Sunday, 19 December 2010

விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்

விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்




உணவு உற்பத்தி செய்யும் பயிர்த் தொழில் உழவு அதன் சிறப்பும் செய்முறைவும்!!

எங்கு சுற்றிப் பார்த்தாலும் உலகம் ஏரின் பின்னால் நின்றாக வேண்டும். அதனால் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவே தழையானது. இப்போது குறளை படியுங்கள்.

’’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்


உழந்தும் உழவே தலை’’ – 1031.

உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து ப்ழைக்கும் அடிமைகள் ஆவார்கள். இப்போது குறளை படியுங்கள்.

’’உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்


தொழுது உண்டு பின்செல் பவர் ‘’ – 1033

உழவன் என்பவன் யார் ?? தன் கையால் உழைத்து உண்பவன், இவன் பிச்சை எடுத்து உண்ண மாட்டான், பிச்சை எடுப்பார்க்கு ஒளித்து வைக்காது கொடுப்பான். இப்போது குறளை படியுங்கள்.

’’இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார் காவாது


கைசெய்தூண் மாலையவர்’’ – 1035

ஆசைபடுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல் வேண்டும். உடலுக்கு உணவும் வேண்டும். உழவனது கை முடங்கிப் போகுமானால் துறவின் உணவுக்கும் வழியில்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வு இல்லை, துறவறத்தானுக்கும் வாழ்வு இல்லை. இப்போது குறளை படியுங்கள்.

’’உழவினார் கை மடங்கின் இல்லை விழைவதூஉம்


விட்டேம் என்பார்க்கும் நிலை’’ – 1036

உழுது உண்டு வாழ்வது எவ்வளவு சிறப்புடையதாயினும் தண்ணிர் இல்லாமல் அது சாத்தியம் இல்லை. உணவை உற்பத்தி செய்யவும் உற்பத்தியானதை உணவாக்கவும் தண்ணிர் தேவை. அந்தத் தண்ணீரே ஊணவும் ஆகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூஉம் மழை’’ – 12

உணவை உண்டாக்கித் தானே உணவும் ஆகின்ற தண்ணீரானது நமக்கு மழை வழியாகக் கிடைக்கிறது. மழை நீர் மண்ணுக்குள் அமிழ்வதால் பூமியில் உயிர் வாழ்க்கை நீடிக்கிறது. அதனால் நீர் அமிழ்தம் (சாவா மருந்து) என்று உணரப்படுகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’வான் நின்று உலகம் வழங்கி வருவதால் தான் அமிழ்தம்


என்று உணாற் பாற்று’’ – 11

வானம் மழை பெய்யாது பொய்த்து போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இந்த உலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். குறளை படியுங்கள்.

’’விண் நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து


உன் நின்று உடற்றும் பசி’’ – 13

மழைத்துளி விழாமல் பச்சைப் புல்லைக்கூடப் பார்க்க முடியாது. ஆடு, மாடு, மேயக்கூடிய புல்லைக்கூட பார்க்க முடியாது என்றால் மரம், செடி, கொடி எல்லாம் வளர்வது எப்படி? குறளை படியுங்கள்.

’’விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே


பசும்புல் தலை காண் பரிது’’ – 16



மழை பெய்யாது போனால் உழவர்கள் ஏர் பூட்ட மாட்டார்கள். உழவு நடக்காது. எனவே உணவும் கிடைக்காது. (இன்றைய இந்தியாவில் இதுவே நிலை) குறளை படியுங்கள்.

’’ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்


வாரி வளம் குன்றிக் கால்’’ - 14

நீரும் நிலமும் கிடைத்து கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர் பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்தொழில் எண்பது அது மட்டுமே இல்லை. ஏர் உழுத பிறகு எரு இட வேண்டும். விதை முளைத்து வரும் போது களையை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு மழை பெய்ய வேண்டும். அல்லது நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைப் பாதுகாக்கவும் வேண்டும். குறளை படியுங்கள்.

’ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்


நீரினும் நன்று அதன் காப்பு’ - 1038

உழவது முதல் அறுவடை செய்து வீடு சேர்ப்பது முடிய பல பணிகளையும் இடமும் காலமும் அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்ய முடியுமானால் மாபெரும் வெற்றி நமக்குக் கை கூடும். குறளை படியுங்கள்.

’’ஞாலம் கருதினும் கைகூடும் காலம்


கருதி இடத்தால் செயின்’’- 484

பருவகாலம் அடிக்கடி மாறுபடுகிறது. மழைகாலம் குறுகியும், கோடைகாலம் நீண்டு கொண்டும் வருகிறது. பருவ மழை பொய்த்துப் போகலாம்., எந்த நேரத்திலும் புயலும், வெள்ளமும் வரலாம். பருவகாலத்திற்க்கு இசைவாக நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமது செல்வம் சிதைந்து போகாமல் காத்துக் கொள்வதற்கான் வழி இதுவேயாகும்.

குறளை படியுங்கள்.

’’பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்


தீராமை ஆர்க்கும் கயறு’’ – 482

கருவியும், காலமும் அறிந்து செயற்பட்டால் செய்ய முடியாதது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தே செய்து முடிக்க உதவுகிறது. குறளை படியுங்கள்.

’’அருவினை என்ப உளவோ கருவியால்


காலம் அறிந்து செயின்’’ – 483

கருவிகளிலெல்லாம் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளில் இருந்து காத்து நிற்க்கும் கோட்டை மதில் போன்றது. குறளை படியுங்கள்.

’’அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்


உன்னழிக்கல் ஆகா அரண்’’ – 421

செய்யக்கூடாததைச் செய்தாலும் கோடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கோடு வரும். (பச்சைப் பரட்சி, வெள்ளைப் புரட்சி, நீலப் புரட்சி கட்டங்களில் இப்படிதான் கேடு சூழ்ந்தது) குறளை படியுங்கள்.

‘’செய்தக்க அல்ல செய்க் கெடும் செய்தக்க


செய்யாமை யானும் கெடும்’’ – 466

நிலம் உடையவன் வேறாகவும் உழைப்பவன் வேறாகவும் இருக்க முடியாது. நிலம் என்னும் நல்லான் உழவனுக்கு வாழ்க்கைத் துணைவி. உடையவன் மகனை படிக்க வைக்க என்று பட்டணம் போகக் கூடாது. அப்படிச் சென்றால் நிலம் ஊடல் புரியும், நிலத்தால் கிடைக்கும் பயன் கிட்டாது போகும். மனைவி ஊடி விலகி இருந்தால் அதை இதை செய்து சரி செய்து விடலாம். விளைநிலம் ஊடினால் எதுவும் செய்ய முடியாது. குறளை படியுங்கள்.

’’செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து


இல்லாளின் ஊடி விடும்’’ – 1039

வாழ்வதற்கு ஆதரமான் தண்ணீரை வானம் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடி உள்ளார்கள். வானமே பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர் நோக்குகிறார்கள். குறளை படியுங்கள்

’’வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்


கோல் நோக்கி வாழும் குடி’’ – 542

தக்க நேரத்தில் களையை நீக்க வேண்டும் இல்லாது போனால் பயிர் வளர்ச்சி குன்றிப் போகும். அதைப் போல கொலைக்கு அஞ்சாத கொடியவர்களை வேந்தன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் குடிமக்கள் வாழ்க்கை நசித்துப் போகும். குறளை படியுங்கள்

’’கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்


களை கட்டத னோடு நேர்’’ – 550

களைகளில் எல்லாம் கொடிய களை முள் மரங்கள். அவற்றை சிறியதாயிருக்கும் போதே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது வளரவிட்டால் பின்பு அதை வெட்டுவேரின் கையை வருத்தும். குறளை படியுங்கள்

’’இளைதாக முள்மரம் கொல்க களையுனர்


கை கொல்லும் காழ்த்த இடத்து’’ – 879

நுலறிவும் தொழில் நுட்பமும் அறிந்திருந்தாலும் உலகத்து இயற்கை அறிந்து செயல் பட வேண்டியது அரசனின் கடமை. அரசு அப்படிச் செய்ய மறந்த போது மன்னனுக்கு உலகத்து இயற்கையை அறிவுறுத்த வேண்டியது அமைச்சரின் கடமை. குறளை படியுங்கள்

’’செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து


இயற்கை அறிந்து செயல்’’ – 637

அரசன் முறை தவறி நடந்து கொண்டான் ’’ஆ’’ பயன் குன்றும். ’’ஆ’’ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்க்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இரைத்தல், நிலத்துக்கு எரு தருதல், பால், தயிர், நெய் தருவது நின்று விடும். நூலோர் ஆறு தொழிலையும் மறப்பார்கள். கல்வி கற்றல். பிறருக்கு கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்காக பெரு முயற்சி செய்தல், அத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்தல், அத்தகைய நல்முயற்சிகாகக் கொடுத்தல், கொடுப்பதை வசூலித்தல் ஆகிய ஆறு தொழிலும் நின்று போகும்.. (ஓதல், ஓவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்று குறிப்பது தழிழ் மரபு.) குறளை படியுங்கள்.

’’ஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்


காவலன் காவான் எனின்’’ – 560

கல்லாரை கொண்டு நடைபெறும் கடுங்கோலாட்சி ஒன்றே பூமிக்குப் பாரமக அமையும். மற்றவர்கள் முன்பே பிணியால் மாய்ந்து போயிருப்பார்கள். குறளை படியுங்கள்

’’கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது


இல்லை நிலைக்குப் பொறை’’ – 570

0 கருத்துரைகள்: