Thursday, 31 January 2013
சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்


மழை என்பது எல்லா காலங்களிலும் கொடைக்கு உவமையாகவே புலவர்களால் கையாளப்படு வந்துள்ளது. இவ்வுலக உயிர்கள் யாவும் வாழ்வதற்குக் காரணமானது  மழை என்பதை அனைவருக்கும் உணர்வர்அதனால்தான் புலவர்கள் மழையைக் கொடைக்கு உவமையாக்கினர். அவ்வாறு உவமைக்காக கூறப்பட்ட பல செய்திகள் இன்றைய வேளாண் அறிவியலோடு ஒத்திருப்பதை ஊன்றிக் கற்போரால் உணரமுடியும். இவ்வாறு மழையை உவமையாகக் கூறுகின்ற அதே நேரத்தில் அம்மழை தோன்றுவதற்கான அறிவியல் காரணத்தையும் பண்டைத் தமிழர்கள் மிகச்  சிறப்பாக அறிந்திருந்தனர். அந்த வகையில் சங்க இலக்கியத்திலுள்ள மழை பற்றிய அறிவியல் செய்திகளை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மழையின் சிறப்பு;

கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின் கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.
''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே''  (புறம் 107)
எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்து குறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)

எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது என குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்  

சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாக மாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது மேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின் போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள் தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாக அப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக் காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.
அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ள வெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்று வருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள் மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டு மழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல் காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில் இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்து சூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்று மண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்கு இழுத்து வருகின்றன’’
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே   (அகம் 183)

என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின் அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால் மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது, தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.
காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமான இடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப் பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது. இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)
எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது விளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும். இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின் காரணத்தாலும் தமிழகம் புவியின்  நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும் கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத் தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை
வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்   (ஐங். 469)
என்றும்
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)

என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கான காரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை   (முல்லை. 1-2)
என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது

இதனை வலியுறுத்தும் விதமாக 
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840

எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்த காரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்கு ஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி  வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்த முடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]
  
என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்கத் தக்கதாகும்.

மலையும் மழையும்

காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள் தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில் காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்தி அதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள் தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன் மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவு தண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன. இதனால் தான்  மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர் இலைத்துளைகளின் வழியாக  நீராவியாக காற்று மண்டலத்தில் மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக் காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும் சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காக உள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்த புலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து.  (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள் மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன. இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப் பொழிவதை

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாக பண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக, அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன. அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக் காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை இகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


நன்றியோடு - சு.ஆனந்தராசு

0 கருத்துரைகள்: