Friday, 2 October 2009

இரசாயன விவசாயிகள் விஷத்தைதான் விளைவிக்கிறாங்க!

விஷத்தைதான் விளைவிக்கிறாங்க!

வர்றாரு வல்லுநரு

"எட்டு மாசம் சிரமப்பட்டா.... எண்பது வருஷத்துக்கு வருமானம் பார்க்கலாம்!"

உங்க பொருளுக்கு நீங்களே சந்தையை உருவாக்கணும்.

பாத்தி முறை காய்கறிக்கு சொட்டுநீர், தெளிப்புநீர் நல்லாவே கைகொடுக்கும்.

வெண்டைக்கு விலை யில்லனா, வத்தலாக்கி விக்கலாமே.


ஒரு மாட்டோட கழிவுகளை வெச்சி வருஷத்துக்கு 80 டன் கம்போஸ்ட் தயாரிக்கலாம். 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

"எங்களுக்கு எட்டரை ஏக்கருல விவசாயம். வாழை, முருங்கை, காய்கறி பயிர் செய்றோம். இன்னிய தேதி வரைக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்தித்தான் விவசாயம் பாக்குறோம். பசுமை விகடனை தொடர்ந்து படிச்சிக்கிட்டே வர்றதால இயற்கை விவசாயத்துக்கு மாறணுங்கிற எண்ணம் மனசுல இருக்கு. அதுக்கு வல்லுநர் ஆலோசனை தேவை"

- விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், லட்சுமி இப்படி நமக்கு கடிதம் எழுதியிருந்தார். 
இதைப் படித்ததுமே திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த 'முன்னோடி இயற்கை விவசாயி' கோமதிநாயகம் நம் நினைவுக்கு வர, விஷயத்தை அவரிடம் சொன்னோம். ஆலோசனை சொல்வதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டார்.

கோமதிநாயகம்... தமிழகத்தில் இயற்கை விவசாயம் அவ்வளவாக முளைவிடாத 1980. அப்போதே அதில் கால்பதித்து வெற்றிகண்ட வெகு சிலரில் குறிப்பிடத்தக்கவர். அன்றிலிருந்து அணுவளவும் அதிலிருந்து மாறாமல் இயற்கைப் பாசத்தோடு வேளாண்மையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவர், தென் மாவட்டங்களில் இன்றைக்கு உருவாகியிருக்கும் பல்வேறு இயற்கை வேளாண்மை பண்ணைகளுக்கு அஸ்திவாரம் போட்டவர்.


அத்தகையதொரு வல்லுநருடன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் (சிங்கம்மாள்புரம்) இருக்கும் லட்சுமியின் தோட்டத்துக்குச் சென்றோம். லட்சுமியின் கணவர் சரவணன் அங்கே நமக்காக காத்திருந்தார்.

''இது எங்க மாமனார் வீட்டுத் தோட்டம். அவங்களால பராமரிக்க முடியாம விலைக்கு கொடுக்கப்போனாங்க. நான் வாங்கிட்டேன். விவசாயம் எங்க குலத்தொழில். ஆனா, படிப்ப முடிச்சதும் நகராட்சி கான்ட்ராக்ட், கழிவுப் பஞ்சு வியாபாரம்னு தொழில் செய்ய ஆரம்பிச்சிட்டேன். அதுல வருமானத்துக்கு வஞ்சகமில்ல. ஆனாலும் விவசாயம் செய்யாம இருக்கறதால ஏதோ ஒண்ண இழந்துட்ட உணர்வு உள்ளுக்குள்ள இருந்திச்சி. அப்ப இந்த தோட்டம் விலைக்கு வரவும் வாங்கிட்டேன். இதை வாங்கி அஞ்சி வருஷமாச்சி. இங்க வந்து போக ஆரம்பிச்சதும் இழந்த சந்தோஷத்தைத் திரும்பவும் அடைஞ்ச மாதிரி உணர்ந்தேன். அதிலிருந்தே மத்த தொழிலையெல்லாம் குறைச்சிக் கிட்டு, விவசாயத்துல தீவிரமா இறங்கிட்டேன். இதுல எனக்கு பெருசா வருமானம் வராட்டியும் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. இதுக்கு நடுவுல 'பசுமை விகடன்' படிச்ச என் வீட்டம்மா... இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு சொல்லிக் கிட்டிருக்காங்க.
மொத்தம் எட்டரை ஏக்கர். ஒரு ஏக்கர்ல வாழை, மா, தென்னை, முருங்கைனு நாலு பயிர் இருக்கு. மூணு ஏக்கர்ல வாழை, மூன்றரை ஏக்கர்ல மா, முருங்கை, 50 சென்ட்ல எலுமிச்சை, 20 சென்ட்ல வெண்டை இதெல்லாம் இருக்கு. மீதி 30 சென்ட் சும்மா கிடக்கு" என்று அறிமுகப் படலத்தை முடித்தவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

''மா இப்பந்தான் முதல் மகசூலுக்கு வருது. தென்னையை நட்டு ரெண்டு வருசமாச்சி" என்று சொன்ன சரவணனிடம்,

''தென்னையும் மாவும் பக்கத்துல இருக்கக் கூடாது!"

''தென்னைக்கு அதிகமா தண்ணி தேவைப்படும். மாமரத்துக்கு குறைச்சலா இருந்தா போதும். ரெண்டையும் பக்கம் பக்கமா நட்டதால ஏதாவது ஒரு பயிருக்கு பாதகம் வர வாய்ப்பிருக்கு. அதனால வாய்க்கால் பாசனத்தை விட்டுட்டு சொட்டுநீர் போடுறது நல்லது. இன்னிக்கு இருக்கற தண்ணி பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறைக்கு இதுதான் சரிப்பட்டு வரும். அதுமட்டுமில்ல... தேவைக்கு அதிகமா தண்ணிய கொடுத்தாலும் மகசூல் பாதிக்கும். பாசனத்தை நவீனப்படுத்தாம விவசாயத்துல வெற்றிங்கறது கஷ்டம்" என்று வல்லுநர் கோமதிநாயகம் சொல்ல... கவனமாகக் கேட்டுக்கொண்ட சரவணன், அடுத்து, முருங்கை வயலுக்கு அழைத்துச் சென்றார்.

மாமரங்களுக்கு இடையில் பி.கே.எம்-1 ரக முருங்கை நடவு செய்திருக்கிறார். ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த பீர்க்கன் மகசூல் ஓய்ந்த நிலையில் இருந்தது.

தரையை நன்றாக உற்றுப்பார்த்த வல்லுநர், ''வளமில்லாத மண்ணு. ஆனா இதுல முருங்கை நட்டது நல்ல யோசனை. பீர்க்கன் மகசூல் எப்படி யிருந்திச்சி?" என்று கேள்வியைப் போட்டார்.

''செஞ்ச, செலவுக்கு மோசமில்லாம காய்ச் சிடுச்சி..." என்று பதில் தந்த சரவணன், ''வளமில் லாத மண்ணுனு சொல்றீங்க. வளமாக்குறதுக்கு என்ன செய்யலாம்?" எனக்கேட்டார்.

"இந்த நிலத்துலயே அங்கங்க, கொழிஞ்சி செடிக இருக்கு. அதோட விதைகளை நிலம் முழுக்க விதைச்சி, பூ எடுத்ததும் மடக்கி உழுது போடணும். மறுபடியும் கொழிஞ்சியை விதைச்சி மூடாக்கா பயன்படுத்தினா நல்ல பலன் இருக்கும். கொழிஞ்சி இலைங்க சூரியஒளியை நல்லா அறுவடை செய்றதோட, இலையெல்லாம் நிலத்துல விழுந்து நுண்ணுயிருங்களுக்கு உணவா மாறிடும். இதோட சேர்த்து பலதானியத்தையும் விதைக் கலாம். இப்படி செஞ்சா மண்ணு மறுபடியும் வளமாயிடும்" எனச் சொன்ன கோமதிநாயகம்,

முருங்கைக்கு மீன்அமிலம்!

 


 

 

''முருங்கைக்கு மீன்அமிலத்தை அடிச்சா நல்லா காய்க்கும். கடையநல்லூருல இருக்கற முஸ்லீம் வீடுகள்ல இருக்கற முருங்கை மரங்க, நல்லா காய்ச்சித் தொங்கும். இதுக்கு காரணமே, மீன் கழுவுற தண்ணியை மரங்களுக்கு ஊத்துறதுதான்" என்று ஆச்சர்யத் தகவல் ஒன்றைப் போகிற போக்கில் தட்டிவிட்டார். கூடவே, மீன்அமிலம் தயாரிக்கும் முறைகளைப் பற்றி வெகு எளிமையாக அவர் விவரிக்கவும் சரவணனின் முகத்தில் ஏக மகிழ்ச்சி!

‘'நிலத்தோட வேலி பக்கத்துல எந்த மரத்தையும் வைக்காம இருக்கீங்க. அதனால காற்றரிப்பு அதிகமா இருக்கும். பலமா வீசுற காத்து, இலையில இருக்கற ஈரத்தைக்கூட எடுத்துட்டுப் போயிடும். அதனால வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வாகை, பூவரசு மரங்களை ஓரத்துல வைங்க. வறட்சியைத் தாங்கி வளர்ற, நிழலடிக்காத மரங் களையும் வளக்காலம்" என்று சொல்லிவிட்டு நடந்த கோமதிநாயகம், பூத்துக்குலுங்கிக் கொண்டி ருந்த மாமரம் ஒன்றின் அருகில் போய் நின்றார்.

"இது முதல் தடவையா பூக்குது" என்று மகிழ்ச்சி பொங்க சரவணன் சொல்ல...

உடனே, "முதல்ல வர்ற பூவை உருவிவிட்டுட்டா, அடுத்த வருஷம் வேகமா காய்க்கும்" என்று நறுக்கான ஆலோசனை ஒன்றைச் சொல்லிவிட்டு, எலுமிச்சை தோட்டத்துக்கு நகர்ந்தார் வல்லுநர். 

எலுமிச்சைக்கு ஏத்த மண்ணு இது கிடையாது!

''இந்த மண்ணுல எலுமிச்சை நல்லா வராது. அதுமட்டுமில்லாம எலுமிச்சை செடிங்க மத்த மரங்கள் மாதிரி நெடுநெடுனு வளரக்கூடாது. கூடாரம் மாதிரி இருக்கணும். எலுமிச்சையில எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறதால சொல் றேன்... இந்த எலுமிச்சை எல்லாத்தையும் எடுத்து டுங்க. இதை காய்க்க வைக்கறதுக்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கும். அதனால கிடைக்கற பலன் ரொம்பக் குறைவா இருக்கும்" என்று அழுத்தம் கொடுத்து வல்லுநர் சொன் னதைக் கவலையுடன் கேட்டுக் கொண்டார் சரவணன்.

கடைசியாக போய் நின்ற இடம் வெண்டை தோட்டம். ''காய்கறி விவசாயத்துலதான் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால காய்கறிகளை இன்னும் எப்படி சிறப்பா செய்றதுனு சொல்லுங்களேன்?" என்று கேட்டார் சரவணன். 

விஷத்தைதான் விளைவிக்கிறாங்க! 

''இப்ப பெரும்பான்மையான விவசாயிங்க செஞ்சிக்கிட்டிருக்கறது காய்கறி விவசாயமே இல்லை. காய்கறி விஷம்னுதான் சொல்லணும். விஷத்தைப் போட்டு விளையவச்சி மனித சமுதாயத்துக்கே விஷத்தைக் கொடுத்து கிட்டிருக்காங்க. முப்பது, நாப்பது வருஷமா தெளிக்க ஆரம்பிச்ச விஷத்தோட விளைவுதான் சிசேரியன், செயற்கை கருவூட்டல் மையங்கள், சத்துக் குறை பாடுனு பல ரூபத்துல பல் இளிக்குது" என்று ஆவேசமான கோமதிநாயகம், தனக்குத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ''வாங்க, உக்காந்து பேசலாம்" என வேப்பமரத்து நிழலில் ஐக்கியப் படுத்தினார்.

''காய்கறிங்கறது உணவு சம்பந்தமானது. அதனால இயற்கை முறையில்தான் அதைச் செய்யணும். நிலத்தை நல்லா உழுது, அஞ்சடி அகலம், மூணடி உயரம், பன்னிரண்டு அடி நீளத்துல மேட்டுப் பாத்தி அமைக்கணும். உங்க வசதியைப் பொறுத்து நீளத்தை வச்சிக்கிடலாம். பண்ணையில கிடைக்கிற கழிவு, இலை, தழைக எல்லாத்தையும் மேட்டுப் பாத் தியில போட்டு மக்க வைங்க. நல்லா மக்குனதும் அதைக் கிளறிவிட்டு, இன்னும் கொஞ்சம் கழிவைப் போட்டு மக்க வைங்க. இப்படியே மூணு முறை செய்யணும். இதுக்கு எட்டு மாசம் ஆகும். சிரமத்தைப் பாக்காமா ஒரு தடவை செஞ்சிட்டா, அதுக்கு பிறகு எம்பது வருசம் வரைக்கும் உங்களுக்கு அங்க, அறுவடையை தவிர வேறெந்த வேலையும் இருக்காது.

இப்படி பாத்தி தயாராகுற எட்டு மாச இடைவெளியைப் பயன்படுத்தி, இரண்டு மேட்டுப்பாத்திக்கு இடையில இருக்கிற பள்ளத்துல பசுந்தாள் உரச் செடிகளை விளைய வச்சி, பூத்ததும் பிடுங்கி, பாத்தி மேலேயே போட்டு மக்க வைக்கலாம். இப்படி பாத்தி முறையில காய்கறி செய்யுறதுக்கு சொட்டுநீர் இல்லனா தெளிப்புநீர்ப் பாசனம் நல்லாவே கைகொடுக்கும். சொட்டுநீர் போட்டுட்டா தண்ணி கட்ட, களை எடுக்க ஆள் தேவைப்படாது. செலவைப் பாக்காம ஒருதடவை செஞ்சிட்டா, காலத்துக்கும் கவலையில்லை.

பாத்தி தயாரானதும் அதுல தேவையான காய்களை நடவு செய்யலாம். அறுவடை முடிஞ்சதும் செடியைப் பிடுங்கி பாத்தி மேலயே போட்டுட்டு, அடுத்த தடவை செய்யலாம். இதுக்கு பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் இதையெல்லாம் பயன்படுத்திக்கலாம். ஆனா, நான் சொன்ன மாதிரி பாத்தியைத் தயார் பண்ணிட்டா... அதுக்கு சாணம் உட்பட எந்த இடுபொருளுமே தேவைப்படாது. இயற்கை முறையில விளையிற காய்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்’’ என்றவர், 
 

ஏக்கர் கணக்குல போட்டு ஏமாறாதீங்க!

 

''இதுல முக்கியமான விஷயம் விளைவிக்கிறதை விட, விக்கிறதுதான். காய்கறி விவசாயிக தோத்துப்போறதே விலையிலதான். உங்க பொருளுக்கு நீங்களே சந்தையை உருவாக்கணும். அதோட மதிப்புக் கூட்டப்பட்ட பொருளா மாத்தணும். வெண்டைக்கு விலையில்லனா, ஏன் கீழே கொட்டணும். அதுக்குப் பதிலா வத்தலாக்கி விக்கலாமே. இதே முறையை கத்திரி, சீனிஅவரைனு எல்லாத்துலயும் செய்யலாம். விலையைப் பொறுத் தவரைக்கும் கவர்மெண்ட்ல ஆரம்பிச்சி யாரையும் நம்பக்கூடாது. நம்ம பொருளுக்கு நாமதான் சந்தையை ஏற்படுத்தணும். இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருளுக்கு இன்னிக்கு மக்கள் மத்தியில வரவேற்பு வந்துகிட்டிருக்கு. அதைப் பயன்படுத்திக்கிடணும். காய்கறி நடவுக்கு முன்னாடியே உங்களுக்கு தெரிஞ்சவங்க, ஊர்க்காரங்கனு வாங்கும் திறன் உள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இருபது பேர்கிட்ட பேசி, அவங்களுக்கு என்ன காய், எவ்வளவு தேவைனு தெரிஞ்சுகிட்டு, தேவையான அளவு மட்டும் உற்பத்தி செய்யுங்க. ஏக்கர் கணக்குல போட்டு விலையில்லாம ஏமாறுறதை விட, அளவா போட்டு வருமானத்தை பாக்குறதுதான் புத்திசாலித்தனம்.

மேட்டுப் பாத்தி போடுறப்ப, காய்கறி போட்டது போக, மிச்சமிருக்க இடத்துல, கீரையை தூவிவிட்டா ஏகப்பட்ட கீரை கிடைக்கும். இதை உங்க வாடிக்கை யாளர்ங்களுக்கு கம்மியான விலையில... இல்லனா இலவசமா கொடுத்தா, அவங்க உங்களை விட்டுட்டு வேற எங்கயும் வாங்கமாட்டாங்க. உங்க பொருளுக்கு நீங்க விலை வைக்கிறப்ப, உற்பத்தியிலிருந்து விற்பனை வரைக்குமான செலவு, உங்க லாபம் இத்தனை சதவிகிதம்னு வச்சி பொருளை விக்கலாம். இது நடைமுறையில கஷ்டம் மாதிரி தோணும். ஆனா, முயற்சி செஞ்சி பாருங்க. வெற்றி கிடைக்கும்" என்று சொன்ன கோமதிநாயகம்,

''மொத்த விவசாயத்துக்கும் சேத்து, ரசாயனத்துக்காக வருஷம் எவ்வளவு செலவு செய்றீங்க?" என்று கேட்டார்.

"நான் சரியா கணக்கு வச்சிக்கிறதில்ல. எப்படி இருந்தாலும் இருபதாயிரத்துக்குக் குறையாது" என்றார் சரவணன்.

''இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு சொல்றீங்க. அப்ப மாடு கண்டிப்பா வேணும். நீங்க ரசாயனத் துக்காக ஒரு வருஷத்துக்கு செலவு செய்ற இருபதாயிரத்துல நாட்டு மாடு வாங்குங்க. அது உங்க தோட்டத்துக்கு தேவையான எல்லாத்தையும் கொடுக்கும்" என்றார்.

இதைக்கேட்டதும் சட்டென்று துள்ளிய சரவணன், ''மாடுகளை வாங்கி பால்பண்ணை வைக்கணும்னு ரொம்ப நாளாவே யோசிச்சிக்கிட்டிருந்தேன். இப்ப உடனே அதை கையில எடுத்துட்டா... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..." என்றார். 
 

பாலுக்கு மாடா... உரத்துக்கு மாடா!

 


 

 

ஆனால், ''பாலுக்காக மாட்டை வளத்தா உங்களுக்கு நஷ்டம்தான் வரும். இன்னிக்கு பால் விக்கிற விலை கட்டுப்படியாகாது. ஒரு மாடு பால் கறக்குறப்ப, மொத மூணு மாசம்தான் நல்லா கறக்கும். அதுதான் லாபமான நேரம். மூணாவது மாசம் சினைக்கு சேத்துடுவோம். அதனால படிப்படியா பால் கொறையும். அப்பறம் வரவுக்கும், செலவுக்கும் சரியாயிருக்கும். கன்னு ஈனுறதுக்கு முன்னாடி கடைசி மூணு மாசத்துக்கு மாடு சும்மாதான் நிக்கும். மொத மூணு மாசத்துல கிடைச்ச வருமானம் மொத்தமும், இந்த மூணு மாச தீவனத்துக்கே போயிடும். அதனால பால்ல பெருசா வருமானம் கிடைக்காது.

அதேசமயம் ஒரு மாடு மட்டுமிருந்தா, அதோட கழிவுகளை வெச்சி (வேளாண் பண்ணையில் கிடைக்கும் பிற கழிவுகளையும் சேர்த்து) வருஷத்துக்கு 80 டன் கம்போஸ்ட் தயாரிக்கலாம். ஒரு டன் 200 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலும் வருசத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதை விக்கிறதும், நம்ம இடத்துல பயன்படுத் துறதும் நம்ம தேவையைப் பொறுத்தது" என்று சொன்ன கோமதிநாயகம், ''மாடு வளக்குறதுக்கு முன்னாடி அதுக்குத் தேவையான பசுந்தீவனத் தையும் வளக்க ஆரம்பிங்க. இயற்கை முறையில காய்கறியை உற்பத்தி செஞ்சி, அதை விக்க முடியலைனா என்கிட்டே சொல்லுங்க. நானே விற்பனைக்கு ஏற்பாடு செஞ்சித் தர்றேன். அதோட எந்த சந்தேகம் இருந்தாலும், என்கிட்டே கேளுங்க. நீங்க செய்யப் போற இயற்கை விவசாயம் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்றபடி விடைபெற்றார்.

''இனி, இயற்கை விவசாயம்தான்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன். உடனே நாட்டுமாட்டை வாங்கி விவசாயத்தைப் புதுசா தொடங்கப் போறேன். மொத வேலையா சொட்டுநீர் அமைக்கப்போறேன். இப்படியெல்லாம் நான் முடிவெடுக்கறதுக்காக என் வயலுக்கே வந்த வல்லுநருக்கும்... அழைச்சிட்டு வந்த பசுமை விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல’’ என்று உருகினார்.
 
 
 

Thanks Pasumai vikatan


0 கருத்துரைகள்: