Friday, 31 December 2010

விவசாயத்தின் எதிர்காலம்

விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையின் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 199394ல் 25 சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி, 200506ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல் 200102 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 200405ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஏன் இந்த அவலநிலை என்று பார்த்தால் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் போன்ற பல காரணங்கள் நம்முன் தெரிகின்றன. விவசாய நிலங்களை அரசு எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்டங்கள் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஏர் இந்தியா மகாராஜா சின்னத்தைப் போன்று கையைக் கட்டிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து "உனக்கு என்ன தேவை? அதை செய்ய காத்திருக்கிறேன்' என்ற நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவும், நம்நாட்டு விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நடந்து கொள்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

விண்ணப்பம் பெறப்பட்ட 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 148 வரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகும். புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவுகள், சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பத்தாண்டுகளுக்கு வரிச்சலுகை பெறலாம்.

சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள் பறைசாற்றப் பட்டதிலிருந்து ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்பளிப்பு அளிக்கப்படும் என்று “கொள்கையளவில்'' ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பதாகவம் கூறப்படுவதானதுசட்டம் இயற்றப்படும் சமயத்தில் அரசு தெரிவித்த கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் பல ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தியதை நியாயப்படுத்துவதற்கு, மேலும் ஒரு காரணத்தைக் கூறி இருக்கிறது அரசு. "சந்தை சக்திகள் அவற்றின் போக்கிற்கு ஏற்ப இயங்கிட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பை நிர்ணயிப்பது, ஒரு விதமான "உரிம ராஜ்ஜியம்'' உருவாவதற்கே வழிகோலும். எனவே தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பு எதுவும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வர்த்தகத் துறை கருதுகிறது'' (தற்பொழுது இதில் மாற்றம் செய்ய அரசு எண்ணியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது) என்று அரசின் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தாக முடியும். "சந்தை சக்திகள்'' சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அளவினைத் தீர்மானிக்க அனுமதி அளித்தால், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு சேவை செய்யும்?

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு காலத்தில் உரிமைக் குரல் கொடுத்தோம். இன்று உழுபவனுடைய நிலமெல்லாம் அன்னிய உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் பொருளாதார சாம்ராஜ்யங்களாகத் திகழ்கின்றன.

ஒரிசாவில் போஸிகே என்ற அன்னிய உருக்குக் கம்பெனி மகாநதி தீரத்தில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்க அனுமதித்தனர். அந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தனியாகத் துறைமுகம் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்திருக்கின்றனர். வெட்கக்கேடான இந்த வேதனையை எங்கே போய்ச் சொல்ல?

சிறப்புப் பொருளாதார, மண்டலங்கள் துணை நகரங்களை உருவாக்குதல், சிறிய வியாபாரிகள் பாதிக்கக்கூடிய அளவில் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, நாடு முழுவதும் சங்கிலி தொடராக அந்த நிறுவனங்கள் வானத்தைத் தொடுகின்ற வகையில் வணிக வளாகங்களை அமைக்கவும் பன்னாட்டு நிறுவனத்தின் மேலாண்øயை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் இலட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.

நாட்டின் நலன் கருதி பொது மக்களின் தேவைக்காக முன்பு அவசர, அவசியமான நிலைகளில் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. இன்றைய மத்திய அரசு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ‘எந்த நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க' என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இம்மாதிரி மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டுப் பெரு முதலாளிகளைக் கூவிக்கூவி அழைக்கின்றன. பிளாட்பார்மில் விலையைக் கூவி விற்பதைப் போல ஆட்சியாளர்கள் வாவா என்று அழைத்து நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் படிப்படியாக பாழாக்கி வருகின்றனர். இந்திய மண் விவசாய மண். அந்த மண் வாசனையை உலக வங்கியிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைப்பது தாயை அடகு வைப்பதற்கு ஒப்பாகும். இந்தியாவின் முக்கியமான காரணிகளாக விவசாயமும் விவசாயிகளும் திகழ்கின்றனர். இன்றைக்கு அதற்கே சோதனை ஏற்பட்டதற்குக் காரணம் 1991லிருந்து மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் தான். இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும்.

விவசாயிகளே உங்கள் நிலங்களைத் திமிங்கலங்களுக்கு கொடுத்து விட்டு அவைகள் கொடுப்பதை வாங்கிக் கொள் என்கிறது மத்திய அரசு, மண்டலாபதிபதிகளே, நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கித் தருகிறோம். ஆணையிடுங்கள் என்கிறது மத்திய அரசு, இது தான். சிறப்புப் பொருளாதார மண்டலம்.

மேற்கு வங்கத்தைப் போன்று மும்பைக்கு வெகு அருகில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமையவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 35000 ஏக்கர்களுக்கு மேல் விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்குத் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போகம் விளையும் இவ்விளை நிலங்களுக்கு, இன்னும் ஓரிரு மாதங்களில் ஹேட்டாவேன் அணை கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வர கால்வாய் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அரசும், அம்பானியும் இந்த நிலங்கள் தரிசு நிலங்கள் தான் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கின்றனர். மும்பைக்கு அருகில் உள்ள இப்பகுதியில் எல்லா வசதிகளோடும் ஒரு சாட்டிலைட் நகரம் அமைப்பது தான் ரிலையன்ஸின் திட்டம்.

அணைகள் கட்டுவதற்காக, மும்பை-புனே விரைவு வழிப் போக்குவதிற்காக என்று தங்களின் நிலத்தை இழந்த மஹாராஷ்டிர விவசாயிகள், எஞ்சிய நிலங்களையும் ஏய்த்துப் பறிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

விவசாய நீர்நிலைகளுக்கும் பேராபத்து

முன்பு மாதக்கணக்கில் தொடர்மழை பெய்யுமாம். ஆனால் தற்போது நாள் கணக்கில் தான் மழை பெய்கிறது. முன்பைவிட மழை அளவு குறைந்துள்ளது. முன்பைவிட அதிகமாய் வெள்ளப் பாதிப்புகளும் ஏற்படுகிறது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் விளைச்சல் பாதித்துப் பொருளிழப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்பட்டு வீணாகிறது. ஏனெனில் நகர்ப்புறங்களிலுள்ள ஏரி, குளங்களில், 60 விழுக்காடு அளவு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் ஆகிவிட்டன. இன்று குடிக்க, குளிக்க எனத் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலை. பால் விலைக்கு ஈடாகத் தண்ணீர் விலை ஆகி விட்டது.

குடிநீருக்காகக் கால் கடுக்க நடக்கின்றகாத்துக் கிடக்கின்ற மற்றும் நீண்டதூரம் பயணம் செய்து நீர் எடுக்கின்ற நிலை ஒருபுறம். தேங்குவதற்கு வழியற்று எந்தப் பயனுமின்றி கடலோடு கலந்து தண்ணீர் காணாமல் போவது மறுபுறம். இதற்கு காரணம் நீர்நிலைகளைக் கைப்பற்றுபவர்கள்தான். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஆள் பலமும் அதிகார பலமும் எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்தவிடாமல் செய்து விடுகிறது. வீட்டுவசதி வாரியமும் குளங்களையும் நீர் நிலையங்களையும் அதிகாரப்பூர்வமான வீட்டுமனைகள் என்று அறிவித்து அதையும் பல இடங்களில் விற்பனை செய்தது தவறு மட்டுமல்லாமல் மாபெரும் குற்றமாகும்.

விவசாயிகளின் கல்லறைகளின் மீது எழுதப்படும் மாடமாளிகைகள் - மடியும் உழவர்கள்

இன்னொரு பக்கம் விவசாயிகள் கடன் தொல்லைகள். சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதத்தில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தற்கொலைகள் மூலம் வேளாண்மைத் தொழில் நெருக்கடியைக் குறித்த விழிப்புணர்வை, நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. வட்டி தள்ளுபடி மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகாது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தில், சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார சமச்சீரின்மை தொடரும் மோசமான சூழலில், நாட்டின் மொத்த ஜனத் தொøயில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இதைப் போக்காமல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, பணக் காரர்களின் பைகளை நிரப்பும் இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.
 
 
 
 

0 கருத்துரைகள்: