கியூபாவில் இயற்கை வேளாண்மை
சி. நெடுஞ்செழியன்
1959ல் ஏற்பட்ட கியூபா புரட்சியிலிருந்து 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் கூடிய வணிக உறவுகள் முறிவடையும் வரை, கியூபாவில் வேளாண்மையானது மூலதனம் அதிகமான, அதிகளவில் ஓரின பயிர் வளர்க்கும் விதமாக இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக கியூபா வியாபாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், தொழிற் கருவிகள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி போன்ற இடு பொருட்களுக்காக சோசலீச நாடுகளை சார்ந்து இருந்தது.
1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் முறிந்தால் உணவு இறக்குமதி 50%க்கும், பூச்சிகொல்லிகள் 60%மும், உரம் 77%ம், வேளாண்மைக்குத் தேவையான பெட்ரோலிய பொருட்கள் 50% வீழ்ச்சியடைந்தன.இதனால் வேளாண் நிர்வாகம் இரண்டு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறைந்த விவசாய உள்ளீடுகளை கொண்டு இருமடங்கு வரை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி உணவு பயிர்களின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதாகியது.
இதன் விளைவாக கியூபாவில், அதிக உள்ளீடு விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு பெருமளவில் திரும்ப வேண்டயிதாயிற்று. பொதுவாக இவ்வாறு இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மட்டும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும். ஆனால், கியூபாவால் இந்த கால அவகாசத்திற்காக காத்திருக்க இயலாது. இதனால் கியூபாவின் அறிவியலறிஞர்களும், திட்டமிடுபவர்களும், புதிய வழிமுறைகளை, இயற்கை வேளாண்மையில் புகுத்தி இந்த கால அளவை குறைக்க முயன்றனர்.
கியூபா வேளாண்மையில் ஓரினப்பயிர் வளர்ப்பு முறைக்கு மாற்றாக பல்வகைப் பயிர் வளர்க்க முயன்றனர். வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும், வேதியல் பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக உயிரியல் பூச்சி கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்களுக்கு பதிலாக கால்நடைகளை கொண்டு உழுதனர். நீர் பாசனத்தை நம்பினால் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் பயிர் செய்ய முற்பட்டனர். விவசாயத்தில் உள்ளூர் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டியதால், அவர்கள் நகரங்களுக்கு வெளியேறுவது வெகுவாக குறைந்தது.
நவீன வேளாண்மையால் உற்பத்தியான அளவை அடைய, பாரம்பரிய இயற்கை வேளாண்மை மூலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதற்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும், மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பொருட்களுக்கு நுகர்வோர்களும் கூடுதல் தொகை கொடுப்பவர். இந்த கால கட்டத்தில், மண் வளம் பாதுகாக்கப் படவேண்டும்.
மற்ற நாடுகளில், நவீன வேளாண்மையின்றி, பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்பது ஏதாவது, சில பகுதிகளில் நடக்கும். ஆனால் கியூபாவில் நாடு முழுவதுமே இயற்கை வேளாண்மைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர் பாதுகாப்பிற்காக கியூபாவில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறை கடைபிடிக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த பெருமளவில் உயிரியல் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் தேவைகளுக்காக மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும், அரசு பண்ணைகளும் இவற்றை உற்பத்தி செய்தன. மேலும் மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப்படுத்த நுண்ணியிரிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. களைகளை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை வெற்றி பெறவேண்டுமானால் மண், நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும். கியூபாவில் நிலம் உப்புத்தன்மையாக மாறுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் மண் அரிமானம், உயிரியல் பொருட்கள் குறைவது கட்டுப்படுத்தப்பட்டது. மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும், பயிர் சுழற்சி மூலம் கிடைக்கும் தாவர உரங்களை பயன்படுத்தியும், வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரிக்க உபயோகப்படுத்தினர். கியூபாவில் பயன்படுத்திய இயற்கை உரங்கள் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் விளை நிலங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் ஊடுபயிராக செய்யப்பட்டன. பாரம்பரியமாக கியூபா விவசாயிகள் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்துவருபவர்கள். எ.கா. சோளமும், பீன்சும், காபியுடன் வாழையும் பயிரிட்டனர்.
கியூபாவில் மண்வள மேம்படுத்தலில் காடு வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பானியர்கள் கியூபாவிற்கு வந்த பொழுது, கியூபாவில் 80% காடுகளாக இரந்தது. 1959 புரட்சியின் போது, அந்நாட்டில் 18% தான் காடுகள் இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிறகு, காடு வளர்ப்பிற்கும், நில அரிப்பை தடுப்பதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1970களில் சமூக மரக்கன்று, பண்ணைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதன் குறிக்கோள் என்னவெனில் விதைகளை சேகரித்து, நாற்றுகள் வளர்த்து, அவற்றை கிராமப்புறங்களில் நடுவது என்பதாகும். 1989 - 1990ல் 2,00,000 எக்டேர் நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டன. இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் காடுகளின் அளவு விரைவாக குறைந்து வருகிறது. கியூபா விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையும் அவர்களது அறிவையும், தற்பொழுதுள்ள அரசு விவசாய தொழில் கலைஞர்களின் புதிய முறைகளையும் இணைத்தது, இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதற்கான கியூபா பெரும் முயற்சி எடுததுக் கொண்டது.
லத்தீன் அமெரிக்க மக்கள் தொகையில் 2% முள்ள நாடு கியூபா, ஆனால் விஞ்ஞானிகளில் 11%மும் நல்ல ஆராய்ச்சி பின்புலமும் கொண்ட கியூபாவில் அரசு இதனை முனைப்புடன் நடத்தியது. இதற்காக 1982ல் மாற்று விவசாயம் என்பது இயக்கமாக மாறியது. இதனால் இந்நாள் வரை உபயோகிக்கப்படாத ஆராய்ச்சி முடிவுகள், உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை நடைபெற்றது. இதனால் இதன் பயனை கியூபா மக்கள் 1989 - 1990ல் பெற முடிந்தது.
பாரம்பரிய முறை விவசாயம் செய்ய அதிக ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்கு பதிலாக கால்நடையை உபயோகிக்கும் போது, மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதற்காக கிராமப்புறங்களில் வேலை செய்ய விருப்பத்துடன் வரும் நகரமக்களுக்காக, தற்காலிக தொழிலாளர் குடில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு தற்காலிகமாக வருபவர்கள் 15 நாட்கள் வேலை செய்து விட்டு தங்கள் நகரங்களுக்கு திரும்பி விடுவார்கள். 1991ல் முதல் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஹவானா நகரத்தில் 1,46,000 பேர் கிராமப்புற வேலையில் பணிபுரிந்தனர்.
இரண்டு வருடம் வேலை செய்ய ஒரு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் ஒவ்வொருநாளும் 12 மணி நேரம் வேலை செய்தனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆசிய விளையாட்டின் போது கட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம் போன்ற பெரிய வீட்டு வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வசிப்பவர்களுக்கு மருத்துவ வசதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகள் போன்ற வசதிகளும் அளிக்கப்பட்டன. இரண்டாண்டு வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.
அரசு நிலங்கள் சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொழிலாளர் பொறுப்பில் அளிக்கப்பட்டது. இதில் அதிகமான விளைச்சலை பெறும் குழுக்களுக்கு ஊக்க பரிசு அளிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் இருமடங்காகியது. தற்பொழுது வாழை மற்றும் எலுமிச்சை பயிர்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் டர்கிளோ திட்டம் எனும் முறையில், இராணுவ சேவை முடிந்தவுடன் எல்லா இளைஞர்களும் விவசாயத்தில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு கிராமப்புற சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் நகரப்புறங்களிலிருந்து வெளியேறி கிராமப் புறங்களில் தங்க வாய்ப்பு ஏற்படும்.
***********
உணவு பயிர்களுக்காக கியூபா வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று, எனவே உணவு தற்சார்புடைய 1989ல் தேசிய உணவு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி உணவுபயிர்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிக அளவில் பெருக்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. மேலும் ஹவானாவை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களை சாராமல், தற்சார்புடையதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நகரங்கள் உணவுப் பொருட்களுக்காக கிராமப்புறங்களை சார்ந்திருந்ததால் அதிக செலவு ஏற்பட்டது. எ.கா. கிராப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கனிகளை குளிர்பதனப்படுத்தவும், சேமித்து வைக்கவும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்திற்கும் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க நகரங்களிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மனித வளமே தேவை, பெரிய இயந்திரங்கள் தேவையில்லை.
கியூபாவின் உணவில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் குறைவாக இருப்பதால், நகரத்தில் உள்ள தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும். சிறிய தோட்டங்களில், பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், தாவர நோய்கள் மற்றும் நச்சு பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். கடைசியாக, நகர தோட்டங்களினால் உணவு பிரச்சனையை ஒரு தனிநபரே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு அரசாங்கத்தை எதிர்நோக்க தேவையில்லை.
நகர தோட்டங்கள் கியுபாவில் மூன்று வகைகளாக இருந்தன. முதல் தனியார் நிலத்தில் தனி நபர் அல்லது குடும்ப தோட்டம். இரண்டு அரசு நிலத்தில் கூட்டுறவு மூலம் பயிர்செய்வது மூன்று அரசு தோட்டங்கள். முதல் வகையான தோட்டத்தில், தனி நபர் அல்லது குடும்பம் பயிர் செய்வது அவர்களது உபயோகத்திற்கு போதுமானதாக இருக்கும். பயிர்செய்ய தேவையான இடு பொருட்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். விதைகளை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றனர். இரண்டாவது வகையான தோட்டங்கள் என்பது, பொது நிலங்களில் மக்கள் அமைப்புகள் (பெண்கள் குழு, வட்டாரக் குழுக்கள்) பயிரிட்டன. பொது நிலங்கள் உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பின் இக்குழுக்கள், என்ன பயிரிடுவது? எப்பொழுது பயிரிடுவது? என்பதை தீர்மானித்தனர். பயிர்செய்ய தேவையான இடுபொருட்களை இவர்களே தயாரித்துக் கொண்டனர். மூன்றாவது வகையான தோட்டங்கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் போன்ற நிறுவனங்களினால் பயிர் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பவர்கள் வேலை நேரம் என்ன பயிரிடுவது? போன்ற பொறுப்புகளை தீர்மானித்துக் கொண்டனர். இதிலிருந்து உற்பத்தியாகும் விளைபொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. மற்ற வகைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அவர்களது வீட்டு உபயோகத்திற்காக எடுத்து சென்றனர்.
நகரத்தில் வசிப்பவர்களுக்கு கூட வேளாண்மை பற்றிய பொது அறிவு இருந்தது. ஏனெனில் கியூபா புரட்சியின் போது வேளாண் தொழில் மற்றும் உணவு உற்பத்தியுடன், மக்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கியூபா தேசிய தலைவரான ஜோஸ் மார்ட்டியின் தத்துவப்படி, தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனவே கியூபா இளைஞர்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்களது பாடதிட்டத்தின் ஒரு அம்சமாக, கிராமப்புரங்களுக்குச் சென்று, விவசாயத்தை ஒரு பாடமாக பயின்றனர். மேலும் அநேக கியூப மக்கள் ஆண்டிற்கு இரண்டு வாரம் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாய வேலையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு இருமுறை தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டன.காகித தட்டுப்பாடு நிலவுவதால், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் அது பலரை சென்றடைய உதவிகரமாக இருந்தது.
இவ்வாறு மிகப்பெரிய அளவில் கியூபாவில் இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும். கியூப அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தினால் மனித வளமும் அதிகரித்து, அறிவியல் பூர்வமான விவசாயம் செய்யும் அறிவும் அதிகரித்ததால் மாற்று விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கீழ் சமூகத்தில் திறம்பட ஒருங்கிணைந்து செயல்பட்டதால், குறைவான வளங்களை கொண்டு அதிக அளவு உணவு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் வெளியிலிருந்து உணவு இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.
இயற்கை விவசாயம் செய்யும் பொழுது, விவசாயி அல்லது தோட்டத்தை நிர்வகிப்பவர், நிலத்துடனான உறவு நெருக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மண்ணின் ஒவ்வொரு தரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. எங்கு நில அமைப்பு மோசமாக உள்ளது, எப்பக்கத்திலிருந்து நச்சு பூச்சிகள் நுழையும், எங்கு எறும்பு புற்றுகள் உள்ளன என்பன போன்றவற்றை தெரிந்து இருக்க வேண்டும். சோசலிச பிளாக்குடன் கொண்டிருந்த வணிக உறவு முறிவுற்ற நிலையில், கியுப மக்கள் அதிக தொல்லைகளுக்கும், உணவு பற்றாக்குறைக்கும் ஆளாயினர். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு மாறியதன் மூலம் அவர்கள் இந்த சவாலை சமாளித்தனர். இத்தகைய மாற்றுவிவசாயம் அவர்களது முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகின் மற்ற பகுதிகளில் இயற்கை விவசாயம் கொள்கை அளவில் உள்ளது. இந்த இருபது ஆண்களில் இயற்கை விவசாயத்தில் கியூபா மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை பிரமிக்கும் படி உள்ளது. விவசாய பண்ணைகளில் விவசாயிகளின் குழந்தைகள் நச்சுத்தன்மையான பூச்சிகொல்லிகளுக்கும், வேதியல் உரங்களுக்கும் இடையில் உலாவிய நிலைமாறி இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
பிடல்காஸ்ட்ரோயின் உழைப்பு (வியர்வை) மற்றும் அறிவின்மூலம் அற்புதம் நிகழ்த்துவோம் என்ற சூளுரைக்கேற்ப அவர்கள் உழைப்பது வரவேற்கத்தக்கது. அவர்களது செயல்பாடுகள் அவர்களது நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கு மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையால் வாடும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
மானிட சரித்திரத்தில், நவீன நச்சு, பசுமை புரட்சி வேளாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் கீழ்மக்களின் வெற்றி, தோல்விகளிலிருந்து படிப்பினை மேற்கொண்டு, நாமும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்புவோம். இதன்மூலம் புதிய பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம்.
**********
2006ல் அனைவரும் சுற்றுச் சூழல் என்று ஏ.சி. அறையில் அமர்ந்து அதனை விவாதித்து புராஜக்ட்களாக மாற்றி கோடிகளாக உருமாற்றிக் கொண்டிருக்க, 20 வருடங்களுக்கு முன்பே அதனைப் பற்றியும் அதனை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் அவர்கள் மொழியில் பேசிக் கொண்டிருந்தவர்.
மனித உரிமை என்பதை இன்று மேல்தட்டு மனிதர்களுடையதாகவும், அதனை கருத்தரங்குகளில் பேசுவதற்கும், ரிப்போர்ட் அனுப்பி டாலரைப் பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்திய தலைவராக இருந்தாலும் மாட்டுவண்டி கட்டி குக்கிராம மக்களிடமும் சென்று மனித உரிமை பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர்.
உலகமயமாக்கல் இன்று அனைவரின் வாழ்வாதாரத்தையும் நெறித்துக் கொண்டிருக்க இருபது ஆண்டுகளுக்கு முன்பே அதுபற்றி மக்களை வெளியீடுகள் மூலம் வலியுறுத்தியவர். யாருக்கும் உபயோகமில்லாத கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு விட்டாலே அதன்பின்பு தங்களுக்குள் நாயே பேயே என்று அடித்துக் கொண்டும் தங்களைத் தாங்களே திட்டிக் கொண்டும் அறிவுக் கொழுப்பெடுத்து மமதையில் பேசித் திரியும் தற்போதைய எழுத்தாளர்கள் மத்தியில், சுற்றுச் சூழல், உலகமயமாக்கல் வேளாண்மை என்று நூற்றுக்கணக்கான மக்களுக்கான புத்தகங்களை மொழி பெயர்த்தவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர்.
சி.நெடுஞ்செழியன் நமது விழிப்புணர்வு இதழின் முதல் வாசகனும், சரியாத விமர்சகரும், நம்மை விட இதழின் வளர்ச்சியில் தீவிர ஆர்வமும் உடையவர். மாணவர்களையும் விழிப்புணர்வு இதழின் ஒவ்வொரு பக்கத்தையும் செழுமைப் படுத்தியவர். ஆனால் அவர் இன்று நம்மிடம் இல்லை. அவரது நினைவுகளும், அவர் உருவாக்கித் தந்த தொடர்புகளும் மட்டுமே இன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
அவரது மரணத்தின் வெறுமை மாணவர்கள் அனைவருக்கும் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment