மான்சென்டோவின் தங்கப் புரட்சி
First Published : 22 Nov 2011 02:51:44 AM IST
Last Updated :
முதல் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண்மைத்துறை, பொதுநல நோக்கில் கோதுமையிலும் பின்னர் நெல்லிலும் வீரிய ரக விதைகளைக் கொண்டு ரசாயன உர பலத்துடன் மண்வளத்தைப் படிப்படியாக அழித்து உணவு உற்பத்தியைப் பெருக்கியபோது, "எங்கு நோக்கினும் பசுமையடா' என்றார்கள்.
இந்தப் பசுமையைப் பார்த்து பயிர்களைத் தாக்கும் பூச்சி இனம் உயர்ந்து பயிர்களைக் காக்கும் பூச்சி இனம் அழிந்து மெல்ல மெல்ல உற்பத்தித்திறன் குறைவதைக் கண்டு இரண்டாவது பசுமைப் புரட்சியை மத்திய அரசு 2010-ல் அறிவித்துப் பொறுப்பைமான்சென்டோவுக்கு வழங்கிவிட்டதால் இன்றைய இந்தியாவில், "எங்கு நோக்கினும் தங்கமடா' என்று சொல்லும் அளவில் மஞ்சள்நிற மக்காச்சோளம் பொங்கி வழிவதைப் பார்க்கிறோம். மான்சென்டோ தங்களின் வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகளுக்கு தங்க சத்தியம் வழங்கி நிரூபித்தும் விட்டார்கள்.
மாபெரும் தந்திரங்களைக் கடைப்பிடித்து மாநில அரசுகளை வசப்படுத்திவிட்டார்கள். வளம்குன்றா வேளாண்மை, உற்பத்தி உயர்வு, விவசாயிகளுக்கு லாபம் என்பது மாநிலக் கொள்கையானால், அவையே எங்கள் கொள்கை என்று மக்காச்சோளத்தை சிறு விவசாயிகள் வரை எடுத்துச் சென்றுள்ளனர். பழங்குடி மக்களிடமும் மக்காச்சோள வியாபாரம்சென்றுவிட்டது.
பழங்குடி மக்கள்-சிறு குறு விவசாயிகளின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களுடனும் மான்சென்டோ தொடர்பு கொண்டு இலவச விதை (வீரிய ஒட்டுரகம்)வழங்கியுள்ளது. வீரிய ஒட்டு மஞ்சள் மக்காச்சோள விதைகளை அறிமுகப்படுத்தி இந்தியஉற்பத்தியை 2010-11-ல் 2.1 கோடி டன்னுக்கு உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
உண்மையில் நமது மக்காச்சோள உற்பத்தி 1.80 கோடி டன்னுக்கு உயர்ந்துள்ளதால்அமெரிக்காவில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. என்ன புதிராக உள்ளதா? இந்தியாவில்மக்காச்சோள உற்பத்தி உயர்ந்ததால் அமெரிக்கா எப்படி சந்தோஷம் அடைய முடியும்?
உணவை மையமாகக் கொள்ளாமல் தொழிலுக்குரிய கச்சாப் பொருள் உற்பத்தியைமையப்படுத்தும் விவசாயத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கன்எய்ட் ஆர்வமாயுள்ளது.
பி.ட்டி பருத்தி வெற்றியைத் தொடர்ந்து மக்காச்சோளத்தில் வீரிய ஒட்டு விதையையும் மான்சென்டோ வழங்கி இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட்டு இன்று வெற்றியும் பெற்றதால் அமெரிக்கா மகிழ்ச்சி அடைந்துள்ளது. மக்காச்சோளம் முழுமையான மனித உணவு இல்லை. உற்பத்தியில் 15 சதவிகிதம் மட்டுமே மனித உணவு. 60 சதவிகிதம்கோழித்தீவனம், 10 சதவிகிதம் மாட்டுத்தீவனம், 10 சதவிகிதம் ஸ்டார்ச் போக மீதி விதைக்கும் ஜின் எத்தனாலுக்கும் பயனாகிறது. 15 சதவிகித மனித உணவும்கூட பாப்கார்ன், கார்ன் ஆயில் (சமையல் எண்ணெய்), கார்ன்ஃப்ளேக்(அவல்) தொழில்வளர்ச்சிக்கு ஆக்கமூட்டுகிறது.
இந்தியாவில் பாரம்பரியமாக சிறு தானியங்கள், பயறு வகை தானியங்கள், சாகுபடியான நிலங்களிலும் கோடை கோதுமை, கரும்பு சாகுபடியான நிலங்களிலும் இன்று மக்காச்சோளம் அரங்கேறிவிட்டது.
கரும்புக்கு நல்ல விலை இல்லையென்பதால் மானியங்களை அள்ளி வழங்கும் மஞ்சள்மக்சாச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதன் காரணம், மும்மடங்குவிளைச்சல்.
கடந்த பத்தாண்டு நிலையுடன் ஒப்பிட்டால் அரிசியின் வளர்ச்சி ஆண்டுக்கு 1.6 சதவிகிதம்,கோதுமை 1.9 சதவிகிதம், பயறு 1 சதவிகிதம். ஆனால் மக்காச்சோளம் மட்டும் 7.6 சதவிகிதம் வளர்ச்சி. இவ்வளவுக்கும் சுமார் 20 சதவிகிதம் வீரியரக ஒட்டுவிதை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மஞ்சள் மக்காச்சோளம் கோதுமை உற்பத்திக்கு இணையாக 6 முதல் 7 கோடி டன்கள் என்ற அளவுக்கு உயர்ந்து இரண்டாவது பசுமைப்புரட்சி மஞ்சள் தங்கப் புரட்சியாக விரிவடையும் என்பதில் ஐயம் வேண்டாம்.
ஏனெனில், இந்தியாவில் மற்ற உணவு சாகுபடிகளைப் புறந்தள்ளி மக்காச்சோளஉற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்த வாஷிங்டனிலும் சிகாகோவிலும் திட்டம் தீட்டப்பட்டுவிட்டது.
மக்காச்சோள சாகுபடி தமிழ்நாட்டில் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் அளவில் உயர்வாக இல்லை என்றாலும் சுமார் 2 லட்சம் டன் அளவில் உண்டு. அதேசமயம், மான்சென்டோவின் வீரிய ஒட்டுரக விதைப்பயன் தமிழ்நாட்டில் 100 சதம். பிற மாநிலங்களில் 20 முதல் 30சதவிகிதமே. பருத்தி சாகுபடி செய்து நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொண்ட அதே மாநிலங்களில்தான் மஞ்சள் மக்காச்சோளம் - மான்சென்டோவின் வீரிய ஒட்டு ரகஉதவியால் தொழில்துறைக்குத் தேவையான கச்சாப்பொருளாக மாறி உற்பத்தி உயர்ந்துள்ளது.
கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், பிகார், உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான், குஜராத் ஆகியவை முன்னணி மாநிலங்கள். இம் மாநிலங்களில் ஆண்டுதோறும்10 லட்சம் டன்கள் முதல் 40 லட்சம் டன்கள் வரை மக்காச்சோள உற்பத்தி உண்டு.
கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப்பட்ட விவசாயிகள் புதிதாக மஞ்சள் மக்காச்சோளசாகுபடியில் இறங்கியுள்ளார்கள் என்று கவனித்தால் பணப் பொருளாதாரத்தில் சிக்காமல்சொந்தத் தேவைக்கென்று விவசாயத்தை வாழ்க்கையெனப் போற்றி வெள்ளை ரகத்தைப் பயிரிட்டு வாழ்க்கையை ஓட்டியவர்கள். மேலும் சிலர் சொந்தப் பயனுக்கென்று மானாவாரியாகப் புஞ்சை தானியங்கள், சிறு தானியங்கள் விளைத்தவர்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் மான்சென்டோவிடம் சிக்கிவிட்டனர்.
மக்காச்சோளத்தில் முக்கியமாக இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று வெள்ளை. வெள்ளைமக்காச்சோளமே மனித உணவாகவும் சுவையாகவும் இருக்கும்.
கோதுமை மாவில் ரொட்டி செய்வதுபோல் வெள்ளை மக்காச்சோளத்தை ரொட்டி சுட்டுசாப்பிடுவார்கள். மஞ்சள் மக்காச்சோளம் மனித உணவு அல்ல. கோழி உணவு.
சமீபகாலமாக மஞ்சள் மக்காச்சோள மாவு கறவை மாடுகளின் அடர் தீவனமாகவும்பயனாகிறது. தங்கள் உணவுக்காக வெள்ளை மக்காச்சோளம் பயிரிட்ட சிறு விவசாயிகள்,மலைப்பகுதி விவசாயிகள் இன்று மான்சென்டோவால் கவரப்பட்டு வீரிய ஒட்டு மஞ்சள்ரகங்களைத் தொழில் உபயோகத்துக்குப் பயிரிட்டு லாபமும் பெறுகிறார்கள்.
பாரம்பரிய மக்காச்சோளம் ரசாயன உரம் பூச்சி மருந்து இல்லாமல் மானாவாரியாகவோ -குறைந்த பாசனத்திலோ விளைந்த நிலை மாறி இன்று கூடுதல் இடுபொருள் - நீர்ச் செலவில் வீரிய ஒட்டு பயிராகிறது. நடுத்தரம் - பெரிய விவசாயிகள் மஞ்சள் மக்காச்சோளம், கோதுமை, கரும்பு சாகுபடியைவிடக் கூடுதல் லாபம் தருவதால் மெல்ல மெல்ல மஞ்சள் மக்காச்சோளத்துக்கு மாறிவிட்டார்கள். மான்சென்டோவின் தங்கப்புரட்சியில்சங்கமித்துவிட்டனர்.
உலகளாவிய நிலையில் மக்காச்சோள உற்பத்தியில் முதல் நிலை வகிக்கும்அமெரிக்காவில் 33.3 கோடி டன்னுடன் ஒப்பிட்டால் இந்திய உற்பத்தி சுமார் 2 கோடி டன்என்பது குறைவு என்றாலும் அமெரிக்காவின் ஆலோசனைப்படி மாற்றுப்பயிர்த் திட்டத்தில்மஞ்சள் மக்காச்சோளம் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளிலும் மஞ்சள் மக்காச்சோளஉற்பத்திக்கு அமெரிக்கா ஊக்கப்படுத்துவதன் நோக்கமே ஜின் எத்தனால் உற்பத்தி மூலம்கார்பன் கிரெடிட்டையும் (ஸ்ரீஹழ்க்ஷர்ய் ஸ்ரீழ்ங்க்ண்ற்) தாங்களே சுருட்டி விடலாம் என்பதே.
அமெரிக்காவில் விவசாயிகளுக்கு மஞ்சள் ரக மக்காச்சோள சாகுபடி என்றால் சிறப்பு மானியங்கள் உண்டு. அமெரிக்காவில் சராசரி உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு 10 டன்கள். அங்கு கோதுமை உற்பத்தியும் உணவாகப் பயனுறும் வெள்ளை ரக மக்காச்சோளஉற்பத்தியும் குறைந்து வருகிறது. ஏனெனில், உலகிலேயே மக்காச்சோள ஜின் - எத்தனால்உற்பத்தியில் அமெரிக்காவின் ஏகபோகம் கொடிகட்டிப் பறக்கிறது.
அமெரிக்காவின் மக்காச்சோள எத்தனால் தொழிலின் தேவையே 200 கோடி டன்களாகும்.சுமார் 120 கோடி டன் அளவில் மக்காச்சோளம் எரிபொருள் சாராயமாக மாறிப் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறதாம். மக்காச்சோள எத்தனால் - மீண்டும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி என்பதால் கார்பன் கிரெடிட்டும் உண்டு.
எனவே, உலகம் முழுவதும் உணவுப்பயிராகிய மக்காச்சோளத்தை மஞ்சளாக்கித்தன்னாட்டின் தொழில் தேவைக்குரிய கச்சாப் பொருளாக மாற்றி லாபத்தை அபகரிக்கும்தந்திரம் ஒருபுறம். புதிய இந்தத் தங்கப்புரட்சி மூலம் இன்று லாபம் என்று மகிழ்ச்சியுறும் அதே விவசாயிகள் நாளை நஷ்டமடைந்து நிலத்தைவிட்டு வெளியேறினால்,கார்ப்பரேட்டுகளின் நில அபகரிப்புக்கு வழியும் பிறக்கும்.
மான்சென்டோவின் மஞ்சள் மக்காச்சோளத் தங்கப் புரட்சியால் அமெரிக்காவுக்குத் தங்கம் கிடைக்கும். இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? தங்கம் கிடைக்காது. நிறைய பங்கம் கிடைக்கும்.