திருந்திய நெல் சாகுபடி
நெல் சாகுபடி
நெல் ஒரு நீர்த்தாவரம் என்று நாம்
ஒவ்வொருவரும் நம்பி வருகிறோம். ஆனால் இது ஒரு முரண்பாடான கருத்தாகும். ஏனெனில் அது ஒரு நீர்த்தாவரம் அல்ல.
இப்பயிர் நீர்த்தாவரமாக வளரும்போது, தன்னுடைய
அதிக சக்தியை ஏரண்கைமா திசுக்களை உருவாக்குவதற்கு
பயன்படுத்துகிறது. மேலும் பூக்கும் தருணத்திற்கு முன்பே நெல்லின் 70% வேர்கள் சேதமடைகின்றது.
திருந்திய நெல் சாகுபடி
இந்த முறையில் வயலில் நீரைத் தேக்கி
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பூக்கும் தருணத்திற்கு முன்பு வயலை ஈரப்பதத்துடன் வைத்தால் போதுமானது.
பயிர் பூக்கும் பருவத்தை அடைந்தவுடன் வயலில் 1 இஞ்ச்
தண்ணீரை நிறுத்த வேண்டும். திருந்திய நெல்
சாகுபடி செயல் முறைக்கு நாம் சாதாரண முறையில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் பாதி அளவு
இருந்தால் போதுமானதாகும்.
· உலக அளவில் 1 லட்சத்திற்கு மேலான விவசாயிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.
· சிறு மற்றும் குறுகிய விவசாயிகள் இம்முறை
மூலம் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி குறைந்த செலவில், அதிக மகசூல் பெறலாம்.
· 1980-இல் மடகாஸ்கரில் திருந்திய நெல் சாகுபடி முறை
உருவாக்கப்பட்டது. சீனா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இம்முறையை பரிசோதித்து வருகின்றன. நம் நாட்டில் 2005ஆம்
ஆண்டு ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் குருவை பருவத்தில் திருந்திய நெல்சாகுபடி
முறை பரிசோதிக்கப்பட்டு வரவேற்கத்தக்க தீர்வுகளைக் கொடுத்துள்ளது.
திருந்திய நெல் சாகுபடி - குறைந்த அளவு மூலப்பொருள்
ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை இருந்தால் போதுமானதாகும். இம்முறையில் 25 செ.மீ x 25 செ.மீ
இடைவெளியில் பயிர்களை நடவு செய்ய வேண்டும்.
ஆனால் சாதாரணமாக மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை தேவைப்படுகிறது.
இம்முறையில், உரங்களுக்கும், பயிர் பாதுகாப்பு
மருந்துகளுக்கும் குறைந்த செலவே பிடிக்கின்றன.
வேர் வளர்ச்சி
திருந்திய
சாகுபடி முறையில் செடிகள் நல்ல வளமான இயற்கையான சூழலில் வளர்வதால் வேர்கள்
பெரிதாக வளர்ந்து மண்ணில் ஆழமாகச் சென்று
சத்தை உறிஞ்சுகின்றன.
திருந்திய நெல் சாகுபடி - ஆரம்ப காலத்தில் ஆட்கள் அதிகமாக
தேவை
· நடவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும் 50% அதிக
ஆட்கள் தேவை.
· குடும்ப ஆட்களை பயன்படுத்திக் கொள்ள இம்முறை
ஏற்றதாகும்.
· முறையாக வேலையை கற்றுக்கொண்டபின், வேலை
ஆட்களுக்கு செய்யப்படும் செலவு குறைகிறது.
திருந்திய சாகுபடி முறையில் நெற்பயிர்கள் வளமாக வளர்ந்து
· அதிக பருமான வேர்கள்
· அதிக வளமான தூர்கள்
· பெரிய கதிர்கள்
· பதர் இல்லாத முற்றிய, அதிக எடையுடைய தானியங்களை கொண்ட கதிர்கள்
· மண்ணில் உள்ள ஊட்டத்தை உறிஞ்சி பூச்சி
தாக்கத்தை எதிர்த்தல் போன்ற பயன்களை பெறுகிறது.
விரைவாக அதிக தூர்கள் பிடித்தல்
தூர்கள் பெருமளவு உருவாகிய உடனேயே
கதிர்பிடிப்பு பருவம் வருகிறது. ஒவ்வொரு கதிர்களிலும் அதிகமான நன்கு முற்றிய மணிகள் கிடைக்கிறது. மேலும்
பயிர்கள் சாய்வின்றி வளர்கிறது.
· ஒரு செடிக்கு 30 முதல் 50
தூர்களை சுலபமாக பெற
முடியும்.
·
திருந்திய சாகுபடி முறையை முறையாக பின்பற்றினால் ஒரு செடிக்கு 100 தூர்களையோ அல்லது அதிகமாகவோ
பெறமுடியும். ஏனெனில் இம்முறையில் இளவயதுடைய நாற்றுகளை நடவு செய்வதால் செடிகளின் வேர்கள் சாகாமல் நன்கு வளர்கின்றன.
|
|
திருந்திய நெல் சாகுபடி - பல மாநிலங்களில்
திருந்திய
சாகுபடி பற்றிய முறையான ஆய்வு
2002 - 2003 ஆம்
ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் திருந்திய நெல் சாகுபடி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரப்பிரதேசம்
வேர்ல்ட்
வைட் பண்ட் மற்றும் ஆந்திர வேளாண் பல்கலைக் கழகம் இணைந்து திருந்திய நெல்சாகுபடி
முறையை மதிப்பீடு செய்ய செயல் திட்டம் தீட்டின. கடந்த பீசானம் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல் திட்டம் தற்பொழுது
முடிவுக்கு வந்துள்ளது. இச்செயல்திட்டம் 11 மாவட்டங்களில்
பரவியுள்ள 250 விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளது.
வயல்வெளிப் பார்வையின்போது விவசாயிகளிடம்
இம்முறை பற்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் மூலம்
நெல்லுக்கு செலவிடப்படும் நீரின் அளவு
குறைந்துள்ளதாகவும், விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும்
விவசாயிகள் தெரிவித்துள்ளனர் (வினோத் கெளட், வேர்ல்ட் வைட் பண்ட் - செய்தி அறிக்கை இதழ் எண் 15. ஜீன் 2005). 2003 ஆம் ஆண்டு கார் பருவத்தில் வயல் வெளி செயல் விளக்கங்கள் மூலம் 22 மாநிலங்களில் திருந்திய நெல்சாகுபடி முறை மேற்கொள்ளப்பட்டது. விதையின் அளவு ஒரு எக்டருக்கு 5 கிலோவாக இருப்பதால் 95%
விதையினை தங்களால் சேமிக்க முடிந்தது என்றும் பயிருக்கு செலுத்தப்படும் தண்ணீரின் அளவு 50% குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உருளை கருவியால் களையெடுப்பதிலும், இளநாற்றை நடுவதிலும், தண்ணீர்
பராமரிப்பிலும் சில சிரமங்கள் உள்ளதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர். ஆனாலும் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் வளமாக இருப்பதாக தெரிவித்தனர்.
மகபூப்நகர்
மாவட்டத்தில் உள்ள திரு தாமோதர் ரெட்டி என்பவர் இம்முறையை செயல்படுத்தி 30 மூட்டைகள் அதிகமான மகசூலை பெற்றுள்ளார். ஆனால்
இவர் இதற்காக செய்த ஆரம்ப முதலீடு ரூ. 3000 மட்டுமே ஆகும். அவரைப் போலவே மற்ற விவசாயிகளும் இம்முறையின் மூலம் மிகுந்த
மகழ்ச்சி அடைந்துள்ளனர் என்று செல்வி
உமாமகேஸ்வரி கடந்த மே 10 ஆம் தேதி மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ‘ராமனப்பாடு’ கிராமத்தில் நடந்த திருந்தி நெல் சாகுபடி உழவர் தினத்தில் தெரிவித்துள்ளார்.
வாசன் மற்றும் சி.எஸ்.ஏ இணைந்து வேர்ல்ட் வைட் பண்ட் -
இக்ரிசாட் செயல்திட்டத்தின் உதவியுடன் ஆந்திரமாநிலத்தில் உள்ள 1000 விவசாயிகளுடன்
பணியாற்றி, விவசாயிகளின் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவித்தனர்.
இந்தியாவில்
முதன்முதலாக ஆந்திர மாநிலத்தில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய கொள்கை
ஏற்படுத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் வெற்றியை
கண்டு, ஆந்திர முதலமைச்சரும், வேளாண் அமைச்சரும் திருந்திய நெல் சாகுபடியை பிரபலப்படுத்துவதற்கு ரூ. 4 கோடி
நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை அறிவித்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையினை பற்றிய கலந்தாய்வை ஹைதராபாத்தில் உள்ள திரு.
நாகரத்தினம் நாயுடு அவர்களின் பண்ணையில்
நவம்பர் 15, 2005 ல் வேர்ல்ட் வைட் பண்ட் நடத்தியது (தி ஹிந்து நாளிதழ், நவம்பர் 16, 2005 ஆந்திர பிரதேசம்). அதன் பின்னரே 4 கோடி ரூபாய் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் கட்ட நடவடிக்கையாக
1. விவசாயிகளுக்கு திருந்திய நெல்
சாகுபடியை ஒவ்வொரு கிராமங்களிலும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிப்பதற்காக பெருந்திட்டம் தீட்டபப்ட்டது.
2. உருளை கருவிகள் மற்றும் குறியீடுகளை
விவசாயிகளுக்கு 50% சதவீத மானியத்துடன் அளித்தல்
3. திருந்திய நெல்சாகுபடி விவசாயிகளுக்கு
இலவச மின்சார நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளித்தல்
தமிழ்நாடு
கிள்ளிகுளத்தில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வேளாண்மை
கல்லூரியில் 2003 - 2004 திருந்திய நெல்சாகுபடி பற்றிய ஆய்வு
நடத்தப்பட்டது. இதில் 53% நீரை திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் சேமிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில், 21 நாட்கள் இளவயதுடைய நாற்றுகள் 15 x 10 செ.மீ என்ற இடைவெளியில் சாதாரணமாக நடவு செய்யப்பட்டது. ஆனால்
திருந்திய சாகுபடி முறையில் 14 வயதுடைய இளநாற்றுகளை 20 x 20 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் 2.5 செ.மீ
உயரத்திற்கு நீர் கட்டப்பட்டது. பஞ்சு கட்டும் பருவம் வரை, முதலில் கட்டிய நீர் வடிந்து மண்ணின் மேல்
பரப்பில் சிறு கீரல் வெடிப்புகள் தோன்றிய பின் மறுமுறை நீர் கட்டப்பட்டது.
ஆனால் சாதாரண முறையில் 5 செ.மீ உயரத்திற்கு நீர்
நிறுத்தப்பட்டது. விளைச்சலை ஒப்பிட்டு பார்த்தபொழுது, திருந்திய நெல் சாகுபடி முறையில் 28% அதிக
விளைச்சல் கிடைத்தது (3, 892 கிலோ / எக்டர்).
தமிழ்நாடு
மாநில நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் திருந்திய நெல் சாகுபடி
முறையை இரு வயல்வெளி திட்டம் மூலம் மதிப்பீடு
செய்தது. இதில் தாமிரபரணி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 7227 கிலோ/எக்டர் மகசூல் கிடைத்துள்ளதாக தெரியவந்துளள்து. ஆனால் தற்போதைய சாதாரண சாகுபடியின் மூலம் 5637 கிலோ/எக்டர் மகசூல் மட்டுமே கிடைத்தாக தெரிவித்துள்ளனர். திருந்திய நெல் சாகுபடி முறையில்
சராசரியாக 1 எக்டருக்கு 1570 கிலோ மகசூல்
அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 31 விவசாயிகள்
திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி ஒரு எக்டருக்கு 8 டன்னுக்கு மேல் மகசூல் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகம் திருந்திய நெல் சாகுபடி முறையை பரிந்துரை செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில், அரசு வேளாண் துறை நெல்சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய செயல்முறைகளை மேற்கொண்டது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள ஜால்தா மற்றும் பல்ராம்பூர்
ஒன்றியங்களில் திருந்திய நெல் சாகுபடி அனுபவம்
பற்றி ஆய்வை ‘பிரதாண்’ அமைப்பு நடத்தியது. இந்த ஆய்வு கார் பருவத்தில் சுமார் 110 விவசாயிகளிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருந்திய நெல் சாகுபடி முறையின் செயல் முறைகளில் பாதியை கடைபிடித்தால் கூட 32%
அதிக மகசூல் பெறமுடியும்
என்று தெரிவித்துள்ளனர். பல்ராம்ப்பூரில் 59 பாத்திகளில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண சாகுபடி ஆகிய இருமுறைகளின்
மகசூல் ஒப்பீடு செய்யப்பட்டது. இதில் ஒரு
எக்டருக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் 6,282 கிலோவும்
சாதாரண சாகுபடியில் 4194 கிலோவும் கிடைத்தது. அதாவது திருந்திய நெல் சாகுபடியில் 49.8% அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் வைக்கோல் உற்பத்தியும் திருந்திய நெல்சாகுபடியில் (5150 கிலோ/எக்டர்) சாதாரண முறையைவிட (3456 கிலோ/எக்டர்)
அதிகமாக கிடைத்தது.
ஆனால் ஜால்தா ஒன்றியத்தில் 11.9% அதிக
மகசூலை மட்டுமே பெறமுடிந்தது. வறட்சியினாலும், ஒரே
ஒரு களையெடுத்ததனாலும், சற்று வயதான நாற்றுகளை நடவு செய்ததாலும் விளைச்சல் குறைந்திருந்தது.
குஜராத்
குஜராத்
வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், திருந்தி
நெல் சாகுபடியில் 5,813 கிலோ/எக்டர் மகசூலும், சாதாரண முறையில்
5840 கிலோ/எக்டர் மகசூலும்
கிடைத்தது. ஆனால் 46% நீர் மட்டும் செலவிடப்பட்டது,
பாண்டிச்சேரியில்
ஆரோவில்லில் உள்ள அண்ணபூர்ணா கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை பற்றிய
சோதனை நடத்தப்பட்டது. பின்னர் ம.சா.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இச்சோதனையை நடத்தியது.
‘பிரதாண்’ அமைப்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் திருந்திய நெல் சாகுபடியை
செயல்படுத்தியது.
பஞ்சாப்
மாநிலத்தில் ஜெ.டி.எம். சங்கம், குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நெல்
சாகுபடி செய்ய பல்வேறு யுக்திகளை புகுத்தி வருவதாக சுதீந்தர் ஷர்மா கூறியுள்ளார்.
திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் 60-70 % தண்ணீரை
சேமிக்க முடியும் என்றும் இது நீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருந்திய நெல் சாகுபடி - செய்ய வேண்டியது என்ன?
1. குறைந்த வயதுடைய நாற்றுகளை
நடவு செய்தல்
திருந்திய
நெல் சாகுபடி முறையில் 8-12 நாட்கள் வயதுடைய, இரண்டு இலைகள் உடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இதனால் தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும்
வேர்கள் நன்கு வளரும்.
2. கவனமாக நடவு செய்தல்
நாற்றுகளைப்
பறித்து வயலுக்கு எடுத்துச் செல்லும்போது சேதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும். நாற்று பறிக்கும் போது தனியாக
எடுக்காமல் விதை மற்றும் வேருடன் கவனமாக எடுக்க வேண்டும். நாற்றுகளை மிக ஆழமாக நடவு செய்தல் கூடாது. மிதமான ஆழத்தில் நடவு செய்தால்
தூர்கள் அதிகரிக்கும்.
3. அதிகமான இடைவெளி
நாற்றுகளை
குத்தாக நடவு செய்தல் கூடாது. ஒரு குத்துக்கு ஒரு நாற்றை சதுர வடிவில் 25 செ.மீ X 25 செ.மீ என்ற முறையில் நடவு செய்ய
வேண்டும். இதன் மூலம் வேர்கள் நன்றாக வளரும்.
4. களையெடுத்தல் மற்றும்
காற்றோட்டம்
திருந்திய
நெல் சாகுபடி முறையில் நீர்த்தேக்கம் இல்லாததால் களையெடுத்தலும், மண்ணின் காற்றோட்டமும் அவசியமாகும்.
எனவே உருளும் களைக்கருவி கொண்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும். இரண்டு முறை களை
எடுக்க வேண்டும். நடவு செய்த 10 நாட்களுக்கு பின் முதல் களை எடுக்க வேண்டும். இதனால் வேர்கள் நன்றாக வளர்ந்து களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணில் காற்றோட்டமும், நுண்ணுயிர்களும் அதிகரிப்பதால் வேர்களுக்கு ஆக்ஸிஜனும், தழைச்சத்தும் கிடைக்கிறது. இரண்டு
களைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு களை நீக்கத்திற்கும் ஒரு எக்டருக்கு 2 டன்கள்
அதிக விளைச்சல் கிடைக்கிறது.
5. நீர் மேலாண்மை
திருந்திய
நெல் சாகுபடி முறையில் சீராக நீர் பாய்ச்சி, மண்ணை
ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நீர் மறைய நீர் கட்டி, நிலத்தை காயவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் வேர்கள் அழுகாமல் நன்கு வளர்ச்சி அடைந்து மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை
எடுத்துக் கொள்கின்றன.
6. தொழுஉரம் அல்லது மக்கிய
உரமிடுதல்
இரசாயன
உரங்களை மட்டும் பயன்படுத்தாமல் ஒரு ஹெக்டருக்கு 10 டன்கள்
என்ற அளவில் தொழு உரம் இடவேண்டும். இதனால் மண்ணின் வளம்
அதிகரித்து, நல்ல சீரான ஊட்டச்சத்துகள்
பயிர்களுக்கு கிடைக்கின்றது.
நாற்றங்கால் பராமரிப்பு
· விதையளவு - ஏக்கருக்கு 2 கிலோ
· நாற்றங்கால் அளவு - 1 ஏக்கர் நடவு வயலுக்கு 1 சென்ட்
· வளமான நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்
· முளை கட்டிய விதைகளை நாற்றங்காலில் விதைக்க வேண்டும்
· தோட்டக்கலை பயிர்களுக்கு அமைப்பது போன்று நாற்றங்கால் மேடை அமைக்க
வேண்டும்
· நன்கு மக்கிய தொழு உரம் ஒரு அடுக்கு
இடவேண்டும்
· முளைகட்டிய விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும்
· விதைத்தபின் அதன் மேல் ஒரு அடுக்குத் தொழு உரம் இடவேண்டும்
· வைக்கோல் போர்வை அமைக்க வேண்டும்
· கவனமாக நீர் பாய்ச்ச வேண்டும்
· நாற்றுக்களை நடவு வயலுக்கு எடுத்துச் செல்லும் போது வாழை மட்டையைப்
பயன்படுத்திச் சுலபமாக எடுத்துச் செல்ல்லாம்.
நடவு வயல் தயார் செய்தல்
· நடவு வயல் தயாரிப்பில் சாதாரண நெல் சாகுபடி
முறைக்கும் திருந்திய நெல் சாகுபடி முறைக்கும் வேறுபாடு மற்றும் மாற்றங்கள் எதுவும் இல்லை.
· வயலை நன்கு சமப்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் சீராக நீர் பாய்ச்ச முடியும்.
· ஒவ்வொரு 3 மீ தூரத்திற்கும் ஒரு வடிகால்
வாய்க்கால் அமைக்க வேண்டும்.
· 25 X 25 செ.மீ இடைவெளியை குறியீடு கொண்டு
குறித்து பின்பு குறுக்கே நடவு செய்யவேண்டும். (தமிழ்நாடு
வேளாண் பல்கலைக் கழகத்தின் மூலம் உருளும் குறியீட்டுக்
கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது)
நாற்று நடவு
· 10-12 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
· நாற்றுகளை பறிக்கும் போதும், நடவு
செய்யும் போதும் சேதமில்லாமல் கவனமாக செய்ய வேண்டும்.
· விதைமேடையில் 4-5 இஞ்சுக்கு அடியில் ஒரு உலோக தகட்டை
உபயோகித்து நாற்றுகளை அகற்றி வேர்களுக்கு தொந்தரவு
இல்லாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
· நாற்றுகளை மிதமான ஆழத்தில் நடவேண்டும். ஒவ்வொரு நாற்றையும், விதையுடன் கூடிய மண்ணுடன் ஆள்காட்டி மற்றும் கட்டை விரல் கொண்டு மெதுவாக நடவேண்டும்.
· ஒரு ஏக்கருக்கு 10-15 ஆட்கள் தேவைப்படும்.
நீர் மேலாண்மை
· திருந்திய நெல் சாகுடி முறையில், மண்ணை
ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் போதும் நீர்த்தேக்கம் கூடாது.
· நிலத்தில் இலேசான கீரல் வெடிப்புகள் ஏற்பட்டால் மட்டும் நீர் பாய்ச்ச
வேண்டும்.
· நீர் பாய்ச்சி காயவிட்டு பின்பு நீர்
பாய்ச்சும் முறையை பின்பற்றுவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து, சத்துகளை சுலபமாக கிடைக்கச்
செய்கின்றன.
களை மேலாண்மை
· திருந்திய நெல் சாகுபடியில் நீர்த்தேக்கம் இல்லாததால் களைகள்
அதிகரிக்கும்.
· இரு வரிசைகளுக்கிடையே உருளும் களைக்
கருவியைப் பயன்படுத்தி களை எடுக்க வேண்டும்.
· பயிரின் தூர்களுக்கு அருகில் உள்ள களையை
கையால் எடுக்க வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடியின் நன்மைகள
· அதிக மகசூல் (தானியம் மற்றும் வைக்கோல்)
· குறைந்த காலம் (10 நாட்கள் குறைவு)
· குறைந்த இரசாயண இடுபொருள் முதலீடு
· குறைந்த அளவு நீர்த் தேவை
· பதர் சதவீதம் மிகக் குறைந்து முற்றிய
மணிகள் கிடைக்கும்.
· தானிய எடை கூடும்
·
சாயாமல்
இருக்கும்
· குளிர்ச்சியைத் தாங்கும் தன்மையுண்டு
· நுண்ணுயிர் செயல்பாட்டினால் மண்ணின் வளம் அதிகரிக்கும்.
திருந்திய நெல் சாகுபடியின் குறைபாடுகள்
· ஆரம்ப காலத்தில் வேலை ஆட்களின் செலவு அதிகம்
· வேலை ஆட்கள் தேவையான
திறமைகளைப் பெற்றிருப்பது கடினம்
0 கருத்துரைகள்:
Post a Comment