உழவரை போற்றுதல் - பொதிகைகுடும்பன்
சான்றோரை அடுத்து நம் இலக்கியங்கள் உழவர்களையும் வேளாண்மையையும்
போற்றும் சமூக மதிப்பை உருவாக்குகின்றன. உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்று புறநானூறு
உழவரை சிறப்பிக்கின்றது (புறம் 18). வெள்ளைக்குடி நாயனார் என்ற புலவர் சோழன் கிள்ளிவளவனிடம்
‘உன் படை வீரரது போர்கள வெற்றி உன் நாட்டு வேளாண் வளத்தால் வாய்த்தது என்பதை மறவாதே.
உழவரின் பாரம் ஓம்பி அவர்களைப் பாதுகாப்பதை முதற் கடமையாகக் கொண்டால் பகைவரும் உன்
அடி பணிந்து போற்றுவர்’ என்கின்றார் (புறம் 35 ) . பாரியினது பறம்புமலையில் உணவு வளம்
செழித்து விளங்குவதால் முற்றுகைப் போரில் அவனை விரைந்து வெல்ல இயலாது’ என்ற புறநானூற்றுக்
கருத்தையும் இதனோடு ஒப்புநோக்குதல் வேண்டும் (புறம் 109). ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்
என்ற அரசன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் பாதுகாத்து வந்தான் (சிறுபாண்
233). சங்க இலக்கியங்கள் உழவரைச் சுட்டும்போது மலைகண்டாற் போன்ற நிலைபொருந்திய உயரமுள்ள
பெரிய பல நெற்கூடுகளை உடைய உழவனே’ என நெற்களஞ்சியத்தோடு அவனை இனைத்துப் பேசுகின்றன
(நற் 60).
உழவர் தங்கள் வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருள்களை வறியோர்க்கு
வழங்கும் பண்பை இயல்பாகப் பெற்றிருந்தனர். இதனாலேயே வேளாண்மை என்ற சொல் ஈகை, கொடை,
உதவி என்றும் பொருள் பெற்றது. வேளாண் தலைவன் பண்ணன் என்பவன் இரவலர்க்கு வழங்கும் ஈகைப்
பண்பை அறிந்த சோழன் கிள்ளிவளவன் தான் உயிர் வாழும் நாளையும் பண்ணன் பெற்று வாழ்வானாக
என்று வாழ்த்தினான். வேளாண்மைச் செல்வத்தால் பிறர் வறுமையை போக்கும் பண்ணனைப் ’பசிப்பிணி
மருத்துவன்’ என்ற பொருளாழமிகுந்த தொடரால் சோழ மன்னன் சிறப்பித்தான் (புறம் 173). இத்தொடர்
உழவர் அனைவர்க்கும் பொருந்துவதாகும். உழவரே போர்க்காலங்களில் படைக்கருவி ஏந்திப் போர்க்க்ளம்
செல்வர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது (1587). தமிழகத்தில் போர்புரிய சத்திரியர்
என்று தனி இனம் இருந்ததில்லை. இரப்போர் சுற்றமும் மன்னனது ஆட்சிச் சிறப்பும் உணாவை
விளைவிப்போர் கையில் தங்கியுள்ளது என்கின்றார் இளங்கோவடிகள் (10;149-150). சிலப்பதிகாரம்
நாடுகாண் காதையில் வேளாண்மை வளத்தையும் உழவரது உயர்ந்த வாழ்வையும் இசையுடன் இணைந்த
உழவுத்தொழிலையும் சித்தரிக்கின்றது (10:135-139) திருவள்ளுவர் உழவிற்கென்று தனி அதிகாரமே
வகுத்துள்ளார். அரசனது வெண்கொற்றக் குடை உழவரது குடையின் கீழ் அடங்கும். உழவர் உழவுத்
தொழிலைக் கைவிடுவார்களானால் பற்றை விட்டோம். துறவியர்க்கும், வாழ்வில்லை, உழவே தலை
என உழவின் மேன்மையை தொகுத்துரைக்கின்றார். உழவர் குறித்த இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாகக்
கம்பர் ‘ மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்
கை’ என்கின்றார். ’உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு’
என்பது ஒளவையின் வாக்கு.
அன்று இயற்கை உரத்தால் தமிழக வேளாண் நிலம் வளஞ்செறிந்து விளங்கியது.
(நற்.345). ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவு விளைச்சல்
மிகுந்திருப்பதைப் புறநானூறு பதிவு செய்துள்ளது (புறம்.40) கெளரவர் போர் முடியும் வரையில்
உதியன் சேரன் இருபடை வீரர்க்கும் பெருஞ்சோறு குறையாது வழங்கியுள்ளான் (புறம்.2) காவிரி
பாயும் சோழ வள நாட்டில் வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் நெல் விளையும் என்று பொருநராற்றுப்படை
கூறுகின்றது (246-248). பாண்டியனது மதுரை மாநகரில் நீர் வளச் சிறப்பால் ‘உழவுத் தொழில்
ஓங்கி வளர்ந்தது; விதைத்த ஒரு விதையிலிருந்து ஆயிரக்கணக்கான தானியங்கள் விளைந்தன. விளைநிலங்களும்,
மரங்களும் ஏராளமான பயனைத் தந்து சிறந்தன; மக்கள் பசியும், நோயில்லாமல் அழகுடன் மகிழ்ந்து
வாழ்த்தினர்’ என்று மதுரைக்காஞ்சி குறிப்பிகின்றது
(10-13) இயற்கை உரம் ஊடுபயிர் (மலைபடு ; 121-123), சுழற்சி வேளாண்மை (குறு. 384), திணைசார்ந்த
பயிர் விளைச்சல் இவற்றால் தமிழகம் உணவு விளைச்சலில் முனைப்புடன் விளங்கியது. நெல் முதலான
நன்செய்ப் பயிர்கள் மட்டுமல்லாமல் கருங்கால் வரகு, இருங்கதிர் திணை, சிறுகொடிக்கொள்,
எள் எனப் புன்செய் வேளாண்மையிலும் தமிழர் அறிவுவளம் பெற்றிருந்தனர். இதனால், சங்கக்
காலத்தில் உணவு
விளைச்சலிலும் வாணிபத்திலும் தமிழகம் சிறந்து விளங்கியது.
நம்முடைய
இலக்கியங்களில் தான் உழவர் பற்றிய மதிப்பும், உழவு பற்றிய மரபுவழி அறிவும் பதிவாகி
உள்ளன. தமிழை ஒரு பாடமாகப் படிப்பதை ஒதுக்குவதால் இந்த மதிப்பையும், அறிவையும் உணராத
தலைமுறையினர் பெருகுவர். இதனால், நாம் பன்பாட்டு அடிமையாகும் நிலை உருவாகும். இன்று
பூச்சி மருந்து, உயிரித் தொழில் நுட்பம் எனும் மரபீனி மாற்றம் செய்த விதைகளால் நம்
உடல்நலமும்., சுற்றுச்சூழலும் விளைநிலங்களும் சீர்கெட்டு வருகின்றன. மூவாயிரம் ஆண்டுகள்
மாறாத வளத்துடன் விளங்கிய விளைநிலங்கள் மூன்றே ஆண்டுப் பசுமைப்புரட்சியில் கிழடுதட்டிப்
போய்விட்டன. அள்ளிக் கொடுத்த உழவர்கள் கடனாளியாகி விட்டனர்.வேளாண்மையை மதிக்காத குமுகாயம்
உருவாகின்றது. நெல் வயல்களை வேலியாகக் கொண்ட திருநெல்வேலி தன் பெயர் அடையாளத்தை வேகமாக
இழந்து வருகின்றது. விளைநிலங்கள் வீட்டுமனையாக மாறும் இந்த நிலைதான் அனைத்து மாவட்டங்களிலும்
உள்ளது.ஒவ்வொரு ஊரையும் சுற்றி வளமான விளைநிலங்கள் அன்று இருந்ததை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.(நற்.390)
நிலத்தின் வளம் பெருகுவதும், சுருங்குவதும் அந்த நிலத்தில் வாழும் மக்களின் எண்ணத்தைச்
சார்ந்தது, வாழ்பவர் இயல்பிற்கு ஏற்ப நிலம் இருக்கும், நிலத்திற்கு என்று தனியான இயல்பில்லை
என்று புறநானூறு கூறுகின்றது (புறம்.185) விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டவோ மண் நிரப்பவோ
கூடாது என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
மற்ற ஆட்சியர்களும் இதனைப் பின்பற்றினால் நன்மை விளையும்.
நெல்லையும், மலரையும் தூவி வழிபடுவது நம் பண்பாடு.
மங்கல நிகழ்வுகளில் நாழி நிறைய நெல்லை குவியலாக வைத்து வழிபடுவர். இதனை ‘நிறைநாழி நெல்’
என்பர். ஆனால் இன்று ஒரு துணிக் கடையில் பட்டாடை விளம்பரத்தில் மணமகள் நிறைநாழி நெல்லைக்
காலால் எட்டி உதைத்து வீட்டுக்குள் வருவதாகத் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். இதைத்
தான் பண்பாட்டுச் சீரழிவு என்கிறோம். தெய்வமாகப் போற்றிய நிறைநாழி நெல்லை எட்டி உதைத்துக் கீழ்மைப்படுத்தும்
சமுதாயம் விளைநிலங்கள் அழிந்து சுருங்குவதை பற்றி கவலை படவா செய்யும்?.
வழிப்பாட்டிலும்,
மங்கல நிகழ்வுகளிலும் பல வகைத் தானியங்களை மண்கலத்தில் வளர்த்து அந்த முளைப் பாலிகையை
நீரில் விட்டு நாடு வளம் பெற வேண்டுவது நமது பண்பு. இன்றும் இவ்வழக்கம் திருமண நிகழ்வுகளிலும்
கிராம மக்கள் வழிப்பாட்டிலும் உள்ளது. ஆனால் ’’யாகம்’’ என்ற பெயரில் ஒன்பான் தானியங்களை
நெருப்பில் போடும் பழக்கம் பெருகி வருகின்றது. இது நமது உயர்வான வேளாண் மதிப்பிற்கு
எதிரானது. நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாக
கருதிய தமிழர் அறிவுநுட்பத்தை தமிழ் கல்வியால் மட்டுமே அறிய முடியும்.
மக்கள்
தொகை மிகுந்த நாடு வேளாண்மைக்கு முதன்மை கொடுத்துச் சிந்திக்கவில்லை என்றால் விளைவு
என்னவாகும்?.
கடந்த
கால வேளாண் வரலாற்றை உணர்ந்தால் தான் அதை நிகழ்காலப் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்து
அழிவைத் தடுத்துப் புதிய ஆக்கங்களைப் பெருக்கிச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
ஊகவணிகம், உலக வணிகம், வணிக ஒப்பந்தம், தேவையற்ற வேளாண் இறக்குமதி, கட்டுப்படி ஆகாத
வேளாண் வேளாண் செலவு இவற்றால் உழவர்கள் மூச்சுத் திணறுவதைப் பற்றிக் கற்றோரில் எத்தனை
விழுக்காட்டினர் கவலைப் படுகின்றனர்?.
எல்லாவற்றையும்
பணமாக மட்டுமே பார்க்கும் கல்வியால் மனித மாண்பு
பழுது பட்டுப் போகும். மண்ணை மறந்த கல்வியால் நிலவளத்தை மட்டுமன்று நில எல்லை பரப்பையும்
இழந்தோம். கடவுளையும், சாதியையும் காப்பாற்றும் கவலையில் சிறிதளவுக் கூட கற்றவரிடம்
வேளாண் வீழ்ச்சி பற்றிய கவலை இல்லை. தமிழ் இலக்கிய கல்வி மண் மீதும், மாந்தன் மீதும்
பற்று கொள்ளும் பண்பை வளர்க்கிறது. பிறரைச் சாராமல் நம்முடைய இயற்கை வளங்களைப் பெருக்கி
நமக்கு நாமே வாழும் வகையை வகுத்துக் கொள்ளும் அடிப்படை அறிவு நம்முடைய சங்க இலக்கியங்களில்
தான் உள்ளது.
நிலமும் நீரும் மணலும்
உணவைத்தரும்
வேளாண்மைக்கு முதன்மையானவை நிலமும் நீருமாகும். எனவே தான் புறநானூறு ’உணவெனப்படுவது
நிலத்தொடு நீரே’ என்கின்றது (18) ’நீரின்று அமையாது உலகம்’ என நற்றிணையும் (1) திருக்குறளும்
குறிப்பிடுகின்றன. குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியனிடம், ‘’ வானாவாரி நிலம் மிகப்
பரந்த அளவில் உடையதாக இருந்தாலும் அது ஓர் அரசனுக்குப் பெருமை தராது. ஆதலால், நிலம் குழிவாக உள்ள பகுதியில் நீண்ட
நெடிய கரை அமைத்து நீரைத் தேக்க வேண்டும். இவ்வாறு நீரைத் தேக்கியவரே இந்த உலகத்தில்
தங்கள் புகழைத் தளைத்தவராவர்’’ (புறம் 18)
என்று குளம் தொட்டு வளம் பெருக்குவதே மன்னன் கடமை என்று பட்டினப்பாலையும் வலியுறுத்துகின்றது.
(284) ’மழை பிணித்து’ ஆண்ட மன்னன் என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது.
தமிழில்
நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின்
போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர்.
இரண்டு பக்க பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம்.
118). கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’
(தொல். பொருள் 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம். அரசன் பெயரில் குளம்
இருப்பதைக் ‘’கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்’’ (நற்.340) என்று நற்றிணைத்
தெரிவிக்கின்றது. குளங்களுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம் 252) ’’நீர்
மோதும் மதகுகளை உடைய உறையூர்’’ (அகம் 237) என நீர் வளத்தோடு இணைந்து ஊரைச் சிறப்பிக்கும்
முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நீர் வளத்திற்கு அடிப்படையான மழையின் பயனைத்
திருவள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் நுட்பமாகத் தொகுத்துரைக்கின்றார்.
நீர்
குறித்த நம் முன்னோரது துடிப்பான செயல் பாடும், சிந்தனையும் இன்று அறுந்து போய்விட்டன.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளத்துடன் விளங்கிய ஆற்றின் படுகைகளும் குளங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், தாள் ஆலைகள், ஆகியவற்றின் கழிவுகளால் பவானி, நொய்யல்,
அமாராவதி, பாலாறு, போன்ற ஆறுகள் மாசடைந்து விட்டன.. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு
என்னும் ஏமாற்றுச் சொற்களால் மக்களின் வாழ்வடிப்படைகளான நிலவளமும், நீர் வளமும் , அழிக்கப்பட்டு
வருகின்றன. வெளி மாநில , வெளிநாட்டுக் குப்பைகள் ந்ம் நிலத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
மண்ணைக் காக்கும் மன வலிமை நம்மிடம் மழுங்கி விட்டது.
நிலத்தின் மடியில் நீரைத் தேக்கி வைப்பது மணல் மன்னர்களை
வாழ்த்தும்போது ‘கடற்கரையில் பெருங்காற்றுத் திரட்டிக் குவித்திருக்கும் மணலினும் நெடுநாள்
புகழுடன் நீ வாழ்வாயாக (புறம் 55) என மணலை வாழ்த்துவதற்குறிய மங்கலப் பொருள்களுள் வைத்து
மதித்தனர், ‘’தொட்டனைத் தூறும் மணற்கேணி’’ (குறள் 396) ’’ஆற்றுப் பெருக்கற்று அடிச்சுடும் அந்நாளும் ஊற்றுப்
பெருக்கால் உலகூட்டும்’’ (நல்வழி 9) என மணலின் அருமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
மணலை அளவோடு எடுத்துப் பயன் படுத்தாமல் ம்டு அறுத்துப் பால் குடிக்கும் செயல் போல அதனைப்
பெருமளவில் இன்று கடத்துகின்றனர்.
உயிர்
உள்ள அஃறிணைப் பொருளோடும் உயிர் அற்ற அஃறிணைப் பொருளோடும் மனித உயிர் பிணைக்கப் பட்டுள்ளதை தமிழ் இலக்கியங்கள்
நுட்பமாக பதிவு செய்துள்ளன.உயர்திணை என்று மக்களைச் சூட்டிய தொல்காப்பியர் அஃறிணையைத்
தாழ்ந்த திணை என்று கூறாது கருப்பொருள் என்று பகுத்தார். மணிநீரும் மண்ணும் மலையும்
அணி நிழற்காடும் மாந்த வாழ்விற்கு அரண் என்கின்றார் வள்ளுவர் (குறள் 742).
மழையே
மழையே தூரப்போ (rain rain go away) என்று படிக்கும்
மாணவர் உள்ளத்தில் மண்ணையும், மணலையும், நீரையும் பற்றிய சிந்தனை எப்படித் தோன்றும்?
வாழ்வியல்
சிந்தனை பொருளியல் பண்பாடு என அனைத்திற்கும்
மேல் நாட்டு நடைமுறைகளை நாம் கடைபிடிப்பது தவறு.
இந்த
மண்ணிற்கு பொருத்தமான வாழ்வியல் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் தான் உள்ளன. நீரைச்
சேமிப்பதிலும் நீர்பாசன அமைப்புகளை உருவாக்குவதிலும்
அதிக கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தை இயற்கைச் சூழலே தமிழ் நாட்டிற்கு ஏற்படுத்தியிருந்தது.
எனவே தான் தமிழ் நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே 30000க்கும் ஏரிகள் உருவாக்கப்
பட்டிருந்தன. மழைநீரைச் சேமித்து வைப்பதற்கேற்ற நீர் நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாய
கடமை. என்று புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. குளம் அமைக்கப் படும் நிலத்துக்கு
ஏற்ப நீர்க்கொள்ளவும், நீர்பரப்பும் இருக்கும். குளத்தை எப்படி அமைக்க வேண்டும்? எங்கு
அமைக்க வேண்டும்? குளத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பதினெண்கணக்கு நூலான சிறுபஞ்சமூலம்
(பாடல் 64) தெரிவிக்கிறது.
கோடு
என்பது குளத்திலிருந்து வெள்ள நீர் வெளியேறும் கலிங்கு. குளம் நிரம்பி வழிவதைக் கோடிப்
பாய்ந்து விட்டதென்றே இன்னமும் கிராம மக்களில் கூறுகின்றனர்.
குளம்
வெட்டுதல், மரம் நடுதல், சாலை அமைத்தல், உழுவயல் ஆக்குதல், கிணறு தோண்டுதல் என்ற 5
பணிகளைச் செய்வதன் சுவர்க்கம் போனான் என்று சிறுபஞ்ச மூலப் பாடலுக்குப் பொருள் கூறுவார்கள்.
ஆனால் இவற்றை ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டதாகக் கருதிப் பாடலுக்கு பொருளை ஆராய்ந்தால்
பொருத்தமான உரை புலன் ஆகும்.
1.
குளம்
அமைத்தல்
2.
மிகைநீர்
வழிய கலிங்கு அமைத்தல்
3.
குளத்துக்கு
வரும் வரத்துக்கால் ; விவசாயத்திக்கு தண்ணீர் வழங்கும் மதகு.தூம்பு, கலிங்கிலிருந்து
வெள்ள நீர் வெளியேறும் பாதை ஆகிய வழிகளை செவ்வனே அமைத்தல்.
4.
பாசனம்
பெரும் பகுதியை உழுவயல் ஆக்குதல்
5.
தண்ணீர்
குறைவின் போது பயன் படுத்த ஊர் போது கிணறு அமைத்தல்
ஆகிய
ஐந்தையும் செய்பவன் சொர்கத்துக்கு போவான் என்பது ஏரி பாசன அமைப்புக் குறித்து நமக்கு
ஒரு வரைபடத்தைத் தருகிறது. ஏரி, குளங்களில் இருக்க வேண்டிய கட்டுமானங்கள் பற்றியும்,
சங்கப்பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. மடை என்பது ஆறு, ஏரி, கால்வாய்களில் தண்ணீர்
வெளியேறுவதற்காக அமைக்கப் படுகிறது. மடையில் ஒரு கதவு இருக்கும்,,. கதவைத் திறந்தால்
(மடை திறந்த வெள்ளம் போல) தண்ணீர் வெளியேறும். வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ
முடியாது.மதகு,மடை அமைப்பில் இருந்தாலும் இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம்.
வெளியேறும் தண்ணீரின் அளவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.(தற்காலத்தில் திருகு மதகு
அடைப்பான் பயன் படுத்தப் படுகிறது) குமிழி
என்பது குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து அதில்
துளையிட்டு அதன் வழியே தண்ணீர் புகுந்து வெளிவரும்
அமைப்பு. மரத்தாலான சக்கையால் குமிழியின் வாயை அடைப்பார்கள். தூம்பு நீண்ட குளாய் அமைப்பின் வழியாக நீர் சரிந்து
இறங்கி வெளியேறும் அமைப்பு , யானையின் கை உள்தூளையிருப்பதால்
தூம்புக்கை தும்பிக்கை ஆனது. மடை, மதகு, குமிழி போன்றவையெல்லாம் குளக்கரையிலிருந்து சற்று உள் வாங்கித் தொலைவிலேயே
இருக்கும். குளத்தின் ஆழமானப் பகுதியில் அமைந்துள்ளதால் குளத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் பயன் படுத்த முடியும். தண்ணீரில் நீந்திச் சென்று
முழ்கித் தான் மடையைத் திறக்க முடியும். எனவே நீர்க் குடும்பரையும், மடைக்குடும்பரையும்
தவிர வேறுயாரும் எதுவும் செய்ய இயலாது. (இப்போது கரையிலேயே கட்டுமானங்கள் அமைப்பதால்
யார் வேண்டுமானாலும் திறக்கலாம். மேலும் உயரத்தில் அமைக்கப் படுவதால் கீழே உள்ளத் தண்ணீர்
வீணாகத்தான் நிற்கும்)