Thursday, 22 October 2009

யாரெல்லாம் படிக்கவேண்டும் விவசாயத்தை ?

யாரெல்லாம் படிக்கவேண்டும் விவசாயத்தை ?




பணிவோடு வேண்டுகிறேன்... கொஞ்சம் பெரிய கட்டுரையாக அமைந்து விட்டது. போதிய அவகாசம் இருக்கும்போது பொறுமையாக இதை படிக்க வேண்டுகிறேன் நன்றி!



இந்தியாவுக்கு இமயம் ஒரு பெருமை. இந்துமாகடல் ஒரு பெருமை. இனிய காதல் சின்னம் தாஜ்மஹால் ஒரு பெருமை. இன்னும் இருப்பன எல்லாமே பெருமை சேர்க்கின்றன. அத்துனை பெருமைகளையும் அடியோடு அழிக்க ஒரு சிறுமையும் உண்டு. எந்த ஒரு தேசத்திற்கும் ஒரு சின்னம் இருக்கும். ஒரு கொடி இருக்கும் தேசிய கீதம் இருக்கும். தேசிய பறவை இருக்கும். தேசிய மிருகம் இருக்கும். இந்தியாவுக்கு மட்டுமே தேசிய அவமானம் ஒன்று உள்ளது. அதுதான் அந்த பெருமைகள் அனைத்தையும் அடியோடு அழிக்கும் சிறுமை.



எந்த நாட்டிலும், வாழ்க்கை முறைகளையும் , வாழ்க்கை ஆதாரங்களையும் மேம்படுத்துவது "கல்வி"தான். இந்தியாவைப் பொருத்தவரை இதன் தேசிய அவமானமே இதன் கல்வி முறைதான். போதாகுறைக்கு "விவசாய நாடு "என்ற பெருமை வேறு. உழவுத்தொழில் என்பது ஒவ்வொருவரின் உடலோடு --- உயிரோடு – உணர்வோடு – உணவோடு --------தொடர்புகொண்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட தொழிலுக்கு இன்று என்ன மரியாதை இருக்கிறது? 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய வள்ளுவர் இறைவனுக்கு சமமாக மதித்து தொழப்படவேண்டியவன் உழவன் என்று எழுதியுள்ளார். அன்று உழவனுக்கு அந்த பெருமை சேர்த்தது அவன் செய்துகொண்டிருந்த உழவுத்தொழிலும், அதன் இறையான்மையும் அல்லவா?



அதே உழவுத்தொழிலைத்தானே இன்றும் உழவன் செய்துகொண்டிருக்கிறான். அந்த இறையாண்மை மிக்க தொழிலை இன்று யாருமே மதிக்காமல் இருக்க காரணம் என்ன?



ரேசன் கடைகளில் அரிசி விளைவதாகவும், சந்தைகள் காய்கறிகளைத் தருவதாகவும் , டிப்போக்களில் பால் சுரப்பதாகவும் பட்டணத்து குழந்தைகள் புரிந்து கொள்வதற்கு யார் பொறுப்பு? இதன் விளைவுகள்தானே இன்றைய விவசாயியின் கேவலமான நிலை? இத்தனைக்கும் காரணம் நமது கேவலமான கல்விமுறை அல்லவா? இந்தோனேசியா போன்ற சின்னஞ்சிறு நாடுகளிலெல்லாம் விவசாயத்திற்கு முதல் மரியாதையுண்டு. காரணம் அவர்களது கல்விமுறை அப்படி.



விவசாய நாடான இந்தியாவில் , ஒருவன் விவசாயத்தை எப்போது படிக்கிறான் ? +2 முடித்தபின் , மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ இடம் கிடைக்காத பட்சத்தில் , வேறு வழி இல்லாமல் , வேளாண் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்த பின்னரே விவசாயம் படிக்கிறான். தெளிவாகக் கூறுவதானால், "தலைவிதியே " என்றுதான் இத்திரு நாட்டில் ஒருவன் விவசாயம் படிக்கிறான். அங்கேயும் இன்று வரை இரசாயன வேளாண்மைதான் கற்பிக்கப்படுகிறான். அப்படி இல்லாமல் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தோ அல்லது அதன் பலன்களை மேம்படுத்தவோ அல்ல. பாடம் சொல்லித்தரும் "புத்தக அறிவு " பேராசிரியர்களுக்கு போதுமான அனுபவ அறிவு உள்ளதா என்பதும் சந்தேகமே. எல்லாமே ஒரு மூடு மந்திரமாகவே இருக்கிறது.



இந்தோனேசியா போன்ற நாடுகளில் முதல் வகுப்பு துவங்கி பள்ளி இறுதி வகுப்பு வரை , ஒவ்வொரு மாணவனும் விவசாயம் படித்தாகவேண்டும். கல்லூரிக்கு சென்றபின் அவரவர் விருப்பப்பட்ட பட்டப்படிப்பு படித்துக் கொள்ளலாம். இதனால் பட்டணத்து குழந்தைகளின் மனதில் விவசாயம் பற்றி ஒரு நல்ல எண்ணம் உருவாவதோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். எனவே விவசயத்தையும் விவசாயியையும் அவர்கள் மதிக்கிறார்கள். மற்ற தொழில்களெல்லாம் புத்தி கூர்மையும் சுறுசுறுப்பு உள்ளவர்களும் செய்யவேண்டிய தொழில், விவசாயம் மட்டும் எழுதப் படிக்கத்தெரியாத த்ற்குறிகளும் மந்த புத்தி உள்ளவர்களும் செய்ய வேண்டிய தொழில் – என்கின்ற எழுதப்படாத சட்டம் இந்த நாட்டில் நிலவுவது எல்லோருக்கும் தெரியும் . சமுதாய பயிர் நிலத்தில் விஷ விதைகள் தூவப்பட்டால் அறுவடையாகும் வருங்கால இளைய சமுதாயம் எவ்வாறு வடிவமைக்கைப்படும். கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் கெளரவமாக வாழ இன்றைய விவசாயியினால் முடியுமா என்று சிந்திக்க்த் துவங்கிவிட்டார்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நமது இளைஞர்கள்.அதுமட்டுமல்ல. வாய்ப்புக்கள் உங்களை தேடி வந்தால் நீங்கள் அதிஷ்டசாலி, நீங்கள் வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டால் நீங்கள் புத்திசாலி ---என்ற பழமொழியை புரிந்துகொண்டு கம்யூட்டர் பக்கம் அடியோடு சாய்ந்துவிட்டனர்.



கல்லூரிகளில் பின்னாளில் சட்டம பொறியியல், மருத்துவம் அல்லது பொருளாதாரம் படிக்கப் போகும் ஒருவனுக்கு எதற்காக விவசாயத்தை கட்டாய பாடம் ஆக்கவேண்டும் ? என்பது நியாயமான கேள்வியாகத் தெரியலாம் வெவ்வேறு தொழில் செய்பவர்களுக்கு விவசாய அறிவு என்ன பலனைத் தந்துவிடும் என்பதை அறிய ஒரு சிறு முயற்சி செய்து பார்ப்போம். ஒரு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை முடித்தபின் வீடு திரும்பும்போது மருந்துபட்டியலை மறவாமல் கொடுக்கும் டாக்டர் "இனிமேல் இதை இதை எல்லாம் நீங்கள் சாப்பிடக் கூடாது "என்று ஒரு பட்டியலையும் தருகிறார். மருத்துவரான அவர் சப்பிட்டுக் கொண்டிருக்கும் பொருட்களில் எதை எதைத் தவிர்த்தால் , அவர் இன்னும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது அவருக்கே தெரியாது.( அத்துனை விஷங்களை ஒவ்வொரு டாக்டரும் தினமும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்) கிணறு ஒன்று வெட்டி பாம்பேரி அமைத்து பைப்லைன்போட ஒரு இஞ்சினியரை உதவி கேட்கிறோம். அதுமட்டுமல்ல அறுவடை இயந்திரங்கள், அறுவடைக்குப் பின் விளை பொருட்களை பதப்படுத்த அல்ல்து மதிப்பூட்ட தேவையான இயந்திரங்கள,குளிர்சாதன குடோன்கள் வடிவமைப்பவரும் அவர்தான்.அந்த இஞ்சினீயருக்கு விவசாய அறிவுஇருந்தால் அவரது ஈடுபாடு அர்த்தம் மிகுந்ததாக இருக்கும் அல்லவா?



ஒரு தோட்டத்தில் பயிர் கடனோடு பல பராமரிப்பு வேலைகளுக்கான கடன் பெற்று வேலைகள் செய்ய ஒரு வங்கியை அனுகுகிறோம். மானேஜர் புராஜெக்ட் போட்டு வரும்படி கேட்கிறார். உடனே ஒரு ஆடிட்டரிடம் ஓடுகிறோம். அவர் படித்ததோ M com அல்லது M C A அவர்தான் பயிர் கடன் முதலான புராஜெக்டை தயாரித்து தருகிறார் ஆடிட்டரிடம் வாங்கிக்கொண்டுபோய் மனேஜரிடம் கொடுக்கிறோம் அவரும் Mcom அல்லது MCA படித்துவிட்டு அக்ரி டிவிசனில் வேலை பார்ப்பவர். கரும்பையோ நெல்லையோ கண்ணில் பார்த்தே இராதவர்தான் விவசாயத்துக்கு லோன் தருகிறார். ஒரு வ்க்கீல் கோட்டில் "Food Poison " பற்றி கேஸ் நடத்துவார். அவருக்கு உணவைப்பற்றியும் அதிலிருக்கும் எஞ்சிய நஞ்சு பற்றியும் இம்மியளவும் தெரியாது.ஆனால் Food Poison கேஸ் நடத்துவார்.



ஒரு மாவட்ட ஆட்சி தலைவரை எடுத்துக் கொள்வோம் விவசாயிகள் குறை தீர்ப்பு நாளை மாதந்தோறும் சந்திக்கிறார். அவர் படித்து வந்த கல்வி ஏணி என்னவென்று பார்த்தால் B A ( Economics)-- M A ( Sociology ) --- I A S என்று இருக்கும். அவருக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இருக்காது. 15 நாள் அல்லது 1 மாதம் பயிற்சியில் கிடைத்த " விவசாய அறிவை "வைத்துத்தான் அவர் ஒருமாவட்டத்தின் விவசாயப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவேண்டும். கால்நடை மருத்துவ அதிகாரியாக இருந்தால்கூட தீவனப் பயிர்கள் பற்றியும் அவை விளைவிக்கப்படும் முறைகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நன்மை தராதா? வனத்துறை அதிகாரியாக ஒருவர் நாளை வருவதாக வைத்துக்கொண்டாலும் அவருக்கு வேளாண்மை அறிவு தேவைப்படாத ஒன்றா? ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவோ அல்லது நிரூபராகவோ ஒருவர் எதிர்காலத்தில் மிளிர்வதாக வைத்துக்கொண்டாலும் அவருக்கு விவசாயம் பற்றிய அறிவு பேருதவி புரியாதா?



தொழில் துறைகளை விட்டு விட்டு கலைத்துறைகளைக் காண்போம். ஒரு கவிஞன்" பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை " என்று எழுதுகிறார். விவசாய அனுபவம் அவருக்கு இருக்குமானால் இன்னும் எத்தனை ஆசைகளை வெளியிட்டிடருப்பாரோ? ஒரு ஓவியர் பூ வரைகிறார். புழு பூச்சிகளை வரைகிறார் அந்த பூச்சிகளினால் பூவுக்கு ஏற்படும் சேதத்தையும் வரைகிறர். அவரது கற்பனைத்திறனோடு விவசாய அறிவும் சேர்ந்தால் பாலும் தேனும் கலந்ததுபோல் ஆகாதா?



நடைமுறை வாழ்க்கையில் ஒரு பஸ் கண்டக்டரை எடுத்துக்கொள்வோம் சில நேரங்களில் காய்கறி கூடைகளை ப்ஸ்ஸில் ஏற்ற அவர் சம்மதிப்பதில்லை. அவருக்கு மட்டும் அந்த காய்கறிகளை விளைவிக்க ஒரு விவசாயி பட்ட கஷ்டங்கள் தெரியுமானால் நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவார். ஹோட்டல் நடத்துவோர், வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வோர் , பழங்களிலிருந்து ஜாம் ஜல்லி தயாரிக்கும் ஒரு ஆலை அதிபர் முதல் கருப்பட்டி , கரும்பு சர்க்கரை தயாரிப்பவர் வரை வேளாண்மை அறிவை வளர்த்துக்கொள்வது தரத்தின் மேம்பாட்டை உறுதிசெய்யாதா? மண்ணில் விளையும் உணவை உண்ணும் ஒவ்வொருவருக்கும் பயிர் விளைசல் பற்றிய அறிவு அவசியம் இருந்தாகவேண்டும். இதனால்தான் இந்தோனேசியா, கியூபா போன்ற நாடுகளில் +2 வரை "விவசாயம்" ஒரு கட்டாய பாடம் ஆக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பதேகூட விதைப்பு மற்றும் அறுவடை காலங்களை கணக்கிட்டுத்தான். விடுமுறை நாட்களில் மாணவர்கள் விவசாய வேலைகளில் ஈடுபடவேண்டும் என்பதும் , அவர்கள் பிற்காலத்தில் எந்த தொழிலுக்கு சென்றாலும் அவர்கள் பெற்ற விவசாய அறிவு ஏதேனும் ஒருவகையில் பயன் அளிக்கும் என்பதாலும் இதனை நடைமுறைப் படுத்தி உள்ளனர்.நம் நாட்டில் கோடை விடுமுறையை டிவி யில் கிரிகெட் பார்த்தும், விளையாடியுமே கழிக்கிறார்கள் கல்வி முறையில் பெரும் மாற்றம் வரப்போகிறது என்ற குரல் பல ஆண்டுகளாகவே இந்தியாவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி அது உண்மையாகும் வேளையில் , அந்த மாற்றம் செய்யும் அதிகாரம் படைத்தவர்களுக்கு இந்தக்கருத்து மனதில் பட்டால் நல்லது.
 
நன்றி
    பசுமை மிகு . மதுராமகிருஷ்ணன்

0 கருத்துரைகள்: