Friday, 2 October 2009

பத்மஸ்ரீ வாங்கித் தந்த பாரம்பர்ய விவசாயம்

பத்மஸ்ரீ வாங்கித் தந்த பாரம்பர்ய விவசாயம்

முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த தொழுவுரம்தான் அந்த ரகசியம்.


சாதனை செய்ய வேண்டும் என்றால், மாடுகளை வளருங்கள்.
50 ஆண்டு காலமாக வயலிலேயே கிடந்ததற்கு கிடைத்திருக்கும் மரியாதை.

"வருக... வருக! பத்மஸ்ரீ விருது பெற்று சொந்த ஊருக்குத் திரும்பும் மண்ணின் மைந்தனே, வருக... வருக..!"


-ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் சிலவற்றில் எங்கு திரும்பினாலும், இப்படிப்பட்ட வரவேற்புப் பலகைகள் பளீரிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளின் 50 ஆண்டு கால வரலாற்றில், அரிதாக தற்போதும் விவசாயிக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் சும்மாவா?!

மசூலிப்பட்டினம் நகரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள கூடூர் என்ற குட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கோரி பர்த்தி நரசிம்ம ராஜூ யாதவ் என்கிற விவசாயிக்கு மார்ச் 31-ம் தேதியன்று பத்மஸ்ரீ விருது கொடுத்து மரியாதை செய்திருக்கிறது இந்திய அரசு. கிராமத்துக்குள் எங்கு திரும்பினாலும் 'பத்மஸ்ரீ விவசாயி' பற்றிய பேச்சுக்களே எதிரொலிக்கின்றன. 
'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக் கொண்டு அப்போதுதான் ஊர் திரும்பியிருந்த ராஜூவை நாம் சந்தித்தபோது, பயணக் களைப்பையெல்லாம் கொஞ்சம்கூட காட்டிக் கொள்ளாமல், உடனடியாக தன்னுடைய தோட்டத்துக்கு நம்மை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவருடைய ஜீப் சத்தம் கேட்டவுடன் வழி நெடுக இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே எட்டிப்பார்த்து, கை அசைத்து வாழ்த்து தெரிவிக்க, அத்தனை யையும் ஏற்றுக்கொண்டே வந்தார்.

கல்லூரியில் பி.ஏ மற்றும் சட்டப் படிப்புகளைப் படித்து முடித்தவருக்கு ராணுவத்தில் கமிஷன்டு ஆபீஸர் (Commissioned officer) எனும் உயர் பதவிக்கான வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனாலும், அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது விவசாயி என்கிற பதவி!

ராணுவ வேலையை விரட்டிய விவசாயம்!

"ராணுவ வேலை கிடைத்த விஷயத்தை என் தந்தையிடம் சொன்னதுமே... ‘என்னைப் பொறுத்தவரை விவசாயத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இரண்டாவது தொழில். மூன்றாவதுதான் அரசாங்க வேலை' என்று சொன்னவர், ‘விவசாயம்தான் நம் குடும்பத் தொழில். நீ ஏதாவது சாதனை செய்வதாக இருந்தால், விவசாயத்தில் செய்' என்று கறாராகச் சொல்லிவிட்டார். அவரின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் ராணுவ வேலை வாய்ப்பை உதறிவிட்டு, விவசாயத்தில் இறங்கினேன். அது 1963-ம் ஆண்டு. எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில் கால் பதித்தேன். வேலை செய்ய ஏராளமாக ஆட்கள் இருந்தார்கள். வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன. எனக்கு மட்டும் ஆரம்பத்தில் விவசாயத்தின் மீது அவ்வளவாக விருப்பம் வரவே இல்லை. காலப்போக்கில் என்னை அறியாமல் விவசாயத்தை நேசிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு, என்னுடைய வேகத்துக்கு குறுக்கே யாரும் நிற்க முடியாத அளவுக்கு விவசாயத்தில் ஊற ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு ஏக்கரில் 65 மூட்டை!

வழக்கமாக மற்றவர்கள் செய்வதைப் போல அல்லாமல், வேறு மாதிரி செய்து பார்ப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம். அந்த காலக்கட்டத்தில் ஊர் முழுக்க ரசாயன மருந்துகளையும், உரத்தையும் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் இயற்கை உரங்களை மட்டும் போட்டு பயிர் செய்ய முடிவெடுத்தேன். 'இதெல்லாம் வேண்டாத வேலை. இதில் லாபம் கிடைக்காது' என்று பக்கத்து வயல்காரர்கள் எச்சரிக்கையாகச் சொன்னார்கள். ஆனால், அவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு ஏக்கருக்கு 65 மூட்டை நெல் (75 கிலோ மூட்டை) விளைச்சலாகக் கிடைத்தது. 1996-ம் ஆண்டு ஒரு ஹெக்டரில் 92 மூட்டை நெல் அறுவடை செய்தேன். சூப்பர் ஃபைன் என்ற அந்த நெல் ரகம் அப்போது ஆந்திராவில் மிகவும் பிரபலமானதற்கு என்னுடைய வயலில் நான் அதிக விளைச்சல் எடுத்ததுதான் காரணம்.

இதற்குப் பிறகு ஊரில் உள்ளவர்கள் நான் சொல்வதற்கு காது கொடுக்கத் தொடங்கினார்கள். விவசாயம் பார்த்த நேரம் போக எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக மசூலிப்பட்டினத்தில் இருக்கும் 'பிருந்தாவன் டாக்கீஸ்' என்ற சினிமா தியேட்டரையும் கவனித்துக் கொண்டேன். விவசாயத்தில் நடக்கும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி வெளிவரும் செய்திகளை தியேட்டர் சுவரில் ஒட்டி வைத்தேன். நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் இருக்க வேண்டிய இடத்தில் மாமரம், தென்னை மரம் பற்றிய செய்திகள் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், 'அந்த தென்னை எந்த ரகம்... அந்த ஆடு எங்கு கிடைக்கும்?' என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். இதற்காகவே விவசாயச் செய்திகளை தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். பிறகு, அதேபோல நாமும் ஏன் சாதிக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன். எந்தப் பயிர் செய்தாலும் அதற்கு இயற்கை உரம் தவிர மற்றவற்றை கொடுக்கக் கூடாது என்று முடிவு எடுத்தேன்.

இப்படி முடிவு எடுத்து 50 ஆண்டு காலம் ஆகிறது. நான் எடுத்த அதிகப்படியான விளைச்சலை சிலர் சந்தேகப்பட்டது உண்டு. அடுத்தமுறை அறுவடையின்போது அவர் களை அழைத்து எடை போட்டுக் காண்பித்தேன். அதன்பிறகுதான் நம்பினார்கள்..." என்று சொன்னவரிடம்,

"உங்களின் விளைச்சல் ரகசியம்தான் என்ன?" என்று கேட்டோம்.

'ஹா... ஹா...' என்று வாய்விட்டுச் சிரித்தவர், 

விளைச்சலின் ரகசியம்!

"நம்முடைய முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த தொழுவுரம்தான் அந்த ரகசியம். ஆண்டுதோறும் ஏக்கருக்கு டிராக்டர் மூலம் 5 லோடு மாட்டுச் சாணத்தை எருவாகப் போடுவேன். ஒரு லோடு 3 டன் எடை இருக்கும். கோடைக் காலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை வயலில் கிடை போடுவேன். ஏறத்தாழ மூன்று மாத காலத்துக்கு இந்தக் கிடை வயலில் இருக்கும். இதன்மூலம் மாடுகளின் சாணம், சிறுநீர் போன்றவை வயலில் விழும். அதுதான் அடுத்து செய்யப் போகும் பயிர்களுக்கான உரம். மற்றபடி எந்த உரத்தையும் நான் போடுவதில்லை. ஒரு சிலர், 'இந்தக் காலத்துல மாடெல்லாம் எங்கே கிடைக்கிறது... அது இருந்தால்தானே சாணம் கிடைக்கும்' என்கிறார்கள். அவர்களுக் கெல்லாம், 'நீங்கள் சாதனை செய்ய வேண்டும் என்றால், மாடுகளை வளருங்கள். நான் செய்யும் முறைகளைப் பின்பற்றுங்கள்' என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும்.

இயற்கை உரத்தைப் போடுவதால் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் எதையும் பயன்படுத்துவ தில்லை. பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதே இல்லை. இதில் மாயமந்திரம் ஏதுமில்லை. முயற்சி செய்தால் எல்லோராலும் முடியும். சொல்லப்போனால், அந்தக் காலத்தில் எல்லோரும் செய்துகொண்டிருந்ததுதான்" என்று சர்வசாதாரணமாகச் சொன்னவர் தொடர்ந் தார்.

"வீரிய விதைகளை விட்டொழித்துவிட்டேன்!"

"ஆரம்பத்தில் சாதனைக்காக ஒட்டு விதைகள், வீரிய விதைகள் எல்லாம் பயன்படுத்தி வந்தேன். இப்போது வீரிய விதைகளைப் பயிரிடுவதில்லை. விளைச்சல் அதிகம் கிடைத்தாலும் அதன் சுவை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. நான் மட்டுமல்ல... என் தோட்டத்து வேலைக்காரர்களும் அதைச் சாப்பிடுவதில்லை. அவர்களும் வீரிய விதையில் விளைந்தவற்றின் சுவையை வெறுக் கிறார்கள். எனவே இப்போது ஒட்டுமொத்தமாக எல்லோருக்காகவும் ஒட்டு ரகங்களைத்தான் பயிர் செய்கிறேன். ஆனால், சாதனைக்கு ஒட்டு ரகம், வீரிய ரகம் என்று எந்த வித்தியாசமும் இல்லை. எதில் வேண்டுமானாலும், அதிக விளைச்சலைக் காணமுடியும். அதற்குத் தேவை யானதெல்லாம் இயற்கை உரங்கள்தான். 
உரம், பூச்சிமருந்து, வளர்ச்சி ஊக்கிகள் என்று பலரும் விழுந்து, விழுந்து விவசாயம் செய்து கொண்டிருக்க... நான் மட்டும் அதை ஒரு விளையாட்டாகச் செய்வதைப் பார்த்து பலரும் பொறாமைப் படுவதுண்டு. ஆனால், அவர் களாலும் என்னைப் போல இருக்க முடியும். ஆனால், அவர்களுக்கு இன்னும் இயற்கை மீது நம்பிக்கை வரவில்லை. இப்போதுதான் ஒரு சில இளைஞர்கள் நான் சொல்லும் விதத்தில் விவசாயம் செய்யத் தொடங்கி உள்ளார்கள்" என்று பெருமையாகச் சொல்லும் ராஜூவுக்கு, இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'சவுத்ரி சரண்சிங் விருது' 2002-ம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பதின்மூன்றினை பெற்றிருக் கிறார் விவசாயம் மற்றும் விவசாய ஆராய்ச்சி தொடர்பான குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்திருக்கும் இவர், தற்போது 'இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில்' (ஐ.சி.ஏ.ஆர்), 'இயற்கை விவசாய வல்லுநர் குழு' உள்ளிட்ட மூன்று உயர் மட்டக் குழுக்களின் உறுப்பினராக இருக்கிறார். இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல இப்போது பத்மஸ்ரீ!

விருதுக்குக் காரணம் இரண்டு தமிழர்கள்!

"இது ஓரிரு நாளில் கிடைத்து விடவில்லை. 50 ஆண்டு காலமாக வயலிலேயே கிடந்ததற்கு கிடைத்திருக்கும் மரியாதை. இந்த விருது கிடைக்க இரண்டு தமிழர்கள் காரணம். முதல் நபர், பல கருத்தரங்குகளில், 'ராஜூவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வேண்டும்' என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன். அடுத்தவர், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். விவசாயி ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நடைமுறைப் படுத்திவிட்டார். 
ஆனால், விருது வழங்குவதற்கு முன்பு ஒரு குளறுபடி. விழா அழைப்பிதழில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் விருது வழங்கப்படுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதைக் கண்டவுடன் எனக்கு அதிர்ச்சி. வருத்தமாகவும் போய்விட்டது. உடனே அதிகாரிகளிடம் கேட்ட போது, பதிலுக்கு வருத்தம் தெரிவித்தவர்கள், மார்ச் 31-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் விருது கொடுக்கும்போது, 'விவசாயத் துறையில் சாதனை படைத்த ராஜூவுக்கு பத்மஸ்ரீ விருது' என்று அறிவித்தார்கள். மகிழ்ச்சி பொங்க மேடையேறி, விருதைப் பெற்றேன். அப்போது, 'குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலிடம், 'விவசாயம் என்பது நமது அடிப்படைக் கலாச்சாரம். அதை மறந்து விட்டால், மற்ற கலாச்சாரமெல்லாம் மறைந்து விடும்' என்றேன். ‘நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்னார் குடியரசுத் தலைவர்.

இனி, இது தொடர வேண்டும்!

விருதைப் பெற்றுக் கொண்டு கீழே வந்த பிறகு, 'ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இப்படி விருது கொடுக்கவேண்டும்' என்று அமைச்சர் களிடம் சொன்னேன். நான் மட்டும் சாதனை படைத்துவிடவில்லை. என்னைப் போல எத்தனையோ விவசாயிகள் சாதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதெல்லாம் வெளியில் தெரியாமலே இருக்கிறது. அதையெல்லாம் தேடிப் பிடித்து, அவர்களுக்கு உரிய மரியாதை செய்யவேண்டும். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது அதற் கொரு நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்" என்று ஆத்மார்த்தமாகச் சொல்லிவிட்டு, தன் வயலில் வளர்ந்து கிடக்கும் நெற்பயிரைத் தடவிக் கொடுத்தபடியே வயலுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தார் 70 வயது இளைஞர் கோரி பார்த்தி நரசிம்ம ராஜூ யாதவ்!

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றோம்!

சாதனையோ சாதனை!

ராஜூ கடந்த காலங்களில் விவசாயத்தில் புரிந்திருக்கும் சாதனைகள் ஒரு பார்வை...

'எம்.டி.யூ-1001' ரக நெல் - ஹெக்டருக்கு 15,250 கிலோ மகசூல்.

பாசுமதி நெல் - ஹெக்டருக்கு 10,500 கிலோ மகசூல்(1996 ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது)

கோடையில் டி-9 என்ற உளுந்து ரகம்- ஹெக்டருக்கு 18 குவிண்டல் மகசூல்.

டி.எம்.வி என்ற நிலக்கடலை ரகம்- ஹெக்டருக்கு 6,000 கிலோ மகசூல்.

100 ஆண்டுகள் வயதான ஒரு மா மரத்தில் 23 ஆயிரத்து 456 மாம்பழங்கள் (1996-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது)

ஒரு தென்னை மரத்தில் 1,132 தேங்காய்.

ஒரு ரோஜா செடியில் தினமும் 400 பூக்கள்.

ஒரு தக்காளிச் செடியில் 100-110 கிலோ விளைச்சல்.

இது ராஜூவின் சாதனை பட்டியலில் ஒரு சில துளிகள்தான். சாதனைகளின் பட்டியல் மற்றும் அவற்றுக்கான சான்றுகள் அவரின் சினிமா தியேட்டர் சுவர் முழுக்க அலங்கரித்துக் கொண்டுள்ளன. இதைப் பற்றி நம்மிடம் பேசிய ராஜூ, ''இதையெல்லாம் பார்த்து மலைத்துப் போகவேண்டாம். இதில் மாயமந்திரம் ஏதுமில்லை. யார் முயன்றாலும் முடியும். செய்வதையெல்லாம் ஒழுங்காக செய்து, அவற்றை தவறாமல் குறிப்பேடுகளில் பதிவு செய்துகொண்டே வந்தால், உங்களின் சாதனைகள் உங்களுக்கே புரியும்.

நான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் பெரிதாக ரகசியம் ஏதுமில்லை. என்றாலும், நான் அவற்றை சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவே உள்ளேன். ஆறு ரக நெல் விதைகள், பச்சைப் பயறு, கொள்ளு போன்றவற்றில் இரண்டுக்கும் மேற்பட்ட ரகங்கள் என்னிடம் உள்ளன. சக விவசாயிகள் கேட்கும்போது கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறேன். அது வியாபாரத்துக்காக அல்ல... நட்புக்காக" என்று சொன்னார்.
 

0 கருத்துரைகள்: