Tuesday, 22 June 2010

பசுமைப் புரட்சியின் கதை

: எதில் பற்றாக்குறை? யாருக்குப் பற்றாக்குறை?
‘1960களின் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி எப்போது குறிப்பிட்டாலும், அது ‘உணவு உற்பத்தியில் பற்றாக் குறை’ என்றே பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உணவு உற்பத்தி படிப்படியாக அதிகமானது; இந்த உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமப் புறத் தொழிலாளர்களல்லாத, உணவுச் சந்தையை நம்பியிருந்த மற்றவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. 1957இல் வெளிவந்த உணவு தானிய விசாரணைக் குழு அறிக்கை (Foodgrains Enquiry Committee Report) இதை நன்றாக விளக்கியிருக்கிறது. “. . . திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் சந்தையில் விளைபொருள்களின் இருப்பை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க இந்த விளைச்சல் உதவவில்லை” ஆக, உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்ல நம் அரசாங்கத்தின் பிரச்சினை. உற்பத்தியை நகர்ப்புறச் சந்தைக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பதுதான் அதன் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, விவசாயியை உணவுச் சந்தையுடன் இணையச் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கான ஒரு சின்ன யோசனை இதோ! விவசாயி (இடுபொருட்களுக்காக) கடன் வாங்கி விவசாயம் செய்தால், அவர் தன் கடனை உடனடியாக அடைப்பதற்காக, தானே தக்கவைத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொண்டு, ஒரு பெரும் பங்கைச் சந்தைக்கு விட்டுக் கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாமே!!

ராக்கஃபெல்லர், ஃபோர்டு ஃபவுண்டேஷன்கள் நம் அரசாங்கத்தின் முன்வைத்த தீர்வு, ‘ஏற்கனவே நல்ல வளமான நிலங்களில் இந்தப் பசுமைப் புரட்சி திட்டத்தைப் புகுத்தினால், மிகையாக வரும் விளைச்சல் தானாகவே நகர்ப்புறங்களை வந்தடையும்’ என்பதுதான். இப்படித்தான், இந்தப் பரிசோதனைக்கு பஞ்சாப் -ஹரியானா பகுதிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவில் பசுமைப் புரட்சி, ஏதோ ஓராண்டில் செயற்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. அது 1967இல் தொடங்கி 1978வரை பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பாகும்.கோதுமையில் “பசுமைப் புரட்சி”மெக்ஸிகோவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனின் சர்வதேச கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையத்திலிருந்து (CIMMYT) இறக்குமதியான 18,000 டன் லெர்மா ரோஜோ 64-கி, மற்றும் சொனோரா - 64 ஆகிய ரகங்களை 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு கோதுமையில் பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்தது இந்திய அரசு. ஆனால் இந்த ரகங்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமாக இருந்தமையால் அவற்றை இந்தியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பிறகு நிறம் மாற்றி புதிய ரகங்களை வெளியிட்டனர். இந்த விதைகளை ஏற்கனவே மண் வளமும் நீர் வளமும் அதிகமாக உள்ள பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களில் பரவலாகப் பயிர்செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் திட்டம். குட்டை ரகக் கோதுமை விதைகளை நிலத்தில் விதைத்து, தேவையானபோதெல்லாம் நீர் கிடைக்குமாறு நீர்ப்பாசனத்தை அதிகரித்து, இரசாயன உரங்களை அள்ளிக் கொட்டி, பயிர்களுக்கு ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை ஒழிக்க இரசாயனங்களைத் தெளித்து, பெரிய அளவுகளில் உழுது அறுவடைசெய்ய இயந்திரங்களை உபயோகித்து, “நிலம் பாருங்கள் அள்ளிக் கொடுக்கிறது!” என்று பசுமைப் புரட்சியில் தங்கள் “வெற்றியை”க் கொண்டாடினர்.பஞ்சாபில் மட்டும் 1965-66இல் 33.89 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஹரியானாவில் அதே சமயத்தில், 19.85 லட்சம் டன்னிலிருந்து, 81.47 லட்சம் டன்னாக உயர்ந்தது. பசுமைப் புரட்சியின் அனுகூலங்களை நன்றாக அனுபவித்த பெரிய விவசாயிகளின் உற்பத்தி சந்தைக்கு வந்தது!பஞ்சாப் - ஹரியானாவில் நிகழ்ந்த கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு ‘பக்ரா நங்கல்’ அணை ஒரு முக்கியக் காரணமென்பதும் பரவலாக நம்பப்படும் ஒரு கருத்து. ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், பக்ரா நங்கல் அணை 1954ஆம் ஆண்டே செயற்பாட்டுக்கு வந்துவிட்டது. 1963-64ஆம் ஆண்டில், ஏற்கனவே (அதன் அதிகபட்சக் கொள்திறனான) 24.8 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் அளித்துவந்தது. ஆனால் 1972வரை நாம் உணவு இறக்குமதி செய்துகொண்டுதான் இருந்தோம். பக்ராநங்கல் அணை, நீர்ப்பாசன வசதியை ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு சில இடங்களிலிருந்து வேறு சில இடங்களுக்கு மாற்றிவிடுவதை மட்டுமே செய்தது என்றும், கோதுமைப் புரட்சி நிகழ முக்கியமாக, ஆழ்குழாய்க் கிணறுகளே காரணம் என்றும் ஆராய்ச்சிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றன!நெல்லில் “பசுமைப் புரட்சி”சி. சுப்பிரமணியனின் சுயசரிதையில், அவருடைய திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த அந்த மூத்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான டாக்டர் ரிச்சாரியா அவர்கள். ஒருவேளை இரசாயன உரங்களையே உபயோகித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தால்கூட, நமது நாட்டு ரகங்களிலேயே குட்டையான, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட, குறுகியகால அறுவடை ரகங்களையே உபயோகிக்கலாம் என்று தன் ஆராய்ச்சியின் மூலம் காட்டினார். தலைசிறந்த நெல் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவைக் கொண்டு தான் சேகரித்த 17,000 நாட்டு நெல் ரகங்களைக் கொண்டு, அற்புதமான ‘மேம்படுத்தப்பட்ட ரகங்களை’ அவர் உருவாக்கிக்கொண்டிருந்தார். நம் நாட்டில், ஏன் உலகிலேயே நெல் ஆராய்ச்சியில் இத்தனை முக்கியமான பங்கு வகித்த டாக்டர் ரிச்சாரியாவின் பெயர்கூட, சி. எஸ்ஸின் சுயசரிதையில் இடம்பெறவில்லை.ஹெக்டேருக்கு 3.7 டன்னுக்கு மேல் விளைச்சலைக் கொடுக்கும் ரகங்களைத்தான் ‘உயர் விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties / HYVs) என்று இந்திய அரசாங்கம் நிர்ணயம் செய்திருந்தது. ரிச்சாரியா சேகரித்த 17,000 ரகங்களில் 9சதவிகிதம் இத்தகைய விளைச்சலைக் கொடுத்தன; 8சதவிகிதம் குறுகிய கால அறுவடைப் பயிர்கள். 237 வாசனை ரகங்கள் இருந்தன. விவசாயிகளுக்கு அதிக விலை பெற்றுத் தரும் பல உயர்ந்த (superior) ரகங்களும் உயர் விளைச்சல் ரகங்களாக உருவாக்கப் பட்டிருந்தன. சில முக்கியமான ரகங்களின் பட்டியல் இதோ!* பஸ்தரைச் சேர்ந்த Gadur Sela (Bd:810) எனும் ரகம், ஹெக்டேருக்கு 9.8 டன், TD2 (Bd:45) 6.1 டன், Balkoni (Bd:504) 5 டன், JS5 (Bd:49) 4.8 டன், CR 1014 (Mrignain) 4.8 டன், Pallavi (Bd:193) 4.2 டன் விளைச்சலைக் கொடுத்தன.* Badal Phool (Bd:21), Dhour (Bd:23), (Bd:49) மற்றும் Ram Karouni (Bd:1353) ஆகியன குட்டை ரகங்கள்.* Dokra Dekri எனும் ரகம், உலகிலேயே மிக நீளமான அரிசி ரகம்.* (பால்)கோவா அரிசி உலர்ந்த பாலைப் போன்ற சுவையைக்கொண்டது.இத்தனை அற்புதமான நெல் ரகங்கள் நம் நாட்டிலேயே இருக்கும்போது, உருவாகியிருக்கும்போது வெளிநாடுகளிலிருந்து, கோடிக்கணக்கில் பணம் செல வழித்து, பெரிய அளவில் சோதனை செய்து பார்க்காத அந்நிய ரகங்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமே இல்லை என்று ரிச்சாரியா கூறிக்கொண்டிருந்தார். (தாய்வான், ஜப்பான் போன்ற) அன்னிய நாடுகளிலிருந்து டன் கணக்கில் விதைகளை வாங்கி நம் நாட்டின் மண்ணில் விதைத்தால், அதுவரை நாம் கண்டறியாத பூச்சிகளையும் நோய்களையும் கூடவே கொண்டு வந்து விடும் விபரீதத்தில் முடியும் என்று எச்சரித்தார். ஆனால் ஒரு சில அன்னிய ரகங்களை மட்டும் உபயோகித்து, தீவிரமாகக் கண் காணித்து எச்சரிக்கையுடன், நீண்ட நாட்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய ரகங்களை உருவாக்குவதில் ரிச்சாரியாவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. அத்தகைய ஆராய்ச்சியில் அவரே ஈடுபட்டும் இருந்தார்.‘சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்’ (IRRI) 1960இல் பிலிப்பீன்ஸ், மனிலாவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனால் நிறுவப்பட்டது. இந்த ஐ. ஆர். ஆர். ஐயின் அமெரிக்க இயக்குநரான ராபர்ட் சாண்ட்லர் அவர் தனது சுயசரிதையில் “அப்போது நான் ஒரு நெல் செடியை நேரில் கண்டதுகூட இல்லை!” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ‘நெல் பயிர் செய்வதில் அனுபவமே இல்லாத, நெல் ரகங்களின் germplasm ஒன்றும் கையில் இல்லாத நாடான அமெரிக்காவுக்கு, ஐ. ஆர். ஆர். ஐ. நிறுவுவதில் அப்படி என்ன அக்கறை?’ என்கிற கேள்விக்கான விடையை (ஆசிய அரசியல்-பொருளா தாரத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கம்) முன்பே ஆழமாகப் பார்த்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரைக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவுகூரவும். ராக்க ஃபெல்லர் ஃபவுண்டேஷன் முதலில் இந்திய அரசாங்கத்தை அணுகி, தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தைத் (CRRI) தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போது சி. ஆர். ஆர். ஐயின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் ரிச்சாரியா “நெல் ஆராய்ச்சியைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப் பாட்டுக்குக் கொடுப்பது, விஞ்ஞானிகளின் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுக்கும். ஆகையால், இந்த அமைப்பு ஒரு சுதந்திர ஆராய்ச்சி மையமாகவே செயல்பட வேண்டும்!” என்று அரசாங்கத்திடம் தன் கருத்தைத் தெரிவித்தார். அப்போதிருந்த அரசாங்கம், ரிச்சாரியாவின் வார்த்தைக்கு மரியாதை அளித்து, ராக்கஃபெல்லர்களுக்குக் கைவிரித்துவிட்டது. அதற்குப் பிறகுதான் மனிலாவில் அதன் தொடக்கம்.ஐ. ஆர். ஆர். ஐச் சந்தைப்படுத்திய ஐ. ஆர்-8 நெல் ரகம் டன் கணக்கில் இந்தியாவிற்குக் கப்பலில் வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட ரிச்சாரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நேர்ந்த சந்திப்பொன்றில் சி. எஸ். “அதெல்லாம் எனக்குத் தெரியாது! ராக்கஃபெல்லர் நிறுவனத்தினர் நமக்கு அனுப்பிவிட்டார்கள்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார். இதற்குப் பிறகும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத, தங்கள் வளர்ச்சிப் பாதையில் குறுக்கே நிற்கும் ரிச்சாரியாவைப் பணியிலிருந்து நீக்கினால்தான் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக சாண்ட்லர் சி. எஸ்ஸை நிர்ப்பந்தித்தார். அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க பணி இறக்கம் செய்யப்பட்டார் ரிச்சாரியா. அடுத்த மூன்றாண்டுகள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக, அவர் குடும்பத்தில் நிம்மதி குலைந்தது; குழந்தைகளின் கல்வியும் மனைவியின் உடல் நலமும் கெட்டன. முடிவில் 1970இல் நீதிமன்றம் ரிச்சாரியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, சிஸிஸிமியில் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் ரிச்சாரியா. பின்னர் மத்தியப் பிரதேச அரசாங்கம் நெல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுமாறு அவரைக் கேட்டுக்கொண்டது. மனம் தளராத ரிச்சாரியா ராய்பூரில் பிரம்மிப்பூட்டும் ‘மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை’ ஆறே ஆண்டுகளில் உருவாக்கினார். இவருடைய உதவியாளர்கள் இரண்டு வேளாண் பட்டதாரிகளும், ஆறு கிராமப் பணியாளர்களும் மட்டுமே! இந்நிலையத்தின் ஓராண்டு பட்ஜெட் ரூ. 20,000 மட்டுமே!ஐ. ஆர். ஆர். ஐயிடம் நெல் ஆராய்ச்சியில் அனுபவமோ தரமான நெல் ரகங்களின் மூலப்பொருளோ (germplasm) இல்லாத காரணத்தால் வரிச் சலுகையையும் டாலர் சம்பளத்தையும் வேறு பல பலன்களையும் காட்டித் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தது; பணத்தைக்கொண்டு மூலப்பொருள்களை வாங்க முயன்றது. இப்படித்தான், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளைத் தன் கீழ் கொண்ட பதவியிலிருந்து, 200 விஞ்ஞானிகளை மட்டும் கொண்ட ஐ. ஆர். ஆர். ஐயில் இயக்குநராகச் சேர்ந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். உண்மையில் இது ஒரு ‘பணி இறக்கம்’ என்றே பலராலும் கருதப்படுகின்றது.இதற்கிடையே, ரிச்சாரியா எச்சரித்ததுபோலவே ஐ. ஆர்.-8, ஐ. ஆர்.20, ஐ. ஆர்.-26 என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் இறக்குமதியாகிய ஐ. ஆர். நெல் ரகங்கள் எல்லாம் பூச்சி, நோய் தாக்கி நாடெங்கிலும் பெருத்த (30-100%) சேதங்களைச் சந்தித்தன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்ட ஐ. ஆர். ஆர். ஐ., இந்தியாவில் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த ரகங்களின் - “ஒன்றுக்கும் உதவாத இந்திய நெல் ரகங்கள்” என்று சமீபகாலம்வரை அது கேவலமாகப் பேசிய அதே ரகங்களின் - பூச்சி எதிர்ப்புத் தன்மையைத் தேடி இங்கே வந்தது. இந்தத் தேடுதலுக்காக இங்கே வந்த அமெரிக்கர்கள், அப்போது ஐ. சி. ஏ. ஆரில் பெரிய பதவியிலிருந்த எம். எஸ். சுவாமிநாதனின் உதவி கொண்டு இந்தியாவில் (சி. ஆர். ஆர். ஐ. உள்பட) பல இடங்களிலிருந்தும் நெல் ரகங்களைச் சேகரித்தார்கள். பிறகு ரிச்சாரியாவிடம் வந்து அவர் மத்தியப் பிரதேசத்தில் சேகரித்து வைத்திருந்த தரமான விதைகளைக் கொடுக்குமாறு கேட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் தர முன்வந்த ரகங்கள் அனைத்தும் பூச்சி மற்றும் நோயால் எளிதில் பாதிப்படையும் தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகத் தான் சேகரித்த விதைகளைத் தற்காலிகமாகத் தர மறுத்த ரிச்சாரியாவை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தோடு, அவர் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி அமைப்பை ஒரேயடியாக மூடவைத்துவிட்டது ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய அறையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்கள், அறிவியல்ரீதியான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றிக்கொண்டது. இந்திய அதிகார வர்க்கத்தில் இந்த ஃபவுண்டேஷனுக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.இவ்வாறாக இந்திய நெல் ஆராய்ச்சி நிலையங்களில் நடந்து கொண்டிருந்த உயர்ந்த ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன; நிறுத்தப்பட்டன. முழுக்க முழுக்க ஐ. ஆர். ஆர். ஐ. அறிமுகப்படுத்திய நெல் ரகங்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. கோதுமையைப் போலவே, அதிக அளவுகளில் இடுபொருட்களைக் கொண்டு ஐ. ஆர். ரகங்களின் விளைச்சலும் அதிகரிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது.வேளாண் ஆராய்ச்சியில் பொய்கள், ஊழல்கள், மோசடிகள்சிகப்பு நிற சொனோரா-64 ரகத்தை ஒருவிதக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி ஷர்பதி சொனோரா என்கிற புதிய ரகத்தை உருவாக்க முன்வந்தார் எம். எஸ். சுவாமிநாதன். இந்த புதிய ரகத்தில் லைசின் எனும் முக்கியமான அமைனோ அமிலத்தின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக மாக்சசே விருதையும் பெற்றார். ஆனால் பிறகு போர்லாக் பணிபுரிந்த சி. ஐ. எம். எம். ஒய். டி. நிறுவனமே சொனோராவிற்கும் ஷர்பதி சொனோராவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்தது. இது தனது ஆய்வுக்கூட உதவியாளர் செய்த தவறு என்று கூறிச் சமாளிக்க முனைந்தார் எம். எஸ். எஸ்.மேலும், பசுமைப் புரட்சியை வெளியிட்ட ஐ. ஏ. ஆர். ஐயில் ‘உயர் விளைச்சல் ரகம்’ என்று கூறி ‘பைசாகி மூங்க்’ என்னும் ஒரு ரகப் பருப்பு வகையை வெளியிட்டது. அது அமோக விளைச்சலைத் தரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பயிரிட்ட எங்குமே சொல்லப்பட்ட விளைச்சலில் பாதியைக்கூடத் தாண்டவில்லை! மற்றொரு மக்காச்சோள ரகம், பாலில் உள்ள அளவுக்குச் சத்து நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் ஒரு பொய்யென்று நிரூபணம் ஆனது.அதே சமயம், மிகுந்த சர்ச்சைக்குரிய வேறொரு செய்தி வெளிவந்தது. அது, மே 1972இல் டாக்டர் வினோத் ஷா என்னும் வேளாண் விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட செய்தி. மனம் உடைந்துபோன, அவமானத்துக்குள்ளாகிய சில வேளாண் விஞ்ஞானிகளின் தற்கொலைச் செய்திகள் ஏற்கனவே வெளி வந்திருந்தாலும், டாக்டர் ஷாவின் தற்கொலை ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்குக் காரணம், அவர் ஒரு வாலிபர் என்பதும், அவர் தற்கொலைக்கு முன்பு எம். எஸ். சுவாமிநாதனுக்கு எனக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதிவிட்டுச் சென்றதுமாகும். “உங்கள் சிந்தனா முறைக்குப் பொருந்துகிற விதத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான பல புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன . . . சொந்தமான கருத்துகளும் ஆக்கபூர்வமான, அறிவியல்ரீதியான விமர்சனம் கொண்டவர்கள் பலியிடப்படுகிறார்கள்” என்று அதில் அவர் எழுதியிருந்தார். நாடாளுமன்றத்தில் டாக்டர் ஷாவின் தற்கொலை பெரிய புயலைக் கிளப்பிவிட, அரசாங்கம் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டாக்டர் பி. பி. கஜேந்திர கட்கர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. விசாரணையின் முடிவில், அது எம். எஸ்ஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. “ஐ. ஏ. ஆர். ஐயின் (Indian Agricultural Research Institute / IARI) இளநிலை விஞ்ஞானிகள் பலர் தங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வெளியிடத் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று - சரியாகவோ தவறாகவோ - கருதுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துவராத காரணத்தாலோ அல்லது அறிவியல் ஆதாரமற்ற புள்ளிவிவரத்தை மேலிடத்திற்குத் தருவதற்குப் பதிலீடாக ஏதேனும் நன்மைகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதாலோ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட முடியாத நிலை இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்” என்று அந்தக் குழு எச்சரித்தது.1974இல், த நியூ சயன்டிஸ்ட் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகை, எம். எஸ்ஸின் லைசின் பொய்யை அம்பலப்படுத்தியது. எம். எஸ்ஸைக் கேள்வி கேட்ட டாக்டர் ஒய். பி. குப்தாவின் மாணவர்கள் அனைவரும் அவரிடமிருந்து காரணமே இல்லாமல் பிரிக்கப்பட்டனர்; அவருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் குப்தா “நியாயமற்ற விதத்தில் நடத்தப்பட்டார்” என்றும், அவருடைய மேலதிகாரி நெறியற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுவாமிநாதன் தலைமை வகித்த நிறுவனத்தின் கல்விப்புலக் குழுவை (academic council) “தடித்தனம் கொண்ட, இதயமற்ற, அதிர்ச்சிகரமான” என்றெல்லாம் விமர்சித்தது.“அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வீரிய விதைகள் நீங்கள் சொல்வது போலவே நம்முடைய பாரம்பரிய விதைகளைவிடத் தாழ்வானதாகவே இருந்திருந்தால், எப்படி விவசாயிகளால் ஏற்கப்பட்டு கோடிக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டன? நம் விவசாயி என்ன அத்தனை முட்டாளா?” என்ற கேள்வி எழலாம். உலக வங்கியும் யு. எஸ். எய்ட் அமைப்பும் புதிய விதைகளை (அதோடு மற்ற இடுபொருட்களையும்) விவசாயிகள் மத்தியில் பரப்புவதற்காக, ஃபோர்டு மற்றும் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன்களுடன் கைகோத்துக்கொண்டு நிறைய கடனை வாரி வழங்கின. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் யு. எஸ். எய்டின் உதவியுடன் 1963இல் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation) நிறுவப்பட்டது. உலக வங்கியின் 13 மில்லியன் டாலர் உதவிகொண்டு 1969இல் டெராய் விதைக் கழகம் (Terai Seed Corporation) நிறுவப்பட்டது. 1971இல் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் மெக்நமாரா, விவசாய ஆராய்ச்சிக்கான சர்வதேச ஆலோசனைக் குழு (Consultative Group on International Agricultural Research- CGIAR) என்னும் அமைப்பை நிறுவினார். இதன் முக்கியப் பணி, உலகெங்கும் வளர்ந்துவரும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1966-71) வேளாண்மைக்கான அன்னியச் செலாவணி 1,114 கோடியாக வளர்ந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட முழு நிதியைவிட ஆறு மடங்கு அதிகம்.புதிய விதைகளைப் பரப்புவதற்காக 1976இல் தேசிய விதைத் திட்டம் (National Seed Project) I-இன் மூலம் 25 மில்லியன் டாலரையும், 1978இல் திட்டம் II-இன் மூலம் 16 மில்லியன் டாலரையும் உலக வங்கி கொடுத்தது. இவை போதாதென்று 1990-91இல் இதே திட்டத்தின் மூன்றாம் நிலையில் 150 மில்லியன் டாலர் கடன் அளிக்கப்பட்டது. “விதைகளுக்கான தொடர்ச்சியான கிராக்கி எதிர்பார்த்த அளவு விரிவடையாததால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பயிர்கள் விஷயத்தில், குறிப்பாக, நெல், கோதுமை போன்றவற்றில், விவசாயிகள் தங்களிடமே தக்க வைத்துக்கொள்ளும் விதைகள், விவசாயிகளுக்குள் பண்டமாற்று செய்துகொள்ளும் விதைகள் ஆகியவையே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அதிக விளைச்சல் ரகங்களில் சில, மரபு சார்ந்த ரகங்களைக் காட்டிலும் வீரியம் குறைந்தவையாக இருந்ததால் விவசாயிகளிடத்தில் அவை அதிக வரவேற்புப் பெறவில்லை” என்று தேசிய விதைத் திட்டம்-3இன் ஆவணமே அழகாக விளக்கியுள்ளது.யாருடைய உதவியுமில்லாமல், தாங்களாகவே உருவாக்கிய நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கைமாற்றம் செய்துகொள்கிறார்கள் என்பது விவசாயியின்மீது உண்மையான அக்கறையுள்ள யாவருக்கும் ஒரு நல்ல சேதிதானே! ஆனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவப் போகிறோம் என்று பச்சைப் போர்வை போர்த்திக்கொண்டு இறங்கிய “பசுமைப் புரட்சி”யாளர்களுக்கு இதைவிட மோசமான சேதி இருக்க முடியாது! ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் தேவையாக இருந்த பண லாபம், ‘விதைக் கைமாற்றத்தால்’ எப்படி ஏற்படும்? அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மலட்டு விதைகளை விவசாயிகள் அதிகப் பணம் கொடுத்து வாங்கினால்தானே இது சாத்தியமாகும்! இத்தனை வேலைகளையும் திட்டமிட்டு, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, மாபெரும் விதைச் சந்தையை உருவாக்குவதற்காகத்தான் இந்த 150 மில்லியன் டாலர் கடனுதவி!இத்தனை வன்முறைக்குப் பிறகும், அவையெல்லாம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் பசுமைப் புரட்சியின் “வெற்றிக்கொடி” பாமர மக்கள் மத்தியில் மேலோங்கிப் பறந்தது! 50 ஆண்டுகள் ஆகியும், “பசுமைப் புரட்சி”யின் பொய்யான சாகசக் கதைகள் எல்லாப் பக்கமும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் என்ன? நம் விவசாயத்தை மீட்க என்ன வழி?-சங்கீதா ஸ்ரீராம்

உதவிய நூல்கள்* Hanlon, Joseph; Top Food Scientist Published False Data; New Scientist, London, Vol.64, No.922, 1974; pp. 436-37

* Alvares, Claude; The Great Gene Robbery, The Illustrated Weekly of India, March 23-29, 1986

* Crushed, but not defeated; An Interview of Dr. R.H.Richharia by Claude Alvares; The Illustrated Weekly of India, March 23-29, 1986

* Dharmadhikary, Sripad; Manthan Adhyayan Kendra; Unraveling Bhakra: Assessing the Temple of Resurgent India; April 2005

* Dogra, Bharat; The Life and Work of Dr. R.H. Richharia, 1991

* Dr. Vinod Shah's Protest by Suicide, Nature, May 1972, New Delhi, Vol. 237

* Shiva , Vandana; The Violence of the Green Revolution: Ecological degradation and political conflict in Punjab, Zed Press, New Delhi; 1992

நன்றி: காலச்சுவடு, ஜூன் 2010

Friday, 18 June 2010

பாலைவனமாகும் தேரிக்காடுகள்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

அரசியல் கட்சிகள் அனைத்தும்  தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.டைட்டானியம் என்றால் என்ன?

டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.சொல்லப்படாத செய்திகள்

டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.

சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.

தாதுக்களைச் சுத்தம் செய்தல்

தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி

வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.

இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?


எவர் முக்கியமானவர்?


டாடாவா? மக்களா?டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.

-நித்தியானந்த் ஜெயராமன்

(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர். சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])

நன்றி:

கோக் எதிர்ப்பு: (cocacola no entry)

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் விடாப்படியாக நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநில அரசு, கோக் ஆலைக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவொன்றைச் சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அந்நிபுணர் குழு, கோக் ஆலையின் செயல்பட்டால் அப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றிப் போனதையும், அவ்வாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் நிலத்தடி நீரும் நிலமும் மாசடைந்து போனதையும் தற்பொழுது உறுதி செய்திருப்பதோடு, இதற்காக கோக் நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நட்ட ஈடாக வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யவும் அதிகாரமிக்க கமிட்டியொன்றை அரசு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக அறியப்படுவது பாலக்காடு மாவட்டம். பிளாச்சிமடா கிராமம் அமைந்துள்ள சித்தூர் வட்டம் நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த பகுதி. நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் என முப்போகம் விளைந்த பிளாச்சிமடா பகுதி, கோக் ஆலை பிளாச்சிமடாவில் இயங்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலைவனம் போலாகிப் போனது. கோக், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்ததாலும், தனது ஆலைக் கழிவுகளை வயல்வெளியிலேயே கொட்டியதாலும் ஏற்பட்ட நிலைமை இது.ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் கூலி வேலை செய்து வந்த பழனி, ஒரே வரியில் இந்த அவலநிலைமையை விளக்குகிறார். “அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை; நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 செண்டு நிலமிருக்கிறது. ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.” கோக் ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் அமீது 2002-க்குப் பிறகு தன்னால் விவசாயமே செய்ய முடியவில்லை என்கிறார். நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மகனுடைய சம்பளத்தில்தான் தனது வயிற்றை கழிவிக் கொண்டிருப்பதாகப் பொருமுகிறார், அவர்.நீர் வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் கோக் ஆலையின் வருகைக்குப் பின்னர், தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோக் ஆலையால் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைத் துணிகளைத் துவைப்பதற்குக்கூடப் பயன்படுத்த முடியாது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கோக் ஆலையால் இப்படி மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரையும், நிலத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கும், கோக் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த 200 கோடி ரூபாய் போதுமானதா எனக் கேட்க வேண்டிய நேரத்தில், கோக் ஆலையோ தனக்குத் தண்டனை அளிக்க இந்த நிபுணர் கமிட்டிக்கு அதிகாரம் கிடையாது எனக் கொக்கரிக்கிறது. நிபுணர் குழு விசாரணைக்கு அழைத்தபொழுது, அதற்கு உடன்படவும் மறுத்து வந்தது, கோக் நிர்வாகம். அரசு அமைத்த நிபுணர் குழுவின் உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போல் தூக்கி வீசுவது, அரசின் அதிகாரத்திற்கே சவால் விடுவதற்குச் சமமானது என்ற போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும் கேரள மாநில சி.பி.எம். அரசாங்கம் கோக்கின் இந்தத் திமிருக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது.இடதுசாரிக் கூட்டணியின் கையில் அதிகாரம் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்துவிடுவோம் என சி.பி.எம். உதார்விட்டு வருவதைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இதோ, கேரள மாநில அதிகாரம் இடதுசாரிக் கூட்டணியின் கையில்தான் இருக்கிறது. அக்கூட்டணி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், “உடனடியாக 200 கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவில் கட்டச் சொல்லி கோக்கிற்கு உத்தரவிட்டிருக்கலாம். அப்படிக் கட்டத் தவறினால், கேரளாவிலுள்ள கோக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என ஒரு வார்த்தைக்காகவாவது மிரட்டல் விட்டிருக்கலாம். நிபுணர் குழுவின் பரிந்துரையையொட்டி கோக் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கூட்டணி ஆட்சி, ஒப்புக்குச் சப்பாணியாக, அதே பாலக்காடு மாவட்டத்தில் இயங்கிவரும் பெப்சி ஆலை நிர்வாகத்திடம், “இனி, 7 இலட்சம் லிட்டர் நீருக்குப் பதிலாக, 2.34 இலட்சம் நீரைத்தான் நிலத்தடியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவைக் கேட்டு பெப்சி நிர்வாகம் ஆடிப் போய்விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பிளாச்சிமடாவில் உள்ள கோக் ஆலைகூட ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் லிட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், கோக் நிர்வாகமோ ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் லிட்டருக்கும் மேலாக நீரை உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தண்ணீர் திருட்டுக்காக கோக் நிர்வாகம் ஒருமுறையேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?பிளாச்சிமடா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைச் செயல்படுத்த வேண்டும் என்றால்கூட, கோக்கிற்கு எதிராக நடந்துவரும் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், கோக்கின் பண பலமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாயக்கூடியது. இதற்கு ஆதாரமாக கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.கோக்கின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைக் கண்ட பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியம், கோக்கின் ஆலை செயல்படுவதற்குத் தடை விதித்தது; கேரள மாநில அரசைக் கொண்டே இந்தத் தடையை உடைத்தெறிந்தது, கோக். இதற்கடுத்து, 34 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி எந்தளவிற்கு நீரைப் பயன்படுத்துவரோ, அதே அளவு நீரைத்தான் கோக் ஆலையும் பயன்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தின் மூலம் ஒரு தீர்ப்பைப் பெற்றனர், பிளாச்சிமடா மக்கள். இதனையும் கேரள உயர்நீதி மன்றத்தைப் பயன்படுத்தியே உடைத்தது, கோக். பிளாச்சிமடா மக்கள் குடிதண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தபொழுதுதான், இப்படிபட்ட தீர்ப்புகளையும், அரசாணையையும் கோக் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதியுள்ள “எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்ற ஆங்கில வார இதழ், “பிளாச்சிமடா மக்கள் கடந்த பத்தாண்டுகளாக சட்டபூர்வமாகப் போராடி இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீதியைப் பெறுவதற்கு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் மக்கள் போராடத் தொடங்கி விடுவார்கள்” என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.இந்த வரிகளைத் தோலுரித்தால், இந்திய ‘ஜனநாயகமும்’, அதன் ஆட்சியாளர்களும், ஓட்டுக் கட்சிகளும் எந்தளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் ஏவல் நாய்களாக நடந்து வருகிறார்கள் என்பது அம்பலமாகும். ஆனாலும் என்ன செய்வது? எத்தனை முறை குச்சியை வைத்துக் கட்டினாலும், நாய் வாலை நிமிர்த்திவிட முடியாதே!_______________________________________________
http://www.vinavu.com/2010/05/29/anti-coke-plachimada/


புதிய ஜனநாயகம் – மே 2010

Wednesday, 16 June 2010

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்


கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல்சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகைஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing)என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

Wednesday, 2 June 2010

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி


பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
வேம்பு புங்கன் கரைசல்


தேவையான பொருட்கள் :-


வேப்பெண்ணை ஒரு லிட்டர்

புங்கன் எண்ணை ஒரு லிட்டர்

கோமியம் (பழையது) பத்து லிட்டர்

காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்


இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.


மீன் அமினோ கரைசல்


உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும்21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்


10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.

இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.

இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

பழக்காடி  கரைசல்தேவையான பொருட்கள்:

சாணம்-20 கிலோ,

கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ

தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,

தண்ணீர்-50 லிட்டர்,

ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.

தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும்.

இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.


தேமோர் கரைசல்
புளித்த மோர் - 5 லி

இளநீர் - 1 லிஇவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.
பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.

மரங்களை வளர்ப்போம்!


ஒவ்வொரு மரமும் அல்லாஹ் தந்த அருட்கொடை
உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்

மரம் நமக்கு என்ன தருகிறது?மலர்கள், காய், கனிகள் தருகிறதுநிழல், குளிர்ச்சி, மழை தருகிறதுகாற்றை சுத்தப்படுத்துகிறதுநாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடைமரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.