மண்ணின் மகத்துவத்தை,
காணி அலங்கார மாம்
காணி காலு சிங்காரமாம்
காணி சுத்தி இருக்கும்
வரப்புகளும் ஒய்யாரமாம்

- என்று குளித்தலை வட்டார வழக்குப் பாடல்கள் புலப்படுகின்றன.
மாட்டின் நலம் காக்க வேண்டுதல் :

நாட்டுப்புற மக்கள் உழவுத் தொழில் தொடங்குவதற்கு முன் தங்களின் வாழ்விற்காகத்தன்னையே அர்ப்பணிக்கும் மாடுகளின் நலத்திற்கு இறைஞ்சுகின்ற வழக்கம்காணப்படுகிறது. தங்களோடு சேர்ந்து வாழ்ந்து மரணமடையும் மாடுகளைத் தங்களின்உறவாகக் கருதி அவற்றிற்கு உழவுத்தொழில் நடைபெறும்போது துன்பம் வந்திடாதிருக்கஇறைவனிடம் வேண்டுகின்றனர். ”காக்கை குருவிகள் எங்கள் சாதி என்று இந்நூற்றாண்டில்எண்ணுவதற்கு முன்பே நாட்டுமக்கள் மாடுகளைத் தமது உறவாகக் கொண்டு பழகியமைகாணப்படுகிறது.

பூட்டின மாட்டுக்கு
பிழைமேலும் வாராமல்
கட்டின மாட்டுக்குக்
கலகம் வந்து சேராமல்
காரும் கணபதியே

- எனும் வேண்டலிலிருந்து அறிய முடிகின்றது.
மழை வேண்டல் :

உழவர்கள் பயிர்வளர, விளைச்சல் பெருக மழையைப் பெரிதும் எதிர்நோக்குவர், நீரின்றிப்போனால் மனிதனுக்கு வாழ்வின்றிப் போகும். நாட்டில் வளம் குன்றிப்போகும். இந்தஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்,
இருபதியா லெட்டால் இன்னைக்கு
இருட்டாதோ மானம்
இருட்டாதோ மானம்  அந்த
பிரட்டாசி மாசம்
பிரட்டாசி மாசம்  அங்கே
பேயாதோ மானம்
பேயாதோ மானம்  இன்னிக்கு
பெருகாதோ ஏரி

- என்ற புரட்டாசி மாதத்தில் மழை எதிர்பார்த்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மழை சோறு உண்ணல் :

வேளாண் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழையைக் குறித்துப்பலவிதமான நம்பிக்கைகள் காணப்பெறுகின்றன. கிராம மக்களிடம் மழைபொழியமழைச்சோறு உண்ணும் பழக்கம் காணப்படுகிறது. பருவமழை பெய்யாது பொய்த்துவிட்டால் வருணபகவானிடம் வேண்டுதலும் வழிபாடும் நடத்துவர்.  

மழை பொய்த்த காலத்தில் பெண்கள் வீடுவீடாகச் சென்று அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகுமுதலியவற்றைப் பெற்று ஒன்றாகச் சேர்ததுச் சமைத்து உப்பிடாது உண்பர். இதனைமழைச்சோறு என்றும் குறிப்பிடுவர். எல்லோரும் உண்டபின் பெண்கள் தங்கள்குழந்தைகளுடன் பரதேசம் போவதாகப் பாவனை செய்வர். வயது முதிர்ந்த பெண்கள்மாரடித்துக் கெண்டு இடுகாட்டை நோக்கிப் பாடிக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்தால்மழை பொழியும் என்னும் நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்பதைநினைவூட்டும் வகையில்,

வருண பகவானே
உரிய மழை பெய்யவேணும்
மழை பெய்யலையே
மானமே போகுதடி
என்சோட்டு பெண்டுகளே
விரதங்கொள வாருங்கடி
மழைச்சோறு ஆக்கி
மனசாரக் குடிச்ச பின்னே
இடுகாட்டை பார்த்து
மாரடிச்சுப் போவோமடி
மனமிரங்கி மழைமேகம்
மழை பெய்ய வேணுமடி

- என்று பெரம்பலூர் வட்டப் பாடல் அமைந்துள்ளது.
உழும்போது :

ஏற்றம் : 

உழுதொழிலின் தொடக்கமாக ஏற்றம் இறைத்தல் காணப்படுகிறது. ஏற்றம் இறைத்தலின்மூன்று வகைகளை வழக்கத்தில் கொண்டுள்ளனர். (1) கவலை ஏற்றம் (2) ஆளேறும் ஏற்றம்(3) பரி ஏற்றம். ஏற்றம் இறைக்கும்போது பாடல் பாடும் பழக்கமும் இருந்தது என்பதை,
ஏழை எல்லாம் கூடி
ஏத்திறைப்போம் வாங்க
பஞ்சை எல்லாம் கூடி
பரி இறைப்போம் வாங்க

- என்று பரியேற்றப்பாடல் துறையூர் வட்டத்தில் காண முடிகின்றது.

மழைக்குரிய பயிரிடுதல் :

கிராமங்களில் வானம் வழங்கும் நீரின் அளவிற்கேற்பப் பயிரிடும் வழக்கம் இருந்துவருகிறது. மழையின் அளவைப் பொறுத்து அதற்குரிய பயிர் விளையச் செய்கின்றனர்.நாள்தோறும் மழை பொழிந்தால் நெல்லைப் பயிரிடுவர். விட்டுவிட்டு மழைப் பொழிந்தால்சோளத்தை பயிர் செய்வர். கம்பி போன்று மழை பொழிந்தால் கம்பு பயிரிடுவர்.
நித்தம் மழை பேஞ்சா
நம்ம நெல்லு பயிரேறும்
சோனை மழை பேஞ்சா
நம்ம சோளம் பயிரேறும்
கம்பி மழை பேஞ்சா
அங்கே கம்பு பயிரேறும்

- என்று முசிறிவட்ட வழக்கு பாடல்கள் சித்திரிக்கின்றன.
குலவைப்பாட்டு :

வயலில் இறங்கி வேலை செய்யும் போதும், நாற்று நடும்போதும், அறுவடையின் போதும்குலவைப்பாடல் பாடுவது வழக்கம். குலவ ஒலி பெண்கள் உதடுகளைக் குவித்து நாவினார்உரசி ஒருவகை ஒலியைக் குரலில் கொடுப்பர். இவ்வொலி கேட்பதற்கு மிகவும்இனிமையாக இருக்கும்.

எஞ்சோட்டுப் பெண்டுகளா
எடுத்துக் குலவ போடுங்கடி

- என்று இரண்டு வரிகள் பாடியதும் மற்ற பெண்கள் குலவை இடுவர்.
உழத்தியர்களை உபசரித்தல் :
வித்துக்கள் நாற்றுகளாய் வளர்ந்த நிலையில் நாற்றுகளைப் பறித்து வரிசைப்படுத்தி நடுவர்.இப்பணிக்காகப் பெண்கள் மட்டுமே வருவர். நாற்று நடலின் முதல்நாள் அனைவருக்கும்உணவளிப்பர், பூவும், குங்குமமும் கொடுப்பார்கள். நடவுப்பணி மகிழ்வுடனும்செம்மையாகவும் நடைபெற இவ்வாறு உபசரிக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
ஏலேலம்மா ஏலம்
ஏலோலங்கிடி ஏலம்
ஓல்த்தூ பண்ணை
எங்க நல்ல பண்ணை
நாத்து நட போவேருக்கு
சோறு போடும் பண்ணை
பூவும் பொட்டும் பணமும்
அள்ளிதரும் பண்ணை

உழத்தியரை உபசரிப்பதோடு பண்ணையாரையும் பாராட்டுகின்ற பண்பு கிராம மக்களிடம்இருந்தது என்பதும் புலனாகிறது.

விலங்கினம் கொண்டு தாள் அடித்தல் :

அறுவடை செய்தலின் போரடிப்பர். போரடிப்பதற்கு மாடும், யானையும், பயன்படுத்தப்பட்டவழக்கம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. இவ்வழக்கம் இன்றும் கிராம மக்களிடம்காணப்படுகிறது.
மாடு கட்டி தாளடிக்க
மவராசன் பண்ணையிலே
கண்ணு கட்டி தாளடிக்க
காராழன் பண்ணையிலே
ஆனைகட்டி தாளடிக்க
ஆறுமாசம் செல்லும்
மாடுகட்டி தாளடிக்க
மறுவருசம் செல்லும்
குதிரை கட்டி தாளடிக்க
கோடிநாள் செல்லும்

- என்று நாட்டின் வளத்தை அறியும் முகமாக விலங்கினங்களைப் போரடிக்க பயன்படுத்திவந்தமையை அறியலாம்.
உழவு நிறைவுற்றபின்:

கிராம மக்கள் கதிரவனின் கதிர் நிலத்தில் விழும் முன் கழனிக்கு வந்து அந்திவரை அயராதுஉழைக்கும் பண்பாளர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உடன்பெற விரும்புபவர்கள்.வாங்கும் பணத்தைக் கொண்டு வயிற்றை நிரப்பும் வாழ்க்கையினர். இதனை,

முதலாளி வந்தவுடன்
முதல் பணத்தை
பெத்துக்குவோம்
சீக்கிரமாய் நட்டுவாடி
சின்னபுள்ளே சிங்காரி

- எனும் பாடலில் கிராம மக்களின் உழைப்பின் உயர்வும், ஊதியத்தை விரைவில் பெறவிரும்பும் எண்ணமும் புலப்படுகின்றன.

ஆகவே வேளாண்மைத் தொழில் நாட்டுப்புற மக்களின் உயிர்த்தொழிலாக விளங்குகிறது.உழுதொழில் தொடங்கும் முன் வயலைப் போற்றுவதும், ஏரில் பூட்டப்பட்ட மாட்டிற்கு தீங்குவராது இறைவனை வேண்டுதலும், புரட்டாசி மாதத்தில் மழை பொழியும் என்றநம்பிக்கையும், மழை பொய்த்தபோது மழைச்சோறு உண்கின்ற பழக்கமும்காணப்படுகின்றன. உழவுத்தொழில் புரிகிறபோது வயலுக்கு ஏற்றம் இரைத்து நீர்பாய்ச்சுவதில் கவலை ஏற்றம், ஆளேறும் ஏற்றம், பரிஏற்றம் என மூன்று வகைப்பட்டஏற்றங்கள் காணப்பட்டமையும் அறிய முடிகின்றன.  

நாற்று நடும்போதும் அறுவடையின் போதும், போரடிக்கும் போதும் குலவை ஒலிஒலிக்கின்ற பழக்கம் காணப்படுகின்றனது. நாற்று நடுகின்ற நாளன்று உழத்தியர்களைஉபசரிக்கும் வழக்கமும், பண்ணையாரைப் பாராட்டும் பண்புள்ளமும், போராடிப்பதற்குயானை, மாடு, குதிரை போன்ற விலங்கினங்கள் பயன்படுத்தும் வழக்கமும் அக்காலத்திலஇருந்து வந்துள்ளமையை நாட்டுபுறப்பாடல்கள் வழி அறியலாம்.
தற்கருத்து :

நானும் ஒரு விவசாயிக் குடும்பத்தில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட பாடல்களை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு இன்றி, பிறர் எழுதக் கூடிய கட்டுரையின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுவதற்கு மிகவும் வெட்கப்படுகிறேன்.

இவ்வாறான நாட்டுப்புறப் பாடல்கள் தற்போது நாட்டுப்புற மக்களிடையே அருகியே காணப்படுகிறது.இதற்குக் காரணம் நாட்டுப்புற மக்களிடையே ஏற்பட்டுள்ள அறிவியல் புரட்சியே ஆகும். விரைவில் அறிவியல் நம்மை நமது கலாச்சார,பண்பாட்டுப் பிணைப்பில் இருந்து விலக்கி விடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

இவ்வாறான கருத்துக்களை உலகறியச் செய்த தமிழ் பெருமக்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாகிறேன்...