Friday, 18 June 2010

கோக் எதிர்ப்பு: (cocacola no entry)

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

















கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.



பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் விடாப்படியாக நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநில அரசு, கோக் ஆலைக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவொன்றைச் சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அந்நிபுணர் குழு, கோக் ஆலையின் செயல்பட்டால் அப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றிப் போனதையும், அவ்வாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் நிலத்தடி நீரும் நிலமும் மாசடைந்து போனதையும் தற்பொழுது உறுதி செய்திருப்பதோடு, இதற்காக கோக் நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நட்ட ஈடாக வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யவும் அதிகாரமிக்க கமிட்டியொன்றை அரசு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.



கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக அறியப்படுவது பாலக்காடு மாவட்டம். பிளாச்சிமடா கிராமம் அமைந்துள்ள சித்தூர் வட்டம் நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த பகுதி. நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் என முப்போகம் விளைந்த பிளாச்சிமடா பகுதி, கோக் ஆலை பிளாச்சிமடாவில் இயங்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலைவனம் போலாகிப் போனது. கோக், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்ததாலும், தனது ஆலைக் கழிவுகளை வயல்வெளியிலேயே கொட்டியதாலும் ஏற்பட்ட நிலைமை இது.



ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் கூலி வேலை செய்து வந்த பழனி, ஒரே வரியில் இந்த அவலநிலைமையை விளக்குகிறார். “அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை; நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 செண்டு நிலமிருக்கிறது. ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.” கோக் ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் அமீது 2002-க்குப் பிறகு தன்னால் விவசாயமே செய்ய முடியவில்லை என்கிறார். நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மகனுடைய சம்பளத்தில்தான் தனது வயிற்றை கழிவிக் கொண்டிருப்பதாகப் பொருமுகிறார், அவர்.



நீர் வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் கோக் ஆலையின் வருகைக்குப் பின்னர், தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோக் ஆலையால் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைத் துணிகளைத் துவைப்பதற்குக்கூடப் பயன்படுத்த முடியாது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கோக் ஆலையால் இப்படி மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரையும், நிலத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கும், கோக் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த 200 கோடி ரூபாய் போதுமானதா எனக் கேட்க வேண்டிய நேரத்தில், கோக் ஆலையோ தனக்குத் தண்டனை அளிக்க இந்த நிபுணர் கமிட்டிக்கு அதிகாரம் கிடையாது எனக் கொக்கரிக்கிறது. நிபுணர் குழு விசாரணைக்கு அழைத்தபொழுது, அதற்கு உடன்படவும் மறுத்து வந்தது, கோக் நிர்வாகம். அரசு அமைத்த நிபுணர் குழுவின் உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போல் தூக்கி வீசுவது, அரசின் அதிகாரத்திற்கே சவால் விடுவதற்குச் சமமானது என்ற போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும் கேரள மாநில சி.பி.எம். அரசாங்கம் கோக்கின் இந்தத் திமிருக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது.



இடதுசாரிக் கூட்டணியின் கையில் அதிகாரம் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்துவிடுவோம் என சி.பி.எம். உதார்விட்டு வருவதைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இதோ, கேரள மாநில அதிகாரம் இடதுசாரிக் கூட்டணியின் கையில்தான் இருக்கிறது. அக்கூட்டணி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், “உடனடியாக 200 கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவில் கட்டச் சொல்லி கோக்கிற்கு உத்தரவிட்டிருக்கலாம். அப்படிக் கட்டத் தவறினால், கேரளாவிலுள்ள கோக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என ஒரு வார்த்தைக்காகவாவது மிரட்டல் விட்டிருக்கலாம். நிபுணர் குழுவின் பரிந்துரையையொட்டி கோக் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கூட்டணி ஆட்சி, ஒப்புக்குச் சப்பாணியாக, அதே பாலக்காடு மாவட்டத்தில் இயங்கிவரும் பெப்சி ஆலை நிர்வாகத்திடம், “இனி, 7 இலட்சம் லிட்டர் நீருக்குப் பதிலாக, 2.34 இலட்சம் நீரைத்தான் நிலத்தடியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.



இந்த உத்தரவைக் கேட்டு பெப்சி நிர்வாகம் ஆடிப் போய்விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பிளாச்சிமடாவில் உள்ள கோக் ஆலைகூட ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் லிட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், கோக் நிர்வாகமோ ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் லிட்டருக்கும் மேலாக நீரை உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தண்ணீர் திருட்டுக்காக கோக் நிர்வாகம் ஒருமுறையேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?



பிளாச்சிமடா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைச் செயல்படுத்த வேண்டும் என்றால்கூட, கோக்கிற்கு எதிராக நடந்துவரும் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், கோக்கின் பண பலமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாயக்கூடியது. இதற்கு ஆதாரமாக கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.



கோக்கின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைக் கண்ட பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியம், கோக்கின் ஆலை செயல்படுவதற்குத் தடை விதித்தது; கேரள மாநில அரசைக் கொண்டே இந்தத் தடையை உடைத்தெறிந்தது, கோக். இதற்கடுத்து, 34 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி எந்தளவிற்கு நீரைப் பயன்படுத்துவரோ, அதே அளவு நீரைத்தான் கோக் ஆலையும் பயன்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தின் மூலம் ஒரு தீர்ப்பைப் பெற்றனர், பிளாச்சிமடா மக்கள். இதனையும் கேரள உயர்நீதி மன்றத்தைப் பயன்படுத்தியே உடைத்தது, கோக். பிளாச்சிமடா மக்கள் குடிதண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தபொழுதுதான், இப்படிபட்ட தீர்ப்புகளையும், அரசாணையையும் கோக் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இப்பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதியுள்ள “எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்ற ஆங்கில வார இதழ், “பிளாச்சிமடா மக்கள் கடந்த பத்தாண்டுகளாக சட்டபூர்வமாகப் போராடி இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீதியைப் பெறுவதற்கு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் மக்கள் போராடத் தொடங்கி விடுவார்கள்” என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.



இந்த வரிகளைத் தோலுரித்தால், இந்திய ‘ஜனநாயகமும்’, அதன் ஆட்சியாளர்களும், ஓட்டுக் கட்சிகளும் எந்தளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் ஏவல் நாய்களாக நடந்து வருகிறார்கள் என்பது அம்பலமாகும். ஆனாலும் என்ன செய்வது? எத்தனை முறை குச்சியை வைத்துக் கட்டினாலும், நாய் வாலை நிமிர்த்திவிட முடியாதே!



_______________________________________________
http://www.vinavu.com/2010/05/29/anti-coke-plachimada/


புதிய ஜனநாயகம் – மே 2010

0 கருத்துரைகள்: