பழந்தமிழரின் வேளாண் அறிவு தமிழ் இலக்கியமும் நிலமும்

இன்றைய அறிவியல் உலகம்  நிலம், காலம்   ( TIME & SPACE ) என்று ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்விற்கு வடிவுக் கொடுத்தவர்  தொல்காப்பியர் என்பது யாவரும் அறிந்த உண்மை. தொல்காப்பியர் முப்பொருளைக் கூறுகிறார். [ முதல், கரு, உரி] இதில் முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.

’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’’


என்பது தொல்காப்பியரின் ஆய்வில் எழுந்த சிந்தனையா? என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் நமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியங்களில் இது தான் மிகவும் பழமையானது. மனிதன் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சுத்திரத்தில் இருக்கிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் குறிப்பிடுகிறார். மிகவ்உம் வியப்பிற்குரிய கலைசொற்கள் இவை. எல்லா உயிர்களுக்கும்  நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிருக்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா?, உயிரை தருவது, காப்பது, தன்னுள் கரைத்துக் கொள்வது நிலம் அல்லவா? எனவே  அதனை முதற்பொருள் என்று அழைத்தார்.  உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு  உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதபடி கடவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார் தொல்காப்பியர்.
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள்  நெருங்கிய முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் புறமான நெய்தல் என்ற நானிலங்கள் தென்பட்டன. சகாராக்கள் இல்லாத தமிழகத்தில் பாலைவனங்கள் இல்லை. ஆயினும் முல்லையும், குறிஞ்சியும், மழைவளம் குன்றும் போது சேர்ந்து போன தற்காலிக நிலையையே பாலை என்று வகுத்துள்ளார். இந்தன் பாலையைகூட நாம் மீண்டும் வளம் கொழிக்க செய்யலாம்.
இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (IMAGINARRY LANDSCPE)  இலக்கியப்படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினர். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி  மகிழும்  இனிமையையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும் தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர்  என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும்  பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்பான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியமும் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.

ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும்பொழுதாகவும் (பருவங்கள்) , சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணைகள் என்று பெயர் கொடுத்து ( குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக்கேற்பக் கருப்பொருளையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம்,. இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.

தொல்காப்பியர்  காலத்திலிருந்து நெடும்பயணம், செய்து விட்டது சமுதாயம்.  தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்தி பார்க்க அவசியம் நேர்ந்திருக்கிறது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்- பெண் உறவில் புதிய பரிணாமங்களும் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கை சூழலின் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின்  விளைவாகக் காடுகள், விளை நிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருளாகிய  மரம், செடி, கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் அழிந்து வருகின்றன.  தொல்காப்பியர் காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்போது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்துள்ளன.
ஓரளவு முதற்பொருள் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலைடையவில்லை. கடல், மலை,ஆறு, காடு சார்ந்த நில அமைப்பு  பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியரின் கோட்பாட்டை விரிவு படுத்த வேண்டும்.
 இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் வெஸ்ஸெக்ஸ் ( wessex)   நாவல்களில் ஒரு கற்பித்த  நில வடிவம் முன் வைக்கப்படுகிறது. சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும், எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.
முதன் முதலாக தமிழ் இலக்கியத்தில் நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தவர்கள் , தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை கிரேக்க காவியமான ஒடிசி யில் ஒரு வேளாண்மையாளனின் பார்வைப் பொலிந்த இயற்கைக் காட்சி தருவதைக் காட்டுகிறது.

‘’ எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட- ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல கள்ளும் கிடைக்கிறது. மழையும் மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர்  இருக்கிறது’’

 (ஒடிசி xiii)  இந்தப் பயன் மிக்க இயற்கைப்பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது. என்கிறார்.
சிந்தனையாளர் ஞானி,பழைய நோக்கை விரிவுபடுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சி முறை, தொழில், மதம், சாதி,கல்வி, மருத்துவம், வாணிகம் தமிழகத்தில் பிறக் குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள், என கருப்பொருள், உரிப்பொருளை வகை செய்யலாம் எனக் கருதுகின்றார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறுபல காரணங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.

1.  தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
2. சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளிநாடுகளில் வசித்தல்.

நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிணாமம் இவர்கள்.
நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம், இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.


தமிழ் இலக்கியத்தில்  உழவு

உழவினை மிகச்சிறந்த தொழிலாக தமிழர்கள் கருதிவந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல   நமக்கு கிடைக்கின்ற எல்லாவற்றிலும் இத்தகைய உண்மை விளங்கக் காண்கின்றோம். பிற இடங்களிற்போல உழவனைப் பழிக்கின்ற போக்கு இங்கு இல்லை. இதை நாம் இங்கு சுட்டுவது வெறியூட்டுவதற்கன்று, தமிழ்நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ள மனப்போக்கு  எதிர்கால  வளர்ச்சிகேற்றதாக உள்ளது என்பதை கூறுவதே என்பதை கூறுவதற்காகவே உழவு என்பது ‘’உழைத்தல்’’ ‘’ உழைப்பு’’ என்ற சொற்களோடு தொடர்புடையது. மெய்வருத்த பாடுபடல் என்று பொருள் படும். ஆகவே உழவுத் தொழிலுக்கே சிறப்பாக ’’உழவு’’ என்ற சொல் அமைந்திருத்தலைக் காண்கின்றோம். இதுவே‘’ உழந்தும் உழவே தலை’’
’’உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ‘’
என்று வள்ளுவர் இந்த நுட்பத்தை தெளிவாக்குவதைக் காணலாம். இதனை உழவென ஓர் அதிகாரமாக்கியே கூறியுள்ளார். உழவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வள்ளுவரின் கருத்தாழத்தைக் கண்டு வியத்தல் வேண்டும். சமுதாயத்தில் வாழும் மக்களாலேயே ஒரு நாட்டின் சிறப்பினைக் காணமுடியும் என்று வள்ளுவர் எண்ணுகிறார்பொருட்பாலின் முடிவில் குடிகளின் சிறப்பினை விளக்குமிடத்தில்தான் உழவினைக் கூறுகிறார். உழவே குடிமக்களின் தொழிற்சிறப்பாகும். இதற்கு மறுதலையாக விளங்கும் இரத்தலும் கயமையும் உழவினால் மட்கி மடியும் என்ற அடிப்படை உண்மையும் இங்கே தோன்றக் காணலாம்.
தமிழில் இன்று இருக்கும் நூட்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியமாகும். அதிலே வெற்றியைப்பாடும் வாகையென்பதொரு திணையுண்டு. அது போரில் எழும் வெற்றியை மட்டும் கூறுவதில்லை. வாழ்க்கையில் எந்த துறையிலேனும் வெற்றிப் பெறுவது வாகையாகும். தமக்கு இயற்கையாக  அமைந்த திறனைக் குறைவிலாது நிறைவாக அமைத்துக் கூறுவது முல்லை.
 ’’ பகட்டினாலும் ஆவிஞனும் துகள்தரு சிறப்பின் சான்றோர் பக்கம்’’  என்பது வாகைத் திணையில் இடம்பெறக் காண்கிறோம். ‘’ பகடு உழவுக்கு சிறந்தது’’.  எனவே உழவிற்சிறந்தோர் பெருமையை வேளாண் முல்லையாகப் பாடுவது வழக்கமாக இருந்துள்ளது. அதுபோலவே போர்களத்தில் வெற்றிப்பெறுதலையும், பாடவரும் புலவர்கள் ஏர்களத்தை மறப்பதில்லை. போரினையே ஒரு உழவுத்தொழிலாகக் காணும் காட்சி, உழவிலிருக்கும்  ஈடுபட்டால்  எழுதுவதாகும். வாகைத்திணையில் இவ்வாறு பாடுவதை ஏரோர்களவழி என்று தொல்காப்பியர் கூறுவர் (புறம் 369)  உலகத்திற்கு உணவு ஊட்டுபவன் உழவன். ஆதலின், உபகாரம், ஈகை,விருந்து ஆகியன் வேளாண்மை என்று வழங்கலாயின. ஏர்களத்தில் நெல்லைப் போராகக் கூவித்தவுடன் பகுத்துண்டு வாழ்கிறவன் உழவன். ஆகவே,
பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் நூலோர் தொகுத்தவற்றுகெல்லாம் தலை’’
என்ற அறமே களத்து மேட்டில் தான் தோன்றுகிறது.
சங்ககாலப்புலவர்கள் இவ்வுலவுக்கலையின் அடிப்படை உண்மைகளைப் பாடலாக பாடியதோடு, மற்றவர்களுக்கும் அறிவுறுத்தினர். மறுமையில் இன்பத்திற்கும் இம்மையில் வெற்றிக்கும் வழி சொல்கிறார் ஒரு புலவர்  

நீர்ல்லையானால் உடம்பில்லை’’ ‘’ உடம்போ உணவின் பிண்டம்’’ ‘’உண்டிகொடுத்தாரே உயிர்கொடுத்தோர்’’ ஆனால் உணவோ முடிவில் நிலத்தோடு நீர் இயந்தால் தான் எழும். எனவே, ‘’நீரும் நிலனும் புணியோர்  ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே’’ நிலம் பெரிதாயினும் என்ன பயன் ? முயற்சி அல்லது தாளாண்மை வேண்டும். இங்குதாள்என்பதுஉழவு’ 

என்ற ஒன்றினைக் குறிப்பாக உணர்த்துவதை உணர்ந்து மகிழ்தல் வேண்டும். இவ்வாறு கூறும் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கீழ்க் கண்டவாறு கூறி முடிக்கிறார்.

‘’ அடுப்போர்ச் செழியே இகழாது வல்லே
நில மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளா தோரிவண் தள்ளா தோரே ‘’  ‘[புறம். 18]

பாண்டிய நாட்டிலுள்ள வைகை,   வயல்கள்களையும் ஏரிகளையும் நிரைத்துக் கடலிற் போகாது  நிற்கின்ற வியப்பினை, வியம்பின் நுட்பத்தை இப்போது நாம் உணரமுடிகிறது.
‘’ பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
 அலகுடை நீழ லவர்’’
என்று வள்ளுவரும்
’’பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே’’
............................................................................
‘’ அதுநற் கறிந்தணை யாயின் நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிப்புறந் தருகுவை யாயின் நின்
அடிப்புறந் தருகுவர் அடங்கா தோரே  [புறம். 35]
என்று உழவரின் செல்வமும், அமைதியும் இங்கே வற்புறுத்தப் பெறுகின்றன. இதனால் உழவரிடத்திலிருந்து வரிப்பெறும் போது மலரிலிருந்து தேனெடுக்கும் வண்டுபோல  வாங்க வேண்டுமென்பதை தமிழ்நாட்டினர் மறந்ததில்லை. வயலில் விளைந்ததைக் கவளமாகத் திரட்டி யானைகளுக்குத் தந்தால் பலகாலத்திற்கு தரலாம். ஆனால் யானையே அக்களத்திற்குச் சென்று உண்ணுவதாயின் ஒரு பகலுக்கு உதவாது. வாய்புகுந்து பயன்படுத்துவதிலும் கால்பட்டு சிதைவதே அதிகம். இவ்வுண்மையைப் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைய நம்பிக்கு விளக்குகிறார் [புறம் . 184] .
சங்ககாலத்திற்கு பின்  வந்த புலவர்கள்  சங்ககால ஐந்திணை வளத்தின் புனைந்துரையையொட்டி வளம் சிறந்த நாட்டினைப் பற்றிக் கற்பனையாகப் பாடினார்கள் ‘’ பிளத்தோ’’ என்பவர் சிறந்ததோர் அரசியல் சமுதாயத்தைப் பற்றி எண்ணி அதனைக் கற்பனையுலகமாகப் படைத்துக் காட்டினார். இதேபோல்தான் தமிழ்புலவர்களும் நாட்டையும் நகரையும் பாடி மகிழ்ந்தனர். மழைபாழிவதும், ஐந்திணை நிலங்களிடையே ஆற்று வெள்ளம் பெருகிவருவதும், மக்கள் அணைக்கட்டி, ஏரியில் நீரைத்தேக்கி, வயற்பாய்ச்சி, வித்திடுவதும், இன்பமாய் ஆடிப்பாடி ஆணும் பெண்ணும் நாற்றைப்பிடுங்கி நட்டு, களையெடுத்து,நெல்முற்றியதும் அறுவடை செய்து, அரிஅரியாக நெல்லைப் போரடிக்கி களத்தில் கடாவிட்டு நெல்லைப் பிரித்தெடுப்பதும், விளைந்ததைத் தூற்றிக் குதிரில் கொட்டியும்,உழைத்தோர்க்கும், மாட்டுக்கும்,புலவருக்கும்,மற்றோருக்கும் பகுத்தீந்து விருந்தோடு உண்டு, வறுமையில்லாமல் அறிவுமிக்க சமுதாயமாக வாழும் ஒரு நாட்டையே இப்புலவர்கள் படைத்துத் தருகிறார்கள்.
கம்பனின் நாட்டுப்படலத்தில் உழவே திருநாளும் திருவிழாவுமாக என்றென்றும் நிலவுவதைக் காண்கிறோம். இதனால் மருதநிலத்திற்கு பரத்தையரால் இருந்த குறை முற்றும்  மறைகிறது. சங்க காலத்தில் பெறாததொரு பெருமையை மருத நிலம் பெறுகிறது. ’ஏரெழுபதுபாடினாரே? இல்லையாஎன்று ஐயப்பாடுவாரும், அவர் நாட்டுப்படலம் பாடியதில் ஐயங்கொள்வதில்லை. மருதநிலத்தையே அரசனாக்கிக் காண்கின்ற குடியரசு உலகம் அங்கே வித்திடுகின்றதெனலாம். குடிகள் உயிராக கோலேந்தும் அரசன் உடலாக அமைகின்ற புதுமை அங்கே உண்டு . அதனால் தான்  அரசருக்கு அரசராக மருதம் வீற்றிருக்கின்ற காட்சியைக் கம்பர் வாயாரப் பாடுகிறார்.

’’தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்  தாங்கக்
கொண்டல் முழுவினேங்கக் குவளைகண் விழித்துநோக்க
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பழி மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ’’.. ( பால. நா. 4)
இந்த அடிப்படையில் தான் கம்பனுடைய திருநாடு இராமராச்சியமாக உருவாகிறது. இதனை
’’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மையில்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஒங்கலாம்’’
இப்படியாகத் தமிழ்ப் புலவர்கள் பாடிக் களிக்கின்றனர். முதலாளிகள் விறலிடுவதும் , காதலுமாகக் கேட்டு மகிழ்ந்த வாழ்க்கையில், வயலில் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைப்பாரும் தமக்கேற்ற பள்ளு இலக்கியத்தைச் சிறப்புறப் பாடத் தொடங்கினர். பாரதியார் ‘’ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே’’ என்று பள்ளுதான் பாடுகிறார். அதேபோல ‘’நெல்விடு தூது’’ என்ற நூலிலும் இருக்கிறது. இவற்றில் அடுக்கடுக்காய் பலவகை நெல்களின் பெயர்கள் வரக்காண்கின்றோம். இப்படியாகக் காலந்தோறும் வெளிவந்த இலக்கியங்களில் மக்களின் உணவிற்கு முதன்மையாக விளங்கக்கூடிய உழவுத்தொழிலைத் தம்பாடல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட விளக்கங்களால் அறியமுடிகிறது.


சு. ஆனந்தராசு

0 கருத்துரைகள்: