மழைக்கஞ்சிப் பாடல்களில் உழவர்நிலை
நீரின்றி அமையாது என்று தமிழ்மறை
கூறுகிறது. தெய்வப் புலவர் தன் நூல் கடவுளுக்கு அடுத்து நிலையை மழைக்குத் தந்து வான்
சிறப்பு என்று வைத்துள்ளார். மழையின்றிச் சிறுபுல்லும் முளைக்கலாகாது என்பதை,
’’விசும்பின் துளிவீமின் அல்லால்
மற்றாங்கே
புசும்புல் தலைகாண்ப தரிது’’
என்று கூறுகிறார். தமிழின் முதல்
காப்பியமான சிலம்பும் திங்களையடுத்து மழையைப் போற்றியே தொடங்குகிறது. மழை என்பது கொடைக்கு
உவமையாகப் புலவர்களால் கையாளப்பட்டுள்ளது. உலக மக்களின் துயர் நீக்கி வாழ வைப்பது மழையே.
அதனால் தான் புலவர்கள் கொடைக்கு உவமையாக்கினர் போலும்.
மழையைப் பற்றிய இலக்கியப் பதிவுகள்
சங்க காலம் தொட்டுக் காணப்படினும், அவை மழைப் பொழிவினால் நிலம் பெற்றுள்ள வளம் காட்டுவனவாகவே
உள்ளன. ஒரிரு பாடல்கள் மழையின்மையால் ஏற்படும் வறட்சியைக் கூறினும், மழையையே நம்பியிருக்கும்
உழவர் பெருமக்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைக் கட்டுவனவாய் இல்லை எனலாம். நாட்டுபுற
இலக்கியங்களில் அத்தகைய மக்களின் துன்ப நிலையைக் காண முடிகிறது. மழை வேண்டி, நாட்டுப்புற மக்களால் பாடப்படும்
(நாமக்கல் மாவட்டம்) மழைக்காஞ்சிப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு ஆராய்வதே இகட்டுரையின்
நோக்கமாகும்.
விளக்கம்
வானம் பார்த்த பூமியில் விதைகளை
வயல்களில் இறைத்துவிட்டு, அவை வளர்ந்து, பின் வாடுவதைப் பார்த்து வாடும் உழவர்கள் நாள்தோறும்
வானம் பார்க்கத் தொடங்குகின்றனர். மேகத் திரள்கள் தென்படாதா? மழைக்கான அறிகுறி வராதா?
என ஏங்குகின்றனர். இநிலையில் தங்கள் நிலையை வருண பகவானுக்குத் தெரிவ்க்க வேண்டும்.
என்பதற்காக ஊர் பிள்ளைகளிடம் மழைக்காஞ்சி எடுத்து சொல்கிறது.
ஊர் சிறுவர்கள் ஒன்று கூடி, பெரிய
பாத்திரம் சுமந்து வீடுவீடாக ச் சென்று சோறு சேகரிக்கின்றனர். அப்பாத்திரத்தில் விழும்
சோறு, சோளம், கம்பு,கேழ்வரகு,அரிசி ஆகிய தானியங்களில் செய்யப்பட்டதாக இருக்கும். குழம்பு
சேர்க்கமாட்டார்கள், நிற்றுத்தண்ணீர் சேர்த்து உப்பில்லாமல் கரைத்து கோவில் முன்பாக சிறுவர்கள் அனைவருக்கும் வரிசையாக அமர்ந்து இருகைகளையும் குவிந்துச்
சோற்றை வாங்கிக் குடிப்பார்கள். இக்கலவைச் சோற்றின் பெயரே மழைக்கஞ்சி என்பதாகும். இக்கஞ்சியை
வீடுவீடாகச் சேகரிக்கும்போதே பாடலைப் பாடுவார்கள். அது மழைக்கஞ்சிப்பாடல் என அழைக்கப்படுகிறது.
மழையின்மையால் உழவர்களின் குழந்தைகள்
சுவையான குழம்புடன் கூடிய உணவின்றி, நீற்றுத் தண்ணீருடன் கூடிய சோற்றை உப்பில்லாமல்
உண்ணும் அவல நிலையை வர்ணபகவானுக்கு உணர்த்தவே இம்மழைக்கஞ்சி எடுத்தல் நடைபெறுகிறது.
எனக்கருதலாம்.யா
சமுதாய நிலை
’’பெய்யுதம்மா பெய்யுது
பெரு மழையா பெய்யுது
கள்ளி முள்ளு காட்டுல
சடசடன்னு பெய்யுது
கல்யாண வாசல
கைகழுவ தண்ணியில்ல
பிள்ள பெத்த வாசல
பிய் கழுவ தண்ணியில்லை’’
விதைத்து களைப்பறித்து மழைக்காகக்
காத்திருக்கும் நாட்களில் மழை, வேறு பகுதிகளில் பெய்துவிடுவதுண்டு. நெடு நாள் காத்திருந்து
வந்த மழையும் தமக்கு கிடைக்காமல் போன ஏமாற்றத்தைப் பாடல் வரிகள் காட்டுகின்றன. பெருமழை
பெய்தாலும் அது தன் நிலத்தில் பெய்யாமல் தேவையில்லாத கள்ளிமுள் காட்டில் பெய்வதாக உழவர்கள்
பாடுகிறார்கள்.
கடுமையான வறட்சியால் உழவர்கள்
தங்கள் வீடுகளில் நடக்கும் சுபக்காரியங்களைக் கூட நல்ல முறையில் செய்ய முடியாத நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர்.
’’கல்யாண வாசல
கை கழுவத் தண்ணியில்ல’’
என்ற வரிகளில் திருமண சடங்குகளில்
முக்கியத்துவம் பெறும் விருந்தோம்பல் தடைபடுகிறது. உறவினர்கள் மிகுதியாகக் கலந்து கொண்டு
வாழ்த்த வேண்டிய சடங்கில் மழையின்மையால் உறவினர்களை
அழைப்பதையே தவிர்க்க வேண்டியுள்ளது. இதனால் உறவுகளுக்குள் இருகிற நெருக்கம் குறைய வாய்ப்புள்ளது.
மக்கட்பேறே மிகவும் முக்கியமானதாகக்
கருதபடுகிறது. குழந்தை பிறந்த உழவன் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், வருணனின்
கருணை இல்லாததால் மகிழ்ச்சி நிரம்பி இருக்க வேண்டிய இடத்தில் அவலமே நிறைந்துள்ளதைக்
கீழ்காணும் வரிகள் உணர்த்தும்.
’’பிள்ள பெத்த வாசல
பிய் கழுவ தண்ணியில்லை’’
இவ்வரிகள் அவர்கள் படும் துன்ப உணர்ச்சிகளைக் காட்டுவனவாகும்.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்பது
பொதுமறை கூறும் உண்மை. ஆனால் ஏர் உழவனின் வாழ்க்கையில் மழையில்லாவிட்டால் ஏமாற்றத்திற்கு
உள்ளாகிறான் என்பதை பின் வரும் பாடல் உணர்த்துகிறது.
‘’ ஏரோட்டும் தம்பியெல்லாம்
ஏமாந்து நிக்கிறாங்க ஐயா வருணதேவா
ஏத்தம் இறைக்கும் தம்பியெல்லாம்
ஏமாந்து நிக்கிறாங்க ஐயா வருணதேவா’
மேழி புடிக்கும் தம்பியெல்லாம்
மொகஞ் சோந்து நிக்கிறாங்க ஐயா
வருணதேவா’’
உழுதல், விதைத்தல், நீர் பாச்சுதல்,
அறுவடை செய்தல் என வாழ்க்கையை வயல்களில் கழிக்கும் உழவர்கள், வானம் பொய்த்து விடும்
போது வாழ்க்கையும் கேள்விக்குறியாவதை மேற்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.
நாட்டுபுறப் பாடல்கள் அம்மக்களின்
வாழ்வைச் சித்தரிக்ககூடியவை. அவ்வகையில், நாட்டுபுற மக்களின் மழைக்கஞ்சிப் பாடல்கள்
மூலம் அவர்களது வாழ்க்கை நிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment